இதுதான் ட்விஸ்ட்.. அமெரிக்காவில் கமலா தான் லீட்! ஆனாலும் டிரம்ப் வெல்லவே வாய்ப்பு அதிகம்! அது எப்படி
வாஷிங்டன்: அமெரிக்காவில் அதிபர் தேர்தல் அடுத்த வாரம் நடக்கும் நிலையில், இதில் டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோர் களத்தில் உள்ளனர். தேர்தலுக்கு ஒரு வாரம் மட்டுமே இருக்கும் நிலையில், இப்போது அங்கே கள சூழல் எப்படி இருக்கிறது என்பதை விவரிக்கும் வகையில் சில சர்வே முடிவுகள் வெளியாகியுள்ளன. அது குறித்து நாம் பார்க்கலாம்.
உலக வல்லரசான அமெரிக்காவுக்கு யார் அதிபர் என்பது இன்னும் ஒரு வாரத்தில் தெரிந்துவிடும். அங்கு அடுத்த வாரம் அதிபர் தேர்தல் நடக்கும் நிலையில், ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ், குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் களத்தில் உள்ளனர்.

வாக்குப்பதிவுக்கு ஒரு வாரம் மட்டுமே இருக்கும் நிலையில், அங்குப் போட்டி மிகக் கடுமையாக இருக்கிறது. இரு வேட்பாளர்களும் மிகத் தீவிரமான பிரச்சாரத்தில் உள்ளனர்.
சர்வே முடிவுகள்: தி ஹில் என்ற அமைப்பு நடத்திய கருத்துக்கணிப்பில் கமலா ஹாரிலுக்கு 48.6% ஆதரவு இருக்கிறது. மறுபுறம் டிரம்பிற்கு 47.9% ஆதரவு இருக்கிறது. 270டூவின் என்ற அமைப்பு நடத்திய சர்வேயில் கமலா ஹாரிஸுக்கு 48.3% ஆதரவும் டிரம்பிற்கு 47.3% ஆதரவும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதேபோல பைதியெட்டிஎய்ட் என்ற அமைப்பு நடத்திய சர்வேயில் கமலா ஹாரிஸுக்கு 48% ஆதரவு இருக்கிறது. அதேபோல டிரம்பிற்கு 46.6% ஆதரவு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போட்டி கடுமையாக இருக்கும் நிலையில், ஒட்டுமொத்தமாக அமெரிக்காவில் பார்க்கும் போது கமலா ஹாரிசுக்கு சற்று முன்னிலை இருக்கிறது. ஒட்டுமொத்தமாக எல்லா சர்வேக்களின் சராசரியை எடுத்துப் பார்க்கும் போது கமலா ஹாரிஸுக்கு 48% ஆதரவு இருக்கிறது. மறுபுறம் டிரம்பிற்கு 47% ஆதரவு இருக்கிறது.
இழுபறி மாகாணங்கள்: ஒட்டுமொத்த சர்வே இப்படியாக இருந்தாலும் அமெரிக்காவைப் பொறுத்தவரை இழுபறி மாகாணங்களில் யார் வெல்கிறார்கள் என்பதே முக்கியம். இந்த ஏழு இழுபறி மாகாணங்களில் யார் வெல்வார்கள் என்பதைப் பொறுத்தே எப்போதும் அதிபர் தேர்தலில் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்படும். இந்த ஏழு இழுபறி மாகாணங்களில் டிரம்ப் கை தான் ஓங்கி இருக்கிறது.
நெவாடா, பென்சில்வேனியா, வட கரோலினா, ஜார்ஜியா, அரிசோனா மாகாணங்களில் டிரம்ப் முன்னிலையில் இருக்கிறார். இந்த மாகாணங்களில் டிரம்பின் வாக்கு வங்கி 1 முதல் 2% வரை முன்னிலையில் இருக்கிறார். மறுபுறம் மிச்சிகன் மாகாணத்தில் மட்டும் கமலா ஹாரிஸ் முன்னிலையில் இருக்கிறார். விஸ்கான்சின் மாகாணத்தில் மட்டும் இரு தரப்பும் சமமாக இருக்கிறது.
ஏன் முக்கியம்: இது ரொம்பவே கவனிக்கத்தக்கக் கருத்துக்கணிப்பு முடிவுகளாக இருக்கிறது. என்ன தான் ஒட்டுமொத்தமாக நடத்தப்பட்ட சர்வேயில் கமலா ஹாரிஸ் சற்று முன்னிலையில் இருந்தாலும் இழுபறி மாகாணங்களில் டிரம்ப் கை தான் ஓங்கி இருக்கிறது. கருத்துக்கணிப்புகளில் கூறப்பட்டதை போல ஒருவேளை இழுபறி மாகாணங்கள் அனைத்தும் டிரம்ப் பக்கம் வந்தால் அவர் எளிதாக அதிபர் தேர்தலில் வெல்லலாம். கடந்த 2016இல் டிரம்ப் அதிபரான போதும் கிட்டதட்ட இதுவே தான் நடந்தது குறிப்பிடத்தக்கது.
கடும் போட்டி: அமெரிக்க அதிபர் தேர்தலில் முதலில் பைடன் மற்றும் டிரம்ப் போட்டியிடுவதாக இருந்தது. அப்போது டிரம்பிற்கு மிகப் பெரிய ஆதரவு இருந்தது. அதேநேரம் பைடன் விலகி கமலா ஹாரிஸ் உள்ளே வந்ததும் நிலைமை மொத்தமாக மாறியது. டிரம்பிற்கான ஆதரவு குறைந்து கமலா ஹாரிஸ் ஆதரவு அதிகரித்தது. ஆனால், தேர்தல் நெருங்க நெருங்கப் போட்டி கடுமையாகியுள்ளது. கடைசி நேரத்தில் அடிப்படி தான் எப்போதும் டிரம்ப் ஸ்டைல். இப்போதும் அதையே அவர் செய்துள்ளார். இதற்குப் பலன் கிடைக்குமா என்பதை நாம் பொறுத்து இருந்தே பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications