"என்னமோ நடக்குது.." திடீரென சுருங்கும் கிரகங்கள்.. என்ன காரணம்? வியப்பின் உச்சத்தில் ஆய்வாளர்கள்
வாஷிங்டன்: சூரிய குடும்பத்திற்கு வெளியே இருக்கும் கிரகங்களின் ஏன் திடீரென சிறியதாக மாறுகிறது என்பது குறித்து ஆய்வாளர்கள் சில முக்கிய கண்டுபிடிப்பை மேற்கொண்டுள்ளனர்.
நமது பிரபஞ்சத்தில் பல ஆயிரம் கிரகங்கள் இருக்கிறது. தொடர்ச்சியாகப் பல கிரகங்கள் புதிதாக உருவாகியும், அழிந்தும் வருகிறது. அவை குறித்து நமது ஆய்வாளர்கள் தொடர்ச்சியாக ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

நமது பிரபஞ்சத்தில் இருக்கும் பல்வேறு கிரகங்கள் திடீர் திடீரென சுருங்குவதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். இதற்கிடையே இப்போது ஏன் இப்படிச் சுருங்குகிறது என்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்,
புது ஆய்வு: நாசாவின் கெப்லர் விண்வெளி டெலஸ்கோப்பை பயன்படுத்தி இந்த ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். எக்ஸோப்ளானெட்டுகள் (Exoplanets) ஏன் சுருங்குகிறது என்பதை ஆய்வாளர்கள் விளக்கியுள்ளனர். எக்ஸோப்ளானெட்டுகள் என்பவை சூரியக் குடும்பத்திற்கு வெளியே உள்ள கிரகங்கள் ஆகும். இவை அங்கே நமது சூரியனைப் போல தங்கள் நட்சத்திரத்தைச் சுற்றி வரும். இதுவரை 5000 எக்ஸோப்ளானெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த எக்ஸோப்ளானெட்டுகள் சிறிய சிறிய கற்கள் சைஸில் இருந்து பூமியை விட மிகப் பெரிய கிரகங்கள் வரை இருக்கும். இந்த ஆய்வு முடிவுகள் தி அஸ்ட்ரோனமிகல் ஜர்னல் என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் இதற்கான காரணத்தை ஆய்வாளர்கள் விளக்கியுள்ளனர்.
மொத்தம் 5000: இது குறித்து அவர்கள் கூறுகையில், "இதுவரை 5,000க்கும் மேற்பட்ட எக்ஸோப்ளானெட்டுகளை உறுதி செய்துள்ளோம். அதில் பல்வேறு கிரகங்களால் அதன் சைஸை தக்க வைக்க முடிவதில்லை. காலப்போக்கில் அதன் சைஸ் சுருங்கிவிடுகிறது" என்று கூறப்பட்டுள்ளது.
இந்த எக்ஸோப்ளானெட்டுகளில் போதுமான மாஸ், அதாவது நிறை இல்லாவிட்டால், அதன் ஈர்ப்பு விசை குறைந்துவிடும். அப்படி ஈர்ப்பு விசை குறைந்தால் அதனால் வளிமண்டலத்தைத் தக்கவைக்க முடியாத சூழல் ஏற்படும். இதன் மூலம் அதன் சைஸ் குறையும் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
என்ன காரணம்: இதற்கு photoevaporation அல்லது core-powered mass loss என இரண்டில் எதாவது ஒன்று தான் காரணமாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் கருதினர். அதில் core-powered mass loss காரணமாக இப்படி நடப்பதை இப்போது ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அதாவது கிரகத்தின் மையம் அதீத வெப்பமாக இருக்கும் நிலையில், அதில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சு படிப்படியாக வளிமண்டலத்தை வெளிப்புறமாகத் தள்ளுகிறது. இதுவே வளிமண்டலத்தை அந்த கிரகங்கள் தக்க வைக்க முடியாமல் போவதற்குக் காரணமாக இருக்கிறது. ஆனால், இவை எல்லாம் ஏதோ ஓரிரு ஆண்டுகளில் நடந்து விடாது. இந்த செயல்முறை எல்லாம் முழுமையாக நடந்து முடிக்க 100 கோடி ஆண்டுகள் வரை ஆகும் என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
எதற்கு உதவும்: இவை சோலர் சிஸ்டத்திலும் இல்லை. அப்படியிருக்கும் போது இந்த கிரகங்களில் நடக்கும் மாற்றம் நமக்கு எந்த வகையில் உதவும் என்ற கேள்வி உங்களுக்கு வரும். இந்த ஆய்வுகள் ஒரு கிரகம் எப்படித் தோன்றி பரிணமித்து அழிகிறது என்பதைக் கண்டறிய உதவும்.
மேலும், இந்த எக்ஸோப்ளானெட்டுகளின் வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றத்தை ஆய்வு செய்வதன் மூலம், அங்கே உயிர்களால் உயிர் வாழ முடியுமா என்பதையும் கண்டறியலாம். நாசா கடந்த சில ஆண்டுகளாகவே இதுபோன்ற ஆய்வுகளைத் தீவிரப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications