"சீக்ரெட்" ஆயுதம்! வெடித்து சிதறாது,ஆனால் துண்டுதுண்டாக்கும்! அல்-கொய்தா தலைவர் கொல்லப்பட்டது எப்படி
வாஷிங்டன்: ஆப்கன் தலைநகர் காபூலில் அல்-கொய்தா தலைவர் அய்மான் அல் ஜவாஹிரி கொல்லப்பட்டு உள்ள நிலையில், இது தொடர்பாக சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
Recommended Video
உலக வரலாற்றிலேயே மிகப் பெரிய கறுப்பு தினம் என்று இரட்டை கோபுர தாக்குதல் நடந்த செப்.11ஆம் தேதியைச் சொல்லலாம். உலக வல்லரசான அமெரிக்காவையே இந்த தாக்குதல் ஆட வைத்துவிட்டது.
அந்த கொடூர தாக்குதலுக்குப் பின்னர் தான், உலக நாடுகள் பயங்கரவாதிகளைக் கையாளும் முறையே ஒட்டுமொத்தமாக மாறியது. பயங்கரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.

பின் லேடன்
இப்படி உலக வரலாற்றையே மாற்றிய இரட்டை கோபுர தாக்குதலுக்கு முழு காரணம் அல்-கொய்தா பயங்கர அமைப்பு தான். ஒசாமா பின் லேடன், அவரது சகா அய்மான் அல் ஜவாஹிரி உள்ளிட்டோர் தான் இந்த தாக்குதலை ஸ்கெட்ச் போட்டு நடத்தி இருந்தனர். இந்தத் தாக்குதல் நடந்து சுமார் 10 ஆண்டுகளுக்குப் பின்னர், பாகிஸ்தானில் வைத்து ஒசாமா பின்லேடனை கொன்றது அமெரிக்கா.

அய்மான் அல் ஜவாஹிரி
அவருக்குப் பின்னர், அல் கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவராக அய்மான் அல் ஜவாஹிரி தேர்ந்தெடுக்கப்பட்டார். இரட்டை கோபுர தாக்குதலில் இவருக்கும் முக்கிய பங்கு உள்ளது என்பதாலும் அல்- கொய்தா வளர்வதைத் தடுக்க வேண்டும் என்பதாலும் அமெரிக்கா இவரைத் தொடர்ந்து தேடி வந்தது. இந்தச் சூழலில் தான், ஆப்கன் தலைநகர் காபூலில் ஒரு வீட்டில் வசித்து வந்த அய்மான் அல் ஜவாஹிரியை சத்தமில்லாமல் தீர்த்துக் கட்டியுள்ளது அமெரிக்கா.

குண்டுவெடிப்பு இல்லை
சத்தமில்லாமல் எனப் பேச்சுக்குச் சொல்லவில்லை. உண்மையாகவே எந்தவொரு குண்டுவெடிப்பும் இல்லாமல் அவர் கொல்லப்பட்டு உள்ளார். அய்மான் அல் ஜவாஹிரி தங்கி இருந்த வீட்டின் போட்டோக்களில் கூட குண்டுவெடிப்பு நடந்ததற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. இதனால் எங்கு அமெரிக்கா தனது சக்திவாய்ந்த சீக்கிரெட் ஆயுதத்தைப் பயன்படுத்தி இருக்குமோ என்ற தகவல் வெளியாகி உள்ளது.

ஹெல்ஃபயர் R9X
அய்மான் அல்-ஜவாஹிரி காபூல் வீட்டில் அமெரிக்கா பயங்கர ஆயுதமாகக் கருதப்படும் ஹெல்ஃபயர் R9X என்ற சக்திவாய்ந்த ஏவுகணையைப் பயன்படுத்தி உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மொத்தமாக ஆறு ரேஸர் போன்ற கத்திகள் கொண்டிருக்கும் இந்த பயங்கர ஆயுதம் இலக்கை துண்டுதுண்டாக சிதறச் செய்யும்.. ஆனால் குண்டுவெடிப்பை ஏற்படுத்தாது.

எப்படிச் செயல்படும்
இருப்பினும், இது போன்ற ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதை அமெரிக்கா ஒரு போதும் வெளிப்படையாக ஒப்புக் கொண்டது இல்லை. இந்த பயங்கர R9X ஆயுதம் முதல்முறையாகக் கடந்த மார்ச் 2017இல் அல்-கொய்தாவின் மூத்த தலைவர் அபு அல்-கைர் அல்-மஸ்ரியை கொல்ல பயன்பட்டது. அவர் சிரியாவில் காரில் சென்று கொண்டிருந்த போது கொல்லப்பட்டார். அந்த படங்களிலும் கூட காரின் மேலே பெரிய ஓட்டை தெரிந்தது. உள்ளே இருந்த நபர்களும் துண்டாக்கப்பட்டனர். இருப்பினும், அங்குக் குண்டுவெடிப்பு ஏற்படவில்லை. காரின் முன்புறமும் பின்பக்கமும் அப்படியே எவ்வித பாதிப்பும் இல்லாமல் இருந்தது.

வெடித்துச் சிதறும்
இதற்கு முன்பு வரை டிரோன்களில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகள் இலக்குகளில் மோதி வெடித்துச் சிதறும். இது சக்திவாய்ந்த வெடிப்புகளை ஏற்படுத்தும். இதனால் அருகே இருக்கும் அப்பாவி மக்கள் கூட உயிரிழக்கும் அபாயம் இருந்தது. இதைத் தடுக்கும் வகையிலேயே அமெரிக்கா இந்த அதிநவீன ஆயுதத்தை உருவாக்கி உள்ளது. 2017ஆம் ஆண்டிற்குப் பின்னர், சில முக்கிய தாக்குதல்களில் இந்த R9Xஐ அமெரிக்கா பயன்படுத்தி உள்ளது.

தனியாக நின்ற ஜவாஹிரி
இதனை "பிளையிங் ஜின்சு" ("flying ginsu") என்றும் "நிஞ்ஜா பாம்ப்" என்றும் அழைக்கிறார்கள். பொதுமக்களின் உயிரிழப்புகளைத் தவிர்க்கும் அதே வேளையில், பயங்கரவாதிகளைக் கொல்ல பயன்படுத்தப்படும் முக்கிய ஆயுதமாக இது மாறியது. இப்போது ஜவாஹிரியும் அதே போலத் தான் கொல்லப்பட்டு உள்ளார். கடந்த ஜூலை 31ஆம் தேதி ஜவாஹிரி வீட்டின் பால்கனியில் தனியாக நின்று கொண்டு இருந்த போது கொல்லப்பட்டார்.

எந்த பாதிப்பும் இல்லை
இப்போது வெளியாகி உள்ள அவரது வீட்டின் புகைப்படங்களில் வீட்டின் முதல் மாடியில் இருக்கும் ஜன்னல்கள் வெடித்துச் சிதறி உள்ளன. அதேநேரம் மற்ற தளங்கள் எவ்வித பாதிப்பும் இல்லாமல் அப்படியே உள்ளது. இந்தத் தாக்குதல் நடந்த போது ஜவாஹிரி வீட்டில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இருந்தார்கள் என்றும் இருப்பினும் அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாத வகையிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அமெரிக்கா தெரிவித்து உள்ளது.












Click it and Unblock the Notifications