"சத்தியமா, இதற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லைங்க!" விளக்கம் கொடுத்த அமெரிக்கா.. எதற்கு தெரியுமா
வாஷிங்டன்: பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இது தொடர்பாக அமெரிக்கா முக்கிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் இப்போது மிகப் பெரிய அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. பிரதமர் இம்ரான் கான் மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளன.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து மிக விரைவில் அங்கு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தான்
அப்படி நடந்தால் இம்ரான் கான் தனது பிரதமர் பதவியை இழப்பது உறுதி என்ற சூழலே இப்போது அங்கு நிலவுகிறது. இதனிடையே பாகிஸ்தானில் இப்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்குப் பின்னால் அந்நிய நாட்டுச் சதி உள்ளதாக இம்ரான் கான் தொடர்ந்து கூறி வருகிறார். அதாவது பாகிஸ்தானில் குழப்பத்திற்குப் பின்னர், இந்தியாவை ஆதரிக்கும் ஒரு சக்திவாய்ந்த நாடு உள்ளதாக அவர் சாடியுள்ளார். சமீபத்தில் தான் ரஷ்யா சென்று வந்ததாலேயே அந்த சக்திவாய்ந்த நாடு, பாக். மீது கோபமாக உள்ளதாகவும் அவர் சாடி உள்ளார்.

சக்திவாய்ந்த நாடு
அமெரிக்காவைச் சக்திவாய்ந்த நாடு என்று மறைமுகமாகக் குறிப்பிட்டுத் தாக்கிய இம்ரான் கான், சமீபத்தில் தான் ரஷ்ய சென்று வந்ததால், அந்த சக்திவாய்ந்த நாடு அதிருப்தியில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அதேபோல பாக். அரசுக்கு எதிரான அச்சுறுத்தும் கடிதம் தொடர்பாக இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்கத் தூதருக்குப் பாகிஸ்தான் அரசு சம்மன் அனுப்பியுள்ளது. இம்ரான் கான் குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விளக்கம்
தனது ஆட்சியைக் கவிழ்க்கும் இந்த முயற்சியில் அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் டொனால்ட் லுவுக்கு நேரடியாகத் தொடர்பு உள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டி இருந்தார். இந்நிலையில் இந்தக் குற்றச்சாட்டு குறித்து அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டிற்கும் அமெரிக்காவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று தெளிவுபடுத்தி உள்ளது.

உண்மை இல்லை
இந்நிலையில், இது தொடர்பாக அமெரிக்கா தற்போது விளக்கம் அளித்துள்ளது. இது குறித்த கேள்விக்குப் பதில் அளித்த அமெரிக்க வெளியுறவுத்துறை துணை செய்தித் தொடர்பாளர் ஜலினா போர்ட்டர், "இந்த குற்றச்சாட்டில் ஒரு சதவீதம் கூட உண்மை இல்லை. பாகிஸ்தான் நாட்டில் நடைபெறும் அரசியல் நடவடிக்கைகளை நாங்கள் தொடர்ந்து பின்பற்றி வருவது உண்மை தான். ஆனால், பாகிஸ்தானின் அரசியலமைப்பு மற்றும் சட்டத்தை நாங்கள் மதிக்கிறோம். ஆனால் மீண்டும் சொல்கிறேன். இந்த குற்றச்சாட்டுகள் உண்மை இல்லை" என்றார்.

3ஆவது முறை
பாகிஸ்தான் அரசியல் குழப்பத்திற்கு அமெரிக்கா காரணம் என்று பிரதமர் பதவியில் இருந்த ஒருவரே தெரிவித்தது பெரும் பரபரப்பைக் கிளப்பியது. இதையடுத்து இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக அமெரிக்கா அரசு விளக்கம் அளிப்பது இது மூன்றாவது முறையாகும். இதற்கு முன்னரும் கூட பாகிஸ்தான் அரசியல் நடவடிக்கைகளைக் கவனித்து வந்தாலும் அதில் தலையிடவில்லை என்றே அமெரிக்கா தொடர்ந்து கூறி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications