இந்தியாவுக்கு குட்நியூஸ்.. டிரம்ப் பதவியேற்ற மறுநாளே மும்பை தாக்குதல் பயங்கரவாதியை நாடு கடத்த அனுமதி
வாஷிங்டன்: மும்பையில் கடந்த 2008 ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்தினர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான தஹவ்வூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2008 ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி மும்பையில் தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல் நடந்தது. படகு வழியாக மும்பைக்குள் ஊடுருவிய பாகிஸ்தானின் லஷ்கர் இ-தொய்பா அமைப்பின் 10 பயங்கரவாதிகள் மும்பையில் பல்வேறு இடங்களில் வெடிகுண்டுகளை வெடிக்க செய்தனர்.

மும்பை தாஜ் மற்றும் ஒபராய் ஹோட்டல், சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் ரயில் நிலையம், நாரிமண் ஹவுசில் உள்ள யூத மையம் மற்றும் லியோபோல்ட் கஃபே உள்பட பல இடங்களில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் 166 பேர் பலியாகினர். இதில் 6 அமெரிக்கர்களும் அடங்குவர். மேலும் 300 பேர் காயமடைந்தனர். 9 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் ரயில் நிலையத்தில் தாக்குதல் நடத்திவிட்டு தப்ப முயன்ற முகமது அஜ்மல் அமீர் கசாப் கைது செய்யப்பட்டார். அவர்2010ல் தூக்கிலிடப்பட்டார்.
இந்நிலையில் மும்பை தாக்குதலில் தொடர்புடைய தஹவ்வூர் ஹுசைன் என்பவர் அமெரிக்காவில் கடந்த 2009 ம் ஆண்டு சிக்கினார். இவர் தற்போது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள மெட்ரோபாலிட்டன் டிடென்ஷன் சென்டர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தானில் பிறந்த இவர் கனடா குடியுரிமை பெற்றிருந்தார்.
மும்பை தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலில் பாகிஸ்தான் பயங்கரவாதி டேவிட் ஹெட்லியுடன் சேர்ந்து இவர் சதித்திட்டம் தீட்டியிருந்தார். இந்த டேவிட் ஹெட்லி என்பவர் பாகிஸ்தானில் பிறந்து அமெரிக்காவில் வசித்தார். இதனால் தஹவ்வூர் ஹுசைன் மும்பை தாக்குலில் முக்கிய குற்றவாளியாக கருதப்படுகிறார்.
2009ல் அமெரிக்காவில் சிக்கிய தஹவ்வூர் ஹுசைனை இந்தியாவுக்கு நாடு கடத்த தொடர்ந்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் இதில் பின்னடைவு ஏற்பட்டு வந்தது. கடந்த ஆண்டு பாசிட்டிவ்வான பதிலை அமெரிக்கா கூறியது. அதாவது தஹவ்வூர் ஹுசைனை, இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்கா ஒப்புக்கொண்டது.
இதனால் பயந்துபோன தஹவ்வூர் ஹுசைன் தனது நாடு கடத்தும் நடவடிக்கைக்கு எதிராக அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள கீழமை நீதிமன்றத்தை நாடினார். அவரது கோரிக்கை ஏற்கப்படவில்லை. மனு தள்ளுபடியானது. இதையடுத்து அவர் அமெரிக்காவின் உச்சநீதிமன்றத்தை நாடினார். அப்போது தஹவ்வூர் ஹுசைனின் கோரிக்கையை ஏற்க கூடாது என்று அமெரிக்க அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. அமெரிக்காவின் சோலிசிட்டர் ஜெனலர் எலிசபெத் பிரிலோகர் இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் இந்தியா - அமெரிக்கா இடையே குற்றவாளிகளை ஒப்படைக்கும் ஒப்பந்தம் நடைமுறையில் உள்ளதை சுட்டிக்காட்டி அமெரிக்கா சார்பில் அந்த கோரிக்கை என்பது வைக்கப்பட்டது. அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் கடந்த 20ம் தேதி பொறுப்பேற்றார். அதற்கு அடுத்த நாள் இந்த மனு மீது அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது அமெரிக்க அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. அதோடு தஹவ்வூர் ஹுசைனின் மனுவை தள்ளுபடி செய்து அதிரடியாக உத்தரவிட்டது. இதன்மூலம் தஹவ்வூர் ஹுசைனை நாடு கடத்தவும் இசைவு தெரிவித்தது. இதையடுத்து விரைவில் தஹவ்வூர் ஹுசைன் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட உள்ளார். இந்தியாவுக்கு அவர் நாடு கடத்தப்பட்ட பிறகு அவரிடம் தீவிர விசாரணை என்பது நடத்தப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications