யோவ் என்னய்யா அது.. கருப்பா ஏதோ பறக்குதே.. அமெரிக்கா வெளியிட்ட பரபர படம்!
Recommended Video
வாஷிங்டன்: அமெரிக்க விமானத்தின் அருகே கருப்பாக ஒரு மர்மப் பொருள் பறக்கும் காட்சியை அமெரிக்க கடற்படை விமானம் படம் பிடித்து வெளியிட்டுள்ளது.
வேற்றுகிரக வாசிகள் குறித்து இதுவரை எந்த உறுதியான தகவலும் நம்மிடம் இல்லை. அப்படி யாராவது இருக்கிறார்களா என்பதும் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால் இருப்பார்கள் என்று ஸ்டீபன் ஹாக்கிங் உள்ளிட்ட பலர் கூறியுள்ளனர். அவர்கள் மனிதகுலத்தை அடிமையாக்கும் நாளும் வரும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஆங்காங்கே ஏதாவது மர்மப் பொருள் பறப்பது, பறக்கும் தட்டு என்று ஏதாவது பரபரப்புகள் நடந்து கொண்டேதான் உள்ளது. அப்படி ஒரு பரபரப்புதான் இப்போதும் நடந்துள்ளது. இதை அமெரிக்க கடற்படை புகைப்படம் எடுத்து வெளியிட்டு பரபரப்பைக் கூட்டியுள்ளது.

கருப்பு பொருள்
அமெரிக்க வானில் ஒரு மர்மப் பொருள் அமெரிக்க கடற்படை விமானத்திற்கு முன்பாக பறந்து சென்றுள்ளது. அதை அமெரிக்கா வீடியோவாக எடுத்துள்ளது. அந்த போர் விமானத்தில் இருந்த பைலட்தான் அந்தப் பொருள் பறப்பதை முதலில் பார்த்துள்ளார். வாவ்.. பார்த்துட்டேன் என்று அவர் அலற.. இன்னொரு பைலட்.. என்னய்யா அது என்று ஆச்சரியத்துடன் கேட்கிறார்.

என்ன பொருள்
கருப்பாக இருக்கும் அந்த மர்மப் பொருள் என்ன என்பது தெரியவில்லை. வேற்றுகிரக வாசிகளின் விமானமா அல்லது வேறு ஏதேனுமா என்றும் தெரியவில்லை. இதுதொடர்பான வீடியோவை மட்டும் வெளியிட்டுள்ள அமெரிக்க கடற்படை விளக்கம் எதையும் தரவில்லை. இருப்பினும் இந்த வீடியோ உண்மையானது என்று தெரிய வந்துள்ளது. கடந்த 2004 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளில் இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
விளக்கம் தேவை
தற்போது இந்த வீடியோக்கள் இணையதளத்தில் வைரலாகியுள்ளன. கடற்படை இதுகுறித்து பெரிய அளவில் விளக்கம் தராத நிலையில் அமெரிக்க அரசியல்வாதிகள் இதுகுறித்து கேள்வி எழுப்ப ஆரம்பித்துள்ளனர். அது என்ன மர்மப் பொருள் என்ற விவரத்தை கடற்படை வெளியிட வேண்டும் என்று வடக்கு கரோலினா மாகாணத்தைச் சேர்ந்த எம்பி மார்க் வாக்கர் கோரிக்கை விடுத்துள்ளார். கடற்படை துறை செயலாளர் ரிச்சர்ட் ஸ்பேன்சருக்கு அவர் கடிதமும் எழுதியுள்ளார்.

பாதுகாப்புக்கு ஆபத்து
ஒரு வேளை கருப்பாக இருந்த மர்மப் பொருள் அடையாளம் தெரியாத விமானமாக இருந்தால் அது அமெரிக்க பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாகும். எனவே இதுகுறித்து விளக்க வேண்டியது அமெரிக்க பாதுகாப்புத்துறையின் கடமையாகும் என்றும் வாக்கர் கூறியுள்ளார். அதேசமயம், அது வேற்றுகிரக வாசிகளின் வாகனமாக இருந்தால் அதுகுறித்த தகவல்களையும் அமெரிக்க பாதுகாப்புத்துறை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.

நாசாவின் கமுக்கம்
நாசாவிடம் வேற்றுகிரகவாசிகள், பிற கிரகங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய சமாச்சாரங்கள் குறித்து நிறையவே தகவல்கள் உள்ளன. ஆனால் அது எதையுமே வெளியிடாமல் பொத்திப் பொத்திப் பாதுகாத்து வருவதாக பல்வேறு நாட்டு விஞ்ஞானிகளிடம் பொதுவான குற்றச்சாட்டு உள்ளது என்பது நினைவிருக்கலாம். குறிப்பாக நிலா குறித்த பல முக்கிய ரகசியங்கள் நாசாவிடம் உள்ளதாக கூறப்படுவது முக்கியமானது.












Click it and Unblock the Notifications