US Tariff: "இந்தியா உடனான உறவை ஆபத்தில் தள்ளுகிறார் டிரம்ப்.." அமெரிக்காவிலேயே எழுந்த கடும் எதிர்ப்பு
வாஷிங்டன்: ரஷ்ய எண்ணெய்யை இறக்குமதி செய்ததற்காக இந்தியா மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த வரிகள் (US Tariff) இரு நாட்டு உறவை ஆபத்தில் தள்ளுவதாக மூத்த அமெரிக்க எம்பி கிரிகோரி மீக்ஸ் விமர்சித்துள்ளார். அமெரிக்கா இந்தியா இடையே வலுவான உறவை உருவாக்கக் கடந்த 20 ஆண்டுகளாக எடுக்கப்பட்டு வந்த நடவடிக்கையை டிரம்பின் வரிகள் ஆபத்தில் தள்ளுவதாக ஜனநாயக கட்சியைச் சேர்ந்த கிரிகோரி மீக்ஸ் சாடியுள்ளார்.
அமெரிக்க அதிபரான டிரம்ப் இப்போது உலக நாடுகள் மீது இஷ்டத்திற்கு வரிகளை அறிவித்து வருகிறார். அதன்படி இந்தியா மீது அவர் 50% வரிகளை அறிவித்துள்ளார். இது இந்தியா அமெரிக்கா உறவில் சலசலப்பை உண்டாக்கியுள்ளது. டிரம்பின் இந்த வரியால் இந்தியா அமெரிக்கா இடையேயான வர்த்தகம் சுமார் 40-50% வரை பாதிக்கப்படலாம் என்று சொல்கிறார்கள்.

டிரம்ப் வரி
இந்தியா மீதான டிரம்பின் வரிக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக அமெரிக்காவிலேயே கூட பலரும் டிரம்ப் அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதற்கிடையே ஜனநாயக கட்சியைச் சேர்ந்த மூத்த எம்பி கிரிகோரி மீக்ஸ் டிரம்பின் இந்த நடவடிக்கையை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். இது அமெரிக்கா இந்தியா உறவுகளை ஆபத்தில் தள்ளும் என்று அவர் விமர்சித்துள்ளார்.
கடும் விமர்சனம்
இது தொடர்பாக அவர் கூறுகையில், "இரு நாடுகளுக்கும் இடையே ஆழமான பொருளாதார உறவுகள் உள்ளன. இரு நாட்டு மக்களுக்கும் இடையேயும் நல்லுறவு உள்ளன. நமது ஜனநாயக மதிப்புகளுக்கு இணங்க, பரஸ்பர மரியாதைக்குரிய முறையில் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும். டிரம்ப்பின் இந்த வரி வலுவான அமெரிக்க- இந்தியா கூட்டணியை உருவாக்கிய பல வருட உன்னிப்பான பணிகளை ஆபத்தில் தள்ளும்" என்று அவர் சாடியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த மாதம் இறுதியில் முதலில் இந்தியாவுக்கு 25% வரிகளை அறிவித்தார். ரஷ்ய எண்ணெய்யைத் தொடர்ந்து வாங்குவதாலேயே இந்தியா மீது வரிகளை அறிவிப்பதாக டிரம்ப் சொன்னார். தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி டிரம்ப் கூடுதலாக 25% வரியை அறிவித்தார். இதன் மூலம் இந்தியாவுக்கான ஒட்டுமொத்த அமெரிக்க வரி 50% ஆக உயர்ந்தது.
இந்தியா நிலைப்பாடு
அதேநேரம் டிரம்பின் இந்த நடவடிக்கையை நியாயமற்றது மற்றும் ஆதாரமற்றது என்று இந்தியா கூறியுள்ளது. தனது தேசிய நலன்களைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியா எடுக்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்தது. மேலும், அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் கூட ரஷ்யாவிடம் இருந்து பொருட்களை வாங்கும்போது இந்தியாவுக்கு மட்டும் தடை ஏன் என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.
இது குறித்த கேள்வி டிரம்பிடமே கூட நேரடியாகச் செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்டது. இருப்பினும், அவர் அமெரிக்க ரஷ்ய வர்த்தகம் பற்றி தனக்கு எதுவும் தெரியாது எனச் சொல்லிச் சமாளித்தார்.
அமெரிக்காவுக்கே பாதிப்பு இருக்கும்
அதேநேரம் டிரம்ப் வரிகளை அமெரிக்கக் குடிமக்களையே அதிகம் பாதிக்கும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள். இது தொடர்பாக ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகப் பேராசிரியர் மார்க் புஷ் கூறுகையில், "அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் வரிச் சுமையை மக்களுக்கு பாஸ் செய்துவிடுவார்கள். இந்த வரிகளால் அமெரிக்காவில் விற்பனையாகும் பொருட்களின் விலை அதிகரிக்கும். எனவே, இந்த விவகாரத்தில் மிகக் கவனமான நடவடிக்கைகளை நாம் எடுக்க வேண்டும்" என்றும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications