அமெரிக்காவிலிருந்து ஒருவரை வெளியேற்ற.. ஒரே ஒரு சோஷியல் மீடியா போஸ்ட் போதும்.! ரூல்ஸை மாற்றிய டிரம்ப்
வாஷிங்டன்: அமெரிக்க அரசு அங்குள்ள வெளிநாட்டினருக்கான ரூல்ஸை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கிடையே அமெரிக்காவில் புகலிடம் கோருவோரின் சமூக வலைத்தள பக்கங்களையும் கூட தீவிரமாக ஆய்வு செய்ய டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதனால் ஒருவரை அமெரிக்காவில் இருந்து வெளியேற்றத் தேவையில்லாத ஒரு போஸ்ட் கூட காரணமாக இருந்துவிடலாம்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகம் வெளிநாட்டினரைக் குறிவைத்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் மட்டுமின்றி, சட்டப்பூர்வமாகக் குடியேறியவர்கள் கூட டிரம்பால் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது.

டிரம்ப் நிர்வாகம்
இதற்கிடையே டிரம்ப் நிர்வாகம் இப்போது அமல்படுத்தியுள்ள புதிய ரூல்ஸ் பேசுபொருள் ஆகியுள்ளது. டிரம்ப் நிர்வாகம் எல்லை மீறுவதாகவும் இது சரியான போக்கு இல்லை என்றும் கூட விமர்சனங்கள் எழுந்துள்ளன. டிரம்ப் நிர்வாகம் அப்படி என்ன ரூல்ஸ் கொண்டு வந்துள்ளது.. இது யாருக்கு என்ன மாதிரியான சிக்கலை ஏற்படுத்தும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
இனிமேல் அமெரிக்காவில் உள்ளவர்கள் புகலிட சலுகைகள் பெற விண்ணப்பிக்கும் போது அவர்களின் சோஷியல் மீடியா கணக்குகள் எல்லாம் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்படுமாம். அதில் பாஸ் ஆகும் நபர்களுக்கு மட்டுமே சலுகைகளை வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அதாவது யூத எதிர்ப்பு (antisemitic) போஸ்ட்கள் எதாவது இருக்கிறதா என்பதைக் குறித்து தீவிரமாக ஆய்வு செய்த பிறகே சலுகைகள் வழங்க டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
சமூக வலைத்தள போஸ்ட்
அந்நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பு செயலாளர் கிறிஸ்டி நோயம் என்பவரும் விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளதை உறுதி செய்திருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "பேச்சு சுதந்திரத்தை உறுதி செய்யும் அமெரிக்காவின் முதலாவது சட்ட திருத்தத்தின் பின்னால் ஒளிந்து கொண்டு யூத எதிர்ப்பு கருத்துகளைப் பரப்பி வன்முறையில் ஈடுபட முடியும் என்று நினைக்க வேண்டாம். உங்களைப் போன்றவர்களை அமெரிக்கா வரவேற்காது" என்றார்.
இந்தக் கொள்கை சட்டப்பூர்வமாக அமெரிக்காவில் நிரந்தரமாகத் தங்க விரும்பும் வெளிநாட்டவர், வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் யூத எதிர்ப்பு நடவடிக்கையுடன் தொடர்புடைய கல்வி நிறுவனங்களில் இருப்போர் ஆகியோருக்கு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி புகலிட சலுகை கோருவோரின் வலைத்தள பக்கம் முழுமையாக அலசி ஆராயப்படும். யூத எதிர்ப்பு பயங்கரவாதம், அதை ஊக்குவிப்பது அல்லது ஆதரிப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவோரைக் கண்டறிந்து அவர்களுக்குச் சலுகைகளை மறுக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
அமெரிக்க குடிவரவு துறை
ஒருவர் யூத எதிர்ப்பு பயங்கரவாதம் அல்லது யூத எதிர்ப்பு பயங்கரவாத அமைப்புகளை ஆதரித்து சமூக வலைத்தளங்களில் போஸ்ட் செய்திருந்தால் அது நெகடிவ்வான விஷயமாகவே கருதப்படும் என்று அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார். அதாவது ஹமாஸ், பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத், ஹிஸ்புல்லா, ஹவுதி போன்ற குழுக்களை ஆதரித்து போஸ்ட் செய்தவர்களுக்குக் குடியேற்றச் சலுகைகள் மறுக்கப்படலாம். மேலும், நாட்டில் இருந்தும் கூட வெளியேற்றப்படலாம்
டிரம்ப் ஆதரவாளர்கள் வழக்கம் போல இந்த நடவடிக்கையை ஆஹா ஓஹோ எனப் புகழ்ந்து தள்ளுகிறார்கள். தீவிரவாத நடவடிக்கையை ஆதரிப்போருக்கு அமெரிக்காவில் இடமில்லை என்பதை டிரம்ப் நிர்வாகம் உறுதி செய்து வருவதாகக் குறிப்பிட்டு வருகிறார்கள். அதேநேரம் மற்றொரு தரப்பினர் இந்த நடவடிக்கை சரியானது இல்லை என்று விமர்சித்து வருகிறார்கள்.
கிளம்பிய எதிர்ப்பு
அரசியல் ரீதியாக தங்கள் கொள்கையைத் தெரிவிப்போரை இது தண்டிக்கக்கூடும் என்று FIRE என்ற தனிநபர் உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், இது பேச்சு சுதந்திரத்தை நசுக்கும் செயல் என்றும் அவர்கள் விமர்சித்துள்ளனர். அமெரிக்காவில் நுழைவோரை அரசு ஏற்கனவே பல்வேறு வழிகளில் தீவிர சோதனை செய்கிறது. ஆனால் இந்த கொள்கை அரசியல் கருத்துகளைத் தெரிவிப்போரையும் தண்டிக்கிறது. இதை ஏற்கவே முடியாது என்று அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.
அதேபோல அமெரிக்க குடிவரவு வழக்கறிஞர்களும் இந்த நடவடிக்கை குறிப்பிட்ட சிலரைக் குறிவைத்துப் பயன்படுத்தப்படலாம் என்று அச்சம் தெரிவிக்கிறார்கள். இது குறித்து அமெரிக்க வழக்கறிஞர் யேல்-லோஹர் மேலும் கூறுகையில், "அமெரிக்கக் குடியுரிமை அதிகாரிகள் இதுபோல தங்களின் சொந்த விருப்பத்தின் அடிப்படையில் ஒரு விண்ணப்பத்தை மறுக்கும்போது, அதைச் சமாளிப்பது மிகவும் கடினம். எனவே, இதை ஏற்க முடியாது" என்றார்.












Click it and Unblock the Notifications