அமெரிக்கா - அரபு நாடுகள் இடையே தொடங்கும் மோதல்.. விஸ்வரூபமான காசா விவகாரம்! இணைந்த இஸ்லாமிய நாடுகள்
வாஷிங்டன்: காசாவை அமெரிக்கா கைப்பற்றும் என்று அதன் அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதனை அரபு நாடுகள் ஏற்க மறுத்துள்ளது. அதோடு காசா மக்களை வெளியேற்றாமல் ரூ.4.61 லட்சம் கோடியில் அந்த நகரை மறுகட்டமைப்பு செய்ய அரபு நாடுகள் திட்டம் வகுத்துள்ளன.
இதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால் அமெரிக்கா - அரபு நாடுகள் இடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் 15 மாதமாக போர் புரிந்தது. இந்த போர் தற்போது 90 நாட்கள் வரை நிறுத்தி வைக்கப்பட்டது. இதற்கிடையே தான் பிப்ரவரி மாதம் 4ம் தேதி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை வெள்ளை மாளிகையில் சந்தித்தார்.

அப்போது போர் தொடர்பாக இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை மேற்கொண்டனர். அதன்பிறகு பத்திரிகையாளர்களை டொனால்ட் டிரம்ப் மற்றும் நெதன்யாகு ஆகியோர் கூட்டாக சந்தித்தனர்.
அந்த சமயத்தில் டொனால்ட் டிரம்ப், ‛‛காசாவை அமெரிக்கா கைப்பற்றும். காசா அழிவின் விளிம்பில் உள்ளது. இஸ்ரேல் போரால் காசா மக்களை அங்கு வசிக்க சொல்வது மீண்டும் மீண்டும் மோதலுக்கு வழிவகுக்கும். இதனால் அமெரிக்கா காசாவை கைப்பற்றி மேம்படுத்த உள்ளது. காசா மக்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும். அவர்களை எகிப்து மற்றும் ஜோர்டான் நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும்'' என்றார். இதற்கு எகிப்து, ஜோர்டான் உள்பட பல்வேறு இஸ்லாமிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. காசா மக்களை வெளியேற்றாமல் அமெரிக்கா மறுகட்டமைப்பு செய்ய வேண்டும் என்று அந்த நாடுகளின் தலைவர்கள் கூறினர். ஆனால் டொனால்ட் டிரம்ப் அதனை ஏற்கவில்லை. காசாவை கைப்பற்றுவதில் உறுதியாக உள்ளார்.
இந்நிலையில் தான் காசா விவகாரம் தொடர்பாக எகிப்து தலைநகர் கெய்ரோவில் அரபு நாடுகளின் தலைவர்களின் அவசர மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசி தான் இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்தார். சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்பட பல இஸ்லாமிய நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர்.
இதில் காசாவை 53 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் 4.61 லட்சம் கோடி) செலவில் 2030ம் ஆண்டுக்குள் மறுகட்டமைப்பு செய்ய வேண்டும். காசா மக்களை வெளியேற்றாமல் கட்டிட கழிவுகளை அகற்றி வீடுகள் கட்டி கொடுக்க முடிவு செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி காசாவில் கடற்கரை உள்ளது. இதனால் மீன்பிடி துறைமுகம், வணிக துறைமுகம், விமான நிலையம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. இதனை அமெரிக்கா ஏற்றுக்கொண்டு உதவி செய்ய வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக விரைவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி உலக வங்கி, உலக நாடுகளிடம் காசா மறுகட்டமைப்புக்கு உதவி கோர எகிப்து முடிவு செய்துள்ளது.
அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் இந்த முடிவை அமெரிக்கா ஏற்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் தான் இந்த முடிவை அமெரிக்கா ஏற்கவில்லை. இதுதொடர்பாக அமெரிக்கா தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செய்தி தொடர்பாளர் பிரியன் ஹியூஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
‛‛காசா என்பது தற்போது வசிக்க தகுதியில்லாத இடமாக உள்ளது. இந்த எதார்த்தத்தை நிவர்த்தி செய்யும் வகையில் தற்போதைய திட்டம் என்பது இல்லை. அதோடு கட்டட கழிவுகள் மற்றும் வெடிக்காத வெடிகுண்டுகள் நிறைந்துள்ள இடத்தில் மக்களால் நிம்மதியாக வாழ முடியாது. ஹமாஸிடம் இருந்து காசாவை விடுவிக்க வேண்டும். மக்களின் அமைதியான வாழ்வுக்கு காசாவை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையில் அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதியாக உள்ளார். இதனால் அந்த பிராந்தியத்தில் மக்களின் அமைதி மற்றும் செழிப்பான வாழ்க்கையை உறுதி செய்வது தொடர்பான பேச்சுவார்த்தையை நாங்கள் எதிர்நோக்கி காத்திருக்கிறோம்'' என்று கூறப்பட்டுள்ளது.
இதன்மூலம் எகிப்து தலைமையில் அரபு நாடுகள் ரூ.4.61 லட்சம் கோடியில் காசாவை மறுஉருவாக்கம் செய்யும் திட்டத்தை அமெரிக்கா நிராகரித்துள்ளது. இதுபற்றி இன்னும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. மாறாக அமெரிக்காவின் பாதுகாப்பு கவுன்சிலின் செய்தி தொடர்பாளர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். இவர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அனுமதியின்றி கருத்து சொல்ல வாய்ப்பில்லை. இதனால் காசா மக்களை வெளியேற்றி அதனை கைப்பற்றுவதில் டொனால்ட் டிரம்ப் உறுதியாக உள்ளார். இதனை மத்திய கிழக்கு பிராந்திய இஸ்லாமிய நாடுகள் விரும்பவில்லை. இதனால் காசா விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்லாமிய நாடுகள் இடையே மோதல் வெடிக்கும் அபாயம் என்பது ஏற்படலாம் என்கின்றனர் சர்வதேச அரசியல் வல்லுநர்கள்.












Click it and Unblock the Notifications