அவதாருக்கும் இந்து மதத்திற்கும் இப்படியொரு தொடர்பா! இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனே சொல்கிறார்! சுவாரசியம்
வாஷிங்டன்: அவதார் 2 திரைப்படம் இப்போது ரிலீசாகி வெற்றிகரமாகத் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த மெகா ஹிட் திரைப்படத்திற்கும் இந்து மதத்திற்கும் ஒரு தொடர்பு உள்ளதாக அத்திரைப்படத்தின் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனே கூறியுள்ளார்.
அவதார் 2 திரைப்படம் ரீலிசாகி திரையரங்குகளில் சக்கை போடு போட்டு வருகிறது. மிகப் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகியுள்ள அவதார் 2 திரைப்படத்தைக் காண ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.
இந்தியா உட்பட உலகெங்கும் இந்தத் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பே கிடைத்து வருகிறது. இத்திரைப்பட இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனுக்கும் இந்தியாவுக்கும் அதிலும் குறிப்பாக நமது ஆன்மீகத்திற்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. அது என்னவென்று பார்க்கலாம்.

மிரள வைக்கும் அவதார் 2
கடந்த 2009ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான அவதார் திரைப்படத்தின் தொடர்ச்சியே இந்த படம். அவதார் தி வே ஆப் வாட்டர் என்ற பெயரில் வெளியாகியுள்ள இத்திரைப்படத்திற்குப் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இத்திரைப்படத்தை 250 கோடி டாலர் செலவில், அதாவது இந்திய மதிப்பில் 2000 கோடி ரூபாய் மதிப்பில் பார்த்துப் பார்த்துச் செதுக்கியுள்ளார் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன். இதுவரை ஹாலிவுட்டில் வெளியான படங்களிலேயே அதிக செலவில் உருவான படம் இது எனச் சொல்லப்படுகிறது.

பிரம்மாண்டம்
படம் ரீலிஸாகி இதுவரை இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதுவரை 50 கோடி டாலருக்கும் மேல் இந்தத் திரைப்படம் வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படி மெகா படத்தை எடுத்தவர் ஜேம்ஸ் கேமரூன்.. தி ரேட்மினேட்டர், டைடானிக் என இவர் எடுத்த அத்தனை படங்களுமே ஹிட். அவதார் படத்திற்குப் பிறகு சுமார் 12 ஆண்டுகள் கழித்து அவதார் 2 ரீலிசாகியுள்ளது. இத்தனை ஆண்டுகள் ஆனாலும், கூட அவர் படத்தைப் பார்த்துப் பார்த்துச் செதுக்கியுள்ளார். இதைப் படத்தைப் பார்த்த அனைவராலும் உணர முடியும்.

இந்து மதம்
இந்த ஜேம்ஸ் கேமரூனுக்கும் இந்தியாவுக்கும், அதிலும் குறிப்பாக இங்குள்ள ஆன்மீகத்திற்கும் ஒரு தொட இருக்கிறது. இந்து மதத்தால் உத்வேகம் அடைந்ததாகவும் இந்து மதத்தின் ஆன்மீக உணர்வை ஏற்படுத்த முடிந்ததாகவும் அவரே தெரிவித்துள்ளார். பல ஆண்டுகளுக்கு முன்பு, அவதார் முதல் பாகம் வெளியான போது அளித்த பேட்டியில் அவர் இதைக் குறிப்பிட்டிருந்தார். மேலும், இந்து புராணங்களால் மிகவும் ஈர்க்கப்பட்டதாகவும், அவதார் ஆழ் மனதில் (subconsciously) இந்தியாவுடன் இணைக்கப்பட்ட ஒன்றாக உள்ளதாகவும் அவர் அந்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.

அவதார்
அவதார் என்ற வார்த்தையே சமஸ்கிருத வார்த்தையான அவதாரா என்பதிலிருந்து வந்தது.. இதற்கு "வம்சாவளி" என்று பொருளாகும்.. இந்து மதத்தின்படி, இறைவன் மனித வடிவில் பூமிக்கு வருவதே அவதாரமாகும். கடந்த 2010இல், ஜேம்ஸ் கேமரூன் டெல்லி வந்திருந்த போது, இந்து புராணங்களின் மீதான தனது காதல் குறித்துப் பேசியிருந்தார்.. மேலும், தனது திரைப்படத்தின் ஐடியா மதங்களில் இருந்து எப்படி வந்தது என்பது குறித்தும் அவர் விளக்கிப் பேசினார்.

புராணங்கள்
அந்த பேட்டியில் இயக்குநர் கேமரூன், "எனக்கு இந்து மத்தில் உள்ள அனைத்துமே ரொம்ப பிடிக்கிறது.. இதில் உள்ள புராணங்கள், இந்து மதம் கோட்பாடுகள் என அனைத்துமே அருமை.. நான் இந்து மதம் குறித்து இவ்வளவு நெருக்கமாகக் குறிப்பிட விரும்பவில்லை.. நீங்கள் பார்த்தீர்கள் என்றால் ஒன்று தெளிவாகத் தெரியும். எனது படைப்பான அவதாரும் இதற்கும் ஆழ்நிலையில் ஒரு தொடர்பு உள்ளது.. இப்படிச் செய்ததில் நான் யாரையும் புண்படுத்தவில்லை என்று நம்புகிறேன்" என்று அவர் தெரிவித்தார்.

அவதார் என்றால் என்ன
இதற்கும் முன்பு, கடந்த 2007ஆம் ஆண்டு டைம் இதழுக்கு அளித்த பேட்டியில் ஜேம்ஸ் கேமரூன் இது தொடர்பாக மேலும் விளக்கமாகப் பேசியிருந்தார். அவதார் என்றால் என்ன? என்ற கேள்விக்குப் பதிலளித்த கேமரூன், "இந்து மதத்தின்படி அவதார் என்றால் இந்து கடவுள்களில் ஒருவரின் அவதாரம் என்று அர்த்தம். அவதார் படத்தில் எதிர்காலத்தில் மனித தொழில்நுட்பம் மூலம் தொலைதூரத்தில் உள்ள உடலுக்குள் மனிதனால் செல்ல முடிகிறது. இது தான் எனது அவதார்" என்று கூறியிருந்தார்.

அவதார் 2
இப்படி அவதார் திரைப்படத்திற்கும் இந்து மத்திற்கும் இடையே உள்ள தொடர்பை அவரே பல ஆண்டுகளுக்கு முன்பு விளக்கியுள்ளார். கடந்த 2009இல் வெளியான அவதார் திரைப்படம் முழுக்க முழுக்க பண்டோரா காடுகளில் நடப்பது போலப் படமாக்கப்பட்டிருக்கும். அதேநேரம் தற்போது வெளியாகியுள்ள அவதார் 2 பண்டோராவில் உள்ள கடல்களில் நடப்பது போலப் படமாக்கப்பட்டுள்ளது. இதில் வரும் ஒவ்வொரு சீன்களிலும் பிரம்மாண்டம் தனியாகவே தெரியும்.

அடுத்தடுத்த பாகங்கள்
அவதார் திரைப்படம் 5 பாகங்களாக வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அவதார் 2 மற்றும் 3ஆம் பாகங்கள் ஒன்றாகவே ஷூட் செய்யப்பட்டது. அவதார் 2 இப்போது வெளியாகியுள்ள நிலையில், அவதார் 3ஆம் பாகம் 2026 டிச. 20ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல அவதார் 4ஆம் பாகத்தில் வரும் குழந்தைகளின் போர்ஷன்களுக்கான படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கிவிட்டது. அவதார் 4, 2026 டிச. 18ஆம் தேதியும் அவதார் 4, 2028 டிச.22ஆம் தேதியும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தால் அவதார் 6,7 பாகங்களின் ஐடியாவும் தன்னிடம் உள்ளதாகவும் அதை எடுப்பேன் என்றும் ஜேம்ஸ் கேமரூன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications