இது தான் ரியல் "எந்திரன்"! வாக்கிங், இடுப்பை அசைத்து டான்ஸ் வேற.. எலான் மஸ்கின் அடுத்த பாய்ச்சல்
வாஷிங்டன்: உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், டெஸ்லா சார்பில் நடத்தப்பட்ட நிகழ்வு ஒன்றில் ஹுமனோய்டு ரோபோட் ஒன்றை அறிமுகப்படுத்தினார்.
உலகில் டாப் பணக்காரர்களில் ஒருவர் அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்க். டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை நடத்தி வரும் இவர், தொடர்ச்சியாகப் பல புதிய கண்டுபிடிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
அப்படித்தான் இன்று டெஸ்லா சார்பில் நடத்தப்பட்ட நிகழ்வு ஒன்றில் அட்டகாசமான ஹுமனோய்டு ரோபோட் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இது பலரது கவனத்தையும் ஈர்த்து உள்ளது.

டெஸ்லா
அமெரிக்க எலக்டிரிக் கார் நிறுவனமான டெஸ்லா சார்பில் ஆண்டுதோறும் AI (செயற்கை நுண்ணறிவு) தினம் கொண்டாடப்படும். இதில் பல புதிய கண்டுபிடிப்புகள் அறிமுகப்படுத்தப்படும். அப்படித்தான் இந்த ஆண்டு நடைபெற்ற நிகழ்வில் எலான் மஸ்க் மனித வடிவில் இருக்கும் ஹுமனோய்டு ரோபோவை அறிமுகம் செய்தார். பார்க்க மனிதர் போலவே இருக்கும் இந்த ரோபோவின் பெயர் ஆப்டிமஸ் ஆகும்.

காரின் விலையை விட குறைவு
இந்த ரோபோவுக்கு காலுக்குப் பதில் சக்கரம் இருந்தது. மேடையில் அழகாக முன்னே வந்த அந்த ரோபோ அனைவரையும் நோக்கி கை அசைத்து பார்வையாளர்களைப் பரவசப்படுத்தியது. அதேநேரம் இது இறுதி வடிவம் இல்லை என்றும் அதை முற்றிலுமாக முடிக்க இன்னும் சில காலம் ஆகும் என்றும் எலான் மஸ்க் தெரிவித்தார். மேலும், வரும் காலத்தில் காரின் விலையை விட ரோபோக்களின் விலை குறைவாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இடுப்பை ஆட்டி நடனம்
டெஸ்லா நிறுவனம் தனது கார்களில் இருக்கும் ஆட்டோ டிரைவ் சாப்ட்வேரை ரோபோவுக்கு அளித்து உள்ளது. இதன் மூலம் யார் மீதும் மோதாமல் பாதுகாப்பாக நடக்க முடியும் என்று கூறப்பட்டு உள்ளது. அதேபோல இந்த நிகழ்வில் மற்றொரு ரோபோவும் காண்பிக்கப்பட்டது. வெளி நிறுவனங்கள் தயாரித்த பாகங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த ரோபோ, மேடையில் மெல்ல நடந்து வந்தது. மேலும், அது இசைக்கு ஏற்ப இடுப்பை ஆட்டி நடனமும் ஆடியது.

எலான் மஸ்க்
இந்த நிகழ்ச்சியில் பேசிய எலான் மஸ்க், "மிக விரைவாக மனிதர்களுக்குப் பயன் தரும் ரோபோவை உருவாக்குவது தான் எங்கள் இலக்கு. இதில் நாங்கள் செல்ல வேண்டிய தூரம் நிறைய உள்ளது என்பது தெரியும். இந்த ரோபோவால் இதைத் தாண்டி பல விஷயங்களைச் செய்ய முடியும். இப்போது நாங்கள் தான் அதைக் காட்டவில்லை.

வறுமையை ஒழிப்போம்
இதன் விலை $20,000க்கும் (இந்திய மதிப்பில் ரூ. 16 லட்சம்) குறைவாக இருக்கும். சரியாக வடிவமைத்தால் இதன் விலை காரின் விலையை விடக் குறைவாகவே இருக்கும். ரோபோக்களை சரியாக நாம் பயன்படுத்தினால், வறுமை இல்லாத எதிர்காலத்தை நம்மால் உருவாக்க முடியும். தேவையான அனைத்து விஷயங்களையும் நம்மால் எளிதாக பெற முடியும். இது நமது மனித நாகரிகத்தின் அடுத்தகட்ட பாய்ச்சலாக இருக்கும்" என்றார்.

ஆபத்தா
சில ஆண்டுகளுக்கு முன்பு இதே எலான் மஸ்க் செயற்கை நுண்ணறிவு மனிதக்குலத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் என ஒருமுறை எச்சரித்து இருந்தார். இப்போதும் அதைக் குறிப்பிட்ட மஸ்க், சரியான விதத்தில் செயற்கை நுண்ணறிவை உருவாக்கினால் அது மனிதக் குலத்திற்கு பேருதவியாக இருக்கும் என்றும் அதைத் தான் டெஸ்லா நிறுவனம் செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications