இந்தியர்கள் திமிர் பிடித்தவர்கள்.. உக்ரைன் போரை நடத்துவதே மோடி தான்! வாயை விட்ட டிரம்பின் ஆலோசகர்
வாஷிங்டன்: இந்தியா குறைந்த விலையில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குகிறது. இதுதான் உக்ரைன் மீதான போரை தூண்டி விடுகிறது. இது மோடியின் போர். இந்தியர்கள் திமிர் பிடித்தவர்களாக உள்ளதால் அமெரிக்காவும் வேலையிழப்பு, பொருளாதார சிக்கலை எதிர்கொள்கிறது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ நம் நாட்டை சீண்டி உள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரி விதித்துள்ளார். இதனால் அமெரிக்காவுக்கான ஏற்றுமதி பெரிய அளவில் சரிவை சந்திக்க உள்ளது. புரியும்படி கூற வேண்டும் என்றால் நம் நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு செல்லும் பொருட்களில் ஏறக்குறைய சுமார் 50 சதவீதம் வரை சரிவு ஏற்படலாம் என்று அச்சம் உள்ளது. இதற்கு டிரம்பின் 50 சதவீத வரி தான் முக்கிய காரணம்.

இந்த வரி விதிப்புக்கு முக்கிய காரணம். அமெரிக்காவுடனான வர்த்தக பற்றாக்குறை மற்றும் ரஷ்யாவிடம் இருந்து நாம் கச்சா எண்ணெய் வாங்குவது தான் என்று டிரம்ப் கூறியுள்ளார். மேலும் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால் அந்த நாடு உக்ரைன் மீது போரை தொடர்ந்து வருகிறது. இதனால் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என்று கூறினார். ஆனால் நம் நாடு செவிசாய்க்கவில்லை.
டிரம்ப் ஆலோசகர் கருத்து
இதனால் டிரம்ப் கோபமாகி 50 சதவீத வரியை செயல்படுத்தி உள்ளார். இதனால் இருநாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் டொனால்ட் டிரம்பின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ இந்தியாவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
உக்ரைனில் நடைபெறும் போரை, 'மோடியின் போர்' என்றும் இந்தியர்கள் திமிர்பிடித்தவர்கள் என்றும் அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Bloomberg Televisionக்கு பீட்டர் நவரோ அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
மோடியின் போர்
‛‛ உக்ரைனில் நடைபெறும் போர் 'மோடியின் போர்'. இந்தியா குறைந்த விலையில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கிறது. இது ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை தூண்டி விடுகிறது. இந்தியாவின் செயலால் அமெரிக்காவில் உள்ள அனைவரும் பாதிப்பைச் சந்திக்கிறார்கள்.
மோடியின் போரால் அமெரிக்கா வர்த்தகம், நுகர்வோர், வருமானம், தொழிற்சாலைகள் மற்றும் வேலைவாய்ப்பு ஆகிய பிரிவுகளில் அமெரிக்கா பெரும் இழப்பைச் சந்திக்கிறது. அதுமட்டுமின்றி அமெரிக்க வரி செலுத்துவோர் மீது சுமையை அதிகரித்துள்ளது.
இந்தியர்கள் திமிர் பிடித்தவர்கள்
இந்தியர்கள் இந்த விவகாரத்தில் மிகவும் திமிர்பிடித்தவர்களாக இருப்பது எனக்கு கவலை அளிக்கிறது. அவர்கள், எங்களிடம் அதிக வரிகள் இல்லை. இது எங்கள் இறையாண்மை. நாங்கள் விரும்பும் எவரிடமிருந்தும் கச்சா எண்ணெயை வாங்கலாம் என்று கூறுகிறார்கள். அதோடு உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று இந்தியா கூறுகிறது.
அதற்கு ஏற்றாற் போல் செயல்பட வேண்டும். இந்தியா தள்ளுபடி விலையில் எண்ணெய் வாங்குவதன் மூலம் தனக்குக் கிடைக்கும் பணத்தை வைத்து தான் ரஷ்யா போர் இயந்திரத்தை பயன்படுத்துகிறது. உக்ரைன் மக்களை கொல்கிறது.
கோரிக்கை ஏற்றால் வரி குறைப்பு
எங்களது கோரிக்கையை ஏற்று ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால், இந்தியா மீதான வரியில் 25 சதவிகிதத்தை குறைப்போம். ''என்றார். பீட்டர் நவரோ இந்தியா மீது இப்படியான குற்றச்சாட்டை முன்வைப்பது இது முதல் முறையல். இதற்கு முன்பும் கூறியுள்ளார். குறிப்பாக சமீபத்தில் கூட வரிகளின் மகாராஜா இந்தியா என்று விமர்சனம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications