ஒரே ஒரு பலூன் மூலம்.. அமெரிக்காவுக்கு மிக பெரிய செலவு வைத்த சீனா! அடேங்கப்பா இவ்வளவு கோடி செலவா
சீனா உளவு பார்த்தாக கூறப்படும் பலூன் பிக்கோ பலூன் என அழைக்கப்படுகிறது. இது அளவை பொறுத்து 12 டாலர் முதல் 180 டாலர் வரை (ரூ.1000 முதல் ரூ.16000) விற்கப்படுகிறது. இதில் சீனாவின் ராட்சத பலூன் ரூ.16,000 வரை இருக்கலாம்.
வாஷிங்டன்: அமெரிக்காவை உளவு பார்க்கும் நோக்கத்தில் அந்நாட்டின் வான் பரப்பில் பறந்த சீனாவின் ராட்சத பலூனை சுட்டுவீழ்த்த எவ்வளவு செலவாகியுள்ளது என்ற விவரம் தெரியவந்துள்ளது.
அதாவது, வெறும் ரூ.16 ஆயிரம் மதிப்பிலான அந்த பலூனை சுட்டு வீழ்த்த அமெரிக்கா ரூ. 3.63 கோடியை செலவிட்டதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்காவைக் குறைந்த செலவில் உளவு பார்த்ததோடு மட்டுமல்லாமல், அமெரிக்காவை பல கோடி ரூபாய் செலவு செய்யவும் சீனா வைத்திருக்கிறது.

பலூன் கிளப்பிய பீதி
அமெரிக்காவில் இம்மாதத் தொடக்கத்தில், 40 ஆயிரம் அடிக்கு மேலே ஒரு மர்மமான பொருள் பறந்து கொண்டிருப்பதை அந்நாட்டு ராணுவ ரேடார்கள் கண்டறிந்தன. இதையடுத்து, இதுகுறித்து ஆய்வு செய்த அமெரிக்க விண்வெளித்துறையினர் அது சீன நாட்டுக்குச் சொந்தமான ராட்சத பலூன் என்பதைக் கண்டுபிடித்தனர். மேலும், அமெரிக்காவின் முக்கியப் பகுதிகளை இந்த பலூன் உளவு பார்த்து வந்ததும் தெரியவந்தது. அமெரிக்கா மட்டுமல்லாமல் உலக நாடுகளையே இந்த சம்பவம் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

பலூனை சுட போர் விமானம்
முதலில், இந்தக் குற்றச்சாட்டைச் சீனா திட்டவட்டமாக மறுத்து வந்தது. பிறகு, அது தங்கள் நாட்டின் பலூன் தான் என்றும், பருவநிலையைக் கண்காணிப்பதற்காக அதனை பயன்படுத்துவதாகவும் சீனா தெரிவித்தது. சீனாவின் இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த அமெரிக்கா, போர் விமானம் மூலமாக அந்த ராட்சத பலூனை அதிரடியாகச் சுட்டு வீழ்த்தியது. இதற்குச் சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பருவநிலையை கண்காணிக்க அனுப்பிய தங்கள் நாட்டு பலூனை சுட்டு வீழ்த்தியதால் சீனா - அமெரிக்கா உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுவிட்டதாகச் சீனா தெரிவித்தது.

ரூ.16 ஆயிரம் பலூன்
இதனிடையே, கடந்த வாரம் கனடாவின் வான் பரப்பில் பறந்து கொண்டிருந்த பலூனையும் அமெரிக்க விமானப்படை சுட்டு வீழ்த்தியது. இந்நிலையில், இந்த பலூன்களை சுட்டு வீழ்த்த அமெரிக்காவுக்கு எவ்வளவு செலவானது என்ற தகவலை 'ஏவியேஷன் வீக் ரிப்போர்ட்' என்ற இதழ் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: சீனா உளவு பார்த்ததாகக் கூறப்படும் ராட்சத பலூன் பிக்கோ பலூன் என அழைக்கப்படுகிறது. இது அளவை பொறுத்து 12 டாலர் முதல் 180 டாலர் வரை (ரூ.1000 முதல் ரூ.16000) விற்கப்படுகிறது. இதில் சீனாவின் ராட்சத பலூன் ரூ.16,000 வரை இருக்கலாம்.

ரூ.7 கோடி செலவிட்ட அமெரிக்கா
அதே சமயத்தில், இந்த பலூனை சுட்டு வீழ்த்த அமெரிக்காவின் எப் 16 போர் விமானம் சென்றது. சுமார் 50 ஆயிரம் அடிக்கு மேலே பறப்பதால் அந்த உயரத்தில் அதைச் சுட்டு வீழ்த்த மிகவும் திறன் வாய்ந்த 'சைடுவின்டர்' (sidewinder) என்ற ஏவுகணை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த ஏவுகணையின் விலை 4 லட்சம் டாலர்கள். இந்திய மதிப்பில் ரூ.3.63 கோடி. அப்படியென்றால் ரூ.16 ஆயிரம் மதிப்பிலான பலூனை சுடுவதற்கு அமெரிக்கா ரூ.3.63 கோடி செலவிட்டிருக்கிறது. மேலும், கனடாவிலும் இதுபோன்ற பலூனை சுட்டு வீழ்த்தியதால் அமெரிக்காவுக்கு கிட்டத்தட்ட ரூ.7 கோடி செலவாகியுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.











Click it and Unblock the Notifications