ஹெச் 1-பி விசாவை விடுங்க! பணம் இருந்தால் போதும்! நேரடியாக அமெரிக்க குடியுரிமையே கிடைக்குமாம்! எப்படி
வாஷிங்டன்: அமெரிக்காவில் டிரம்ப் வந்தது முதலே ஹெச் 1-பி விசா குறித்து மிக பெரிய விவாதமே நடந்து வருகிறது. அவர் பிறப்புரிமை அடிப்படையிலான குடியுரிமை வழங்குவதை மொத்தமாக டிரம்ப் தடை விதித்தார். இதற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ள போதிலும், இதில் தெளிவற்ற ஒரு சூழலே நிலவி வருகிறது. ஆனால், வெறுமன பணம் கொடுத்து மட்டும் ஒருவரால் அமெரிக்கக் குடியுரிமையை நேரடியாக வாங்க முடியும் என்றால் நம்ப முடிகிறதா! ஆனால், இது உண்மைதான். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற உடனேயே டிரம்ப் பல அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். குறிப்பாக ஹெச் 1-பி விசா தொடர்பாக மிக முக்கிய நிர்வாக உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.

பிறப்புரிமை அடிப்படை:
இத்தனை காலமாக அமெரிக்காவில் பிறப்புரிமை அடிப்படையில் குடியுரிமை வழங்கப்பட்டு வந்தது. அதாவது பெற்றோர் சட்டவிரோதமாகவே அமெரிக்காவில் குடியேறி இருந்தாலும் அவர்களின் குழந்தைகள் அமெரிக்காவில் பிறந்தால்.. அக்குழந்தைகளுக்கு அமெரிக்கக் குடியுரிமை கிடைக்கும். இந்த பிறப்புரிமை அடிப்படையில் குடியுரிமை வழங்குவதைத் தான் நிறுத்துவதாக டிரம்ப் அறிவித்தார். ஆனால், இதற்கு அந்நாட்டின் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இப்படி இதில் தெளிவற்ற சூழல் நிலவி வருகிறது.
டிரம்பின் உத்தரவால் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் மட்டுமின்றி, ஹெச் 1 பி விசா, எல் 1 விசா போன்ற தொழிலாளர் தற்காலிக விசா பெற்று அமெரிக்காவில் தங்குவோருக்குக் குழந்தை பிறந்தாலும் அமெரிக்கக் குடியுரிமை கிடைக்காது. அதாவது இத்தனை காலம் ஹெச் 1 விசா பெற்று அமெரிக்காவுக்குச் சென்ற இந்தியத் தம்பதிக்கு அங்குக் குழந்தை பிறந்தால் அமெரிக்கக் குடியுரிமை கிடைக்கும். ஆனால், டிரம்ப் உத்தரவு செயல்பாட்டிற்கு வந்துவிட்டால், பிறக்கும் குழந்தைகளுக்கு அமெரிக்கக் குடியுரிமை கிடைக்காது.

அமெரிக்க வாழ் இந்தியர்கள்:
ஹெச் 1 விசா மூலம் அதிகம் பயன்பெறும் நாடாக இந்தியா உள்ள நிலையில், இந்த உத்தரவு அமெரிக்காவில் வாழும் இந்தியர்களுக்கு மிகப் பெரிய கவலையை ஏற்படுத்துவதாக உள்ளது. இது அங்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பெரும் பணக்காரர்களால் காசு கொடுத்தால் நேரடியாக அமெரிக்கக் குடியுரிமையே கிடைக்கும் சூழல் தான் இருக்கிறது.
எப்படி:
இதைத் தான் EB-5 விசா திட்டம் என்கிறார்கள். அதில் அமெரிக்காவில் 8 லட்சம் டாலர் (6.9 கோடி ரூபாய்) முதல் 10.5 லட்சம் டாலர் வரை (9 கோடி ரூபாய்) வரை முதலீடு செய்யும் வெளிநாட்டினால் நேரடியாகக் குடியுரிமையைப் பெற முடியும். அமெரிக்காவில் வளர்ச்சி அடையாத பகுதிகளில் முதலீடு செய்து, குறைந்தபட்சம் 10 அமெரிக்கர்களுக்கு வேலை கொடுப்போர் இதன் மூலம் குடியுரிமை பெறலாம்.
அதாவது அமெரிக்க அரசு Targeted Employment Area என்று அறிவித்துள்ள பகுதிகளில் 8 லட்சம் டாலரும், இதர கிராமப்புற பகுதிகளில் 10.5 லட்சம் டாலர்களும் முதலீடு செய்தால் போதும். அவர்களுக்கு EB-5 விசா வழங்கப்படும். அதை வைத்து 12-18 மாதங்களில் அதை வைத்து பிஆர் எனப்படும் நிரந்தர குடியிருப்பு உரிமையை வாங்கலாம். ஐந்து ஆண்டுகள் பிஆர் வைத்திருந்தால் நேரடியாக அமெரிக்கக் குடியுரிமைக்காகவே விண்ணப்பிக்கலாம்.

பல தளர்வுகள்:
மற்ற விசா முறைகளை விட இதுபோல முதலீடு செய்து விசா வாங்கி குடியுரிமை வாங்குவது தான் எளிமையானது. இதற்கான காத்திருப்பு நேரமும் ரொம்பவே குறைவு. மேலும், இத்திட்டத்தில் ஒருவர் குடியுரிமை பெற்றால் அவர்களின் மனைவி மற்றும் 21 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கும் எளிதாகக் குடியுரிமை கிடைக்கும். அமெரிக்கா மற்ற விசா திட்டங்களில் ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகள் நன்கு தெரிந்திருக்க வேண்டும். ஆனால், இதில் மொழி தெரிந்திருக்கத் தேவையில்லை.
இது மட்டுமின்றி குறைந்தபட்ச படிப்பு அல்லது வேலைவாய்ப்பு அனுபவம் என எதுவுமே தேவையில்லை. உங்களால் சுமார் 7 கோடி முதல் 10.5 கோடி ரூபாய் வரை முதலீடு செய்து, 10 அமெரிக்கர்களுக்கு வேலை தர முடிந்தால் 5-8 ஆண்டுகளில் அமெரிக்கக் குடியுரிமையே நேரடியாகக் கிடைத்துவிடும்.











Click it and Unblock the Notifications