ஈரான் போரை நாங்கள் தொடங்கவில்லை! பதவி பறிப்பு பீதிக்கு நடுவே அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் விளக்கம்
வாஷிங்டன்: ''ஈரான் மீதான போரை நாங்கள் தொடங்கிவில்லை. நாளை மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் இதையே மீண்டும் செய்வேன். என் மீதான இந்த பதவி நீக்க நடவடிக்கை என்பது அமெரிக்கப் படைகள் மீதான தாக்குதலுக்கு இணையானது. '' என்று அமெரிக்காவின் பாதுகாப்பு துறை அமைச்சர் பீட் ஹெக்சத் முக்கிய விளக்கத்தை அளித்துள்ளார். பீட் ஹெக்சத்தை அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர் பதவியில் இருந்து பதவி நீக்கம் செய்வதற்காக டொனால்ட் டிரம்ப்பின் குடியரசு கட்சியின் எம்பியே தீர்மானம் கொண்டு வந்துள்ள நிலையில் அவர் இந்த விளக்கத்தை வெளியிட்டுள்ளார்.

கடந்த மே மாதத்துக்கு பிறகு முதல் முறையாக அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர் பீட் ஹெக்சத் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
'' அமெரிக்காவின் 250 ஆண்டு கால வரலாற்றில் சட்டப்பூர்வமாக ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காக இதுவரை பாதுகாப்பு அமைச்சர் அல்லது போர் அமைச்சர் பதவி நீக்கம் செய்யப்பட்டது இல்லை. எனக்கு எதிராக பதவி நீக்க தீர்மானத்தை தாமஸ் மேஸி கொண்டு வந்துள்ளார்.
கொள்கை ரீதியாக உள்ள கருத்து வேறுபாடுகள் காரணமாக தோல்வியடைந்து அதிருப்தியில் உள்ள தாமஸ் மேஸி எனக்கு எதிராக செயல்பட தொடங்கி உள்ளார். இது ஒரு அரசியல் நாடகம். வெறுப்பின் காரணமாக இப்படி செய்கிறார். அதிபர் டிரம்பின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க முயற்சிக்கிறார். இது கேலிக்கூத்தானது. இது ஒரு தந்திரமான யுக்தி என்பது அனைவருக்கும் தெரியும்.
ஈரான் மீதான போர் உள்பட பிற மோதல்களின்போது எடுத்த நடவடிக்கைகளை நான் பெருமையாக கருதுகிறனே். நாளை மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் இதையே மீண்டும் செய்வேன். என் மீதான இந்த பதவி நீக்க நடவடிக்கை என்பது அமெரிக்கப் படைகள் மீதான தாக்குதலுக்கு இணையானது. இந்த தீர்மானங்கள், அமெரிக்கப் படையில் பணியாற்றிய ஒவ்வொருவருக்கும், அவர்கள் செய்த சேவை ஒரு குற்றம் என்று உணர்த்துகின்றன. ஆனால், அவர்களின் சேவை ஒரு குற்றம் அல்ல. அவர்கள் அனைவரும் கதாநாயகர்கள்'' என்று கூறினார்.


Click it and Unblock the Notifications
