"அமெரிக்காவின் ஹிட்லர்" என தன்னை சாடியவரையே துணை அதிபர் வேட்பாளராக தேர்வு செய்த டிரம்ப்! என்ன காரணம்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் துணை அதிபர் வேட்பாளராக ஓஹியோவைச் சேர்ந்த குடியரசுக் கட்சியின் செனட்டரான ஜே.டி.வான்ஸை டிரம்ப் தேர்வு செய்துள்ளார். ஒரு காலத்தில் டிரம்பை மிகக் கடுமையாக விமர்சித்து, அமெரிக்காவின் ஹிட்லர் என்று கூட சாடியவர் தான் இந்த வான்ஸ். ஆனால், அவரை தான் இப்போது டிரம்ப் துணை அதிபர் வேட்பாளராகத் தேர்வு செய்துள்ளார்.
அமெரிக்காவில் குடியரசு கட்சியின் தேசிய மாநாடு இப்போது நடக்கிறது. ஜூலை 18ம் தேதி வரை நடக்கும் இந்த மாநாட்டில் தான் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அக்கட்சியின் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட உள்ளார்.

அமெரிக்காவைப் பொறுத்தவரை அதிபர் வேட்பாளர்கள் தான் தங்கள் துணை அதிபர் வேட்பாளர்களைத் தேர்வு செய்வார்கள். இதை அவர்கள் Running mate என்று அழைப்பார்கள்.
துணை அதிபர் வேட்பாளர்: அதன்படி டிரம்ப் இன்று தனது துணை அதிபர் வேட்பாளரைத் தேர்வு செய்தார். அதன்படி ஓஹியோவைச் சேர்ந்த குடியரசுக் கட்சியின் செனட்டரான ஜே.டி.வான்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.. 39 வயதான வான்ஸ், ஒரு காலத்தில் ட்ரம்பை கடுமையாக விமர்சித்தவர். ஆனால் அதன் பின்னர் டிரம்பின் ஆதரவாளராக மாறிய வான்ஸ், பல்வேறு காலகட்டத்திலும் டிரம்பிற்கு உறுதுணையாக இருந்துள்ளார்.
மில்வாக்கியில் குடியரசுக் கட்சியின் தேசிய மாநாடு தொடங்கியுள்ள நிலையில், டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "திறமையான பலரது பெயர்களைப் பரிசீலனை செய்தோம். இறுதியில் நீண்ட ஆலோசனைக்குப் பிறகு, அமெரிக்காவின் துணை அதிபர் பதவிக்கு மிகவும் பொருத்தமானவர் ஓஹியோ மாகாணத்தின் செனட்டர் ஜே.டி. வான்ஸ் என்று நான் முடிவு செய்துள்ளேன்" என்று டிரம்ப் பதிவிட்டுள்ளார்.
யார் இவர்: கடந்த 1984 ஆகஸ்ட் 2ஆம் தேதி ஓஹியோவின் மிடில்டவுனில் பிறந்தவர் வான்ஸ். அமெரிக்க ராணுவத்தில் பணிபுரிந்துள்ள வான்ஸ், மரைன் கார்ப்ஸ் பிரிவில் ஈராக் போரில் பணியாற்றி இருக்கிறார். அதன் பின்னர் ஓஹியோ மாநில பல்கலைக்கழகம், யேல் சட்டப் பள்ளியில் பட்டம் பெற்றார்.
வான்ஸ் கடந்த 2016ஆம் ஆண்டு "ஹில்பில்லி எலிஜி" என்ற புத்தகத்தை எழுதி இருந்தார். அது அந்த ஆண்டு அதிகம் விற்பனையான புத்தங்களில் ஒன்றாக இருந்தது. அது நெட்ஃபிக்ஸில் படமாகவும் எடுக்கப்பட்டது. அதில் வெள்ளை இன உழைக்கும் வர்க்கத்தினர் எதிர்கொள்ளும் கலாச்சார மற்றும் பொருளாதார சவால்களை அவர் விவரித்திருந்தார்.
டிரம்பை விமர்சித்தவர்: அதேநேரம் இவர் முன்பு டிரம்பை மிகக் கடுமையாக விமர்சித்து வந்தவர். 2016 காலகட்டத்தில் டிரம்பை "தீங்கு விளைவிக்கும் நபர்" மற்றும் "மோசமான நபர்" என்று எல்லாம் விமர்சித்துள்ளார். ஒரு கட்டத்தில் அவர் டிரம்பை "அமெரிக்காவின் ஹிட்லர்" என்று கூட குறிப்பிட்டுள்ளார்.
இந்தளவுக்குக் கடுமையாக விமர்சித்த வான்ஸ், டிரம்ப் அதிபரான பிறகு அவரது செயல்பாடுகளால் கவர்ந்தார். அதன் பிறகு அவர் டிரம்பை பல முறை பாராட்டி இருக்கிறார். தொடர்ந்து 2021இல் வான்ஸ் முதல்முறையாகத் தேர்தல் அரசியலில் நேரடியாகக் களமிறங்கினார். அவருக்கு டிரம்ப் ஆதரவும் இருந்தது. ஓஹியோவில் போட்டியிட்ட அவர், அத்தேர்தலில் வென்று செனட் உறுப்பினர் ஆனார். சட்ட விரோத குடியேற்றத்தால் ஏற்படும் பொருளாதார விளைவுகள், வேலைவாய்ப்பு குறித்து அவர் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.
இந்தியா தொடர்பு: இவரது மனைவி உஷா சிலுக்குரி வான்ஸ்.. கலிபோர்னியாவின் சான் டியாகோவை சேர்ந்த அவரது பெற்றோர் இந்தியாவில் இருந்து அங்குச் சென்று செட்டிலானவர்கள் ஆகும். இதன் மூலம் இந்திய வம்சாவளியினர் வாக்குகளையும் கவர முடியும் என்று டிரம்ப் நம்புகிறார்.












Click it and Unblock the Notifications