அமெரிக்க துணை அதிபராகும் இந்திய வம்சாவளி பெண்ணின் கணவர்.. யார் இந்த வான்ஸ்? உஷா சிலுக்குரி தெரியுமா?
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றதால் இந்திய வம்சாவளி பெண் உஷா வான்ஸின் கணவரான ஜே.டி.வான்ஸ் அமெரிக்காவின் துணை அதிபராகிறார். அமெரிக்காவின் தற்போதைய துணை அதிபரான கமலா ஹாரிஸ், நடந்து முடிந்துள்ள அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த நிலையில், புதிய துணை அதிபராக, இந்திய வம்சாவளி பெண்ணின் கணவர் வரவிருக்கிறார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் அமெரிக்க முன்னாள் அதிபரும் குடியரசுக் கட்சி வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். ஜனநாயக கட்சி வேட்பாளரும், தற்போதைய அமெரிக்க துணை அதிபருமான கமலா ஹாரிஸ் தோல்வியை சந்தித்துள்ளார். டிரம்ப் மெஜாரிட்டிக்கு தேவையான 270க்கும் அதிகமான எலக்ட்டோரல் வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். எனவே, டிரம்ப் வென்று மீண்டும் அமெரிக்காவின் அதிபராகிறார்.

மீண்டும் அதிபராகும் டிரம்ப்: அதிபர் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, டொனால்ட் டிரம்ப் நிகழ்த்திய உரையில், "நாம் அமெரிக்காவின் எல்லையை பாதுகாக்க போகிறோம். இது அமெரிக்க வரலாற்றில் இதுவரை காணாத மிகப்பெரிய வெற்றி. அமெரிக்காவை மாற்றப் போகிறோம். அமெரிக்காவின் ஒவ்வொரு விஷயங்களையும் மாற்றி நமது நாட்டை சரி செய்யப்போகிறோம். அமெரிக்காவின் பொற்காலமாக இருக்கப்போகிறது. வலிமையான, வளமான அமெரிக்காவை உருவாக்குவோம்" எனத் தெரிவித்தார்.
மேலும், தனது நண்பரும், துணை அதிபராக பதவியேற்க உள்ளவருமான ஜே.டி.வான்ஸ் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜே.டி.வான்ஸின் மனைவி உஷா சிலுக்குரி வான்ஸ் ஆகியோரையும் பாராட்டினார் டிரம்ப். துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படும் ஜே.டி. வான்ஸுக்கு வாழ்த்து தெரிவிப்பதில் நான் முதல் ஆளாக இருக்க விரும்புகிறேன் என டிரம்ப் கூறியுள்ளார்.
துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்: ஜோ பைடன் தலைமையிலான அரசின் துணை அதிபராக இருந்து வரும் கமலா ஹாரிஸ் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இந்த நிலையில் டொனால்டு டிரம்ப் இந்த தேர்தலில் ஆட்சியை பிடித்துள்ள நிலையில், இந்திய வம்சாவளியை சேர்ந்த உஷா சிலுக்குரி வான்ஸின் கணவரான ஜே.டி.வான்ஸ், துணை அதிபராக தேர்வாகிறார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த உஷா சிலுக்குரி, ஆந்திர மாநிலம் வட்லூருவை பூர்வீகமாக கொண்டவர். உஷாவின் தாத்தா சென்னையில் பணியாற்றியபோது, உஷாவின் அப்பா சென்னையில் பிறந்தவர். உஷாவின் பெற்றோர், 70களில் அமெரிக்கா நாட்டின் கலிபோர்னியாவின் சான்டியாகோ பகுதியில் குடியேறினர். பிறந்தது முதல் அங்கேயே வசித்து வரும் உஷா, அமெரிக்காவின் தேசிய சட்ட நிறுவனத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.
யார் இந்த உஷா வான்ஸ்?: உஷா வான்ஸ், 1986 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 6 ஆம் தேதி பிறந்தவர். அவருக்கு வயது தற்போது 38. உஷா சிலுக்குரி வான்ஸ், யேல் பல்கலைக்கழகத்தில் வரலாற்று பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் எம்.பில் பட்டம் பெற்றுள்ளார். தொடர்ந்து சான்பிரான்சிஸ்கோவில் உள்ள ஒரு புகழ்பெற்ற சட்ட நிறுவனத்தில் ஒரு கார்ப்பரேட் வழக்கறிஞராகப் பணியாற்றினார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் மற்றும் நீதிபதி பிரட் கவனாக் ஆகியோரிடம் கிளார்க் ஆக பணியாற்றியுள்ளார் உஷா வான்ஸ்.

கடந்த 2014 இல் முறையாக டெமாக்ரடிக் கட்சியில் இணைந்தார். உஷா சிலுக்குரியும் ஜே.டி.வான்ஸ்-ம் முதன்முதலில் யேல் சட்டக் கல்லூரியில் ஒரு விவாத நிகழ்ச்சியின்போது சந்தித்தனர். இவர்களுக்கு மத்தியில் காதல் ஏற்பட்டு, 2014 இல் கென்டக்கி நகரத்தில் இருவரும் இந்து மற்றும் கிறிஸ்தவ முறைகளின்படி திருமணம் செய்துகொண்டனர். தற்போது உஷா - ஜே.டி.வான்ஸ் தம்பதியருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.
உஷா - வான்ஸ் காதல் திருமணம்: உஷாவின் காதல் கணவர் ஜேம்ஸ் டேவிட் வான்ஸ், ஓகியோ மாகாண செனட்டராக செயல்பட்டவர். ஜேடி வான்ஸ் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவின் இரண்டாவது பெண்மணியாக பணியாற்றும் முதல் இந்திய வம்சாவளி பெண் என்ற பெருமையை உஷா சிலுக்குரி வான்ஸ் பெறுகிறார்.
"எனக்கு என்னவென்றே தெரியாத கேள்விகளுக்கு கூட பதில் அறிந்து வைத்திருக்கிறார் உஷா. எனக்குத் தெரியாத பல்வேறு வாய்ப்புகள் பற்றியும் என்னுடைய மனைவிதான் என்னிடம் கூறினார். அவருடைய புத்திசாலித்தனம் பற்றி பலருக்கும் தெரியவில்லை. ஆயிரம் பக்கங்களைக் கொண்ட புத்தகத்தைக் கூட சில மணி நேரங்களில் வாசித்துவிடுவார். தைரியம் தந்து என்னை வழிகாட்டும் ஒரு பெண் உஷா" என்று தனது மனைவி பற்றி புகழ்ந்து பேசி இருக்கிறார் ஜே.டி.வான்ஸ்.












Click it and Unblock the Notifications