"இந்தியாவை எதிரியாக்கும் அதிபர் டிரம்ப்.." வரி தொடர்பாக அமெரிக்க ஊடகங்கள் சொல்வது என்ன
வாஷிங்டன்: இந்தியப் பொருட்கள் மீது டிரம்ப் 50% வரியை அறிவித்துள்ளார். ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதால் இந்த வரிகளை டிரம்ப் அறிவித்துள்ளார். இது இரு நாட்டு உறவைக் கடுமையாகப் பாதிக்கும் வகையில் இருக்கிறது. டிரம்பின் இந்த அறிவிப்பு தொடர்பாகப் பிரபல அமெரிக்க ஊடகங்கள் என்ன சொல்கிறது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
இந்தியா அமெரிக்கா இடையே கடந்த பல ஆண்டுகளாகவே சிறப்பான உறவே இருந்து வந்தது. இந்தச் சூழலில் டிரம்ப் தடாலடியாகக் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தியப் பொருட்கள் மீது முதலில் 25% வரியை அறிவித்தார். இந்த பதற்றம் ஓய்வதற்குள்ளாகவே டிரம்ப் மேலும் 25% வரியை அறிவித்தார். இதன் மூலம் இந்தியாவுக்கான அமெரிக்க வரி 50%ஆக உயர்ந்துள்ளது. இது இது தரப்பு உறவுகளைக் கடுமையாகப் பாதிப்பதாக உள்ளது. டிரம்பின் இந்த வரி தொடர்பாக அமெரிக்க ஊடகங்கள் என்ன சொல்கிறது என்பதை நாம் பார்க்கலாம்.

பொருளாதார எதிரி
இது தொடர்பாக நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், அமெரிக்க-இந்தியா உறவுகளில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, சீனாவின் ஆதிக்கத்தைச் சமாளிக்க இந்தியாவை ஒரு முக்கிய கூட்டணியாக அமெரிக்கா கருதியது. கடந்த சில ஆண்டுகளில் இந்தியா அமெரிக்கா உறவு நெருக்கமானது பிரதான காரணம் இதுதான். ஆனால் இப்போதைய அமெரிக்க வர்த்தகக் கொள்கை இந்தியாவைப் பொருளாதார எதிரி என்ற நிலைக்குத் தள்ளுகிறது என்று நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
இந்த வரிகள் இந்தியா உடனான அமெரிக்காவின் புவிசார் அரசியல் உறவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என நியூயார்க் டைம்ஸ் குறிப்பிடுகிறது. இது இந்தியாவை ரஷ்யா மற்றும் சீனாவுடன் மேலும் நெருக்கமாக்கும் அபாயம் உள்ளதாகவும் கூறுகிறது. மேலும், சீனாவின் ஆதிக்கத்தை ஆசியாவில் கட்டுப்படுத்தும் அமெரிக்கா இந்தியா உறவு முக்கியமானதாகக் கருதப்படும் நிலையில், அதையும் இது பலவீனப்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அச்சுறுத்தலாக மாறும்
அமெரிக்கா-இந்தியா உறவுகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக சிஎன்என் குறிப்பிடுகிறது.. இந்தியாவின் மீது அமெரிக்கா எடுத்துள்ள நிலைப்பாட்டை ஆக்ரோஷமானது என்று குறிப்பிடும் சிஎன்என், இது இரு நாடுகளின் உறவுக்கு அச்சுறுத்தலாக அமையலாம் என சுட்டிக்காட்டுகிறது. மேலும், சீனா உட்பட மற்ற நாடுகளுக்கு அமெரிக்கா வரி விதிக்காததை இந்திய அதிகாரிகள் சுட்டிக்காட்டி நிலையில், அதை சிஎன்என் மேற்கோள் காட்டியுள்ளது.
மேலும், இந்த பொருளாதாரத் தடைகளால் இந்தியாவின் அமெரிக்க ஏற்றுமதி 40-50% வரை குறைக்கக்கூடும் என சிஎன்என் எச்சரித்துள்ளது. குறிப்பாக ஜவுளி, ஆபரணங்கள் மற்றும் வாகன உதிரிப் பாகங்கள் போன்ற துறைகள் இதனால் பாதிக்கப்படும் என்று சிஎன்என் தெரிவிக்கிறது. இந்த நிலைப்பாடு இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் நெருங்குவதற்கு வழிவகுக்கும் என்ற கவலையை சிஎன்என் எழுப்பியுள்ளது.
இந்தியா, ரஷ்யா, சீனா
வாஷிங்டன் போஸ்ட் நிறுவனமும் கூட ஏறத்தாழ, சிஎன்என் குறிப்பிடுவதையே சொல்கிறது. டிரம்பின் இந்த பொருளாதாரத் தடைகள் இந்தியா உடனான வர்த்தகத்தை 40% வரை பாதிக்கலாம் என்றும் குறிப்பாக ஜவளித்துறை, லெதர் மற்றும் கடல் உணவுகளின் ஏற்றுமதியில் பாதிப்பு அதிகமாக இருக்கும் எனக் குறிப்பிடுகிறது.
இந்தியா அமெரிக்கா இடையேயான உறவு கடந்த சில ஆண்டுகளாக மிகச் சிறப்பாக இருந்ததாக வாஷிங்டன் போஸ்ட் குறிப்பிடுகிறது. அதேநேரம் டிரம்ப் திடீரென அறிவித்த இந்த வரிகள் இந்தியா, ரஷ்யா மற்றும் சீனா நாடுகள் மேலும் நெருக்கமாக வழிவகுக்கும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications