வெறும் 18 வயது.. 28 மில்லியன் டாலர் கொடுத்து ஸ்பேஸ் பயணம்.. யார் இந்த இளைஞர்
வாஷிங்டன்: இன்று ப்ளூ ஆர்ஜின் ராக்கெட் மூலம் விண்வெளிக்குச் சென்றதன் மூலம் மிகக் குறைந்த வயதில் விண்வெளிக்குச் சென்ற நபர் என்ற சாதனையை 18 வயதே ஆன நெதர்லாந்து நாட்டை சேர்ந்த ஆலிவர் டேமன் படைத்துள்ளார்.
Recommended Video
விண்வெளி குறித்த ஆய்வுகளைக் கடந்த நூற்றாண்டிலேயே உலக வல்லரசு நாடுகள் தொடங்கிவிட்டன. 50 ஆண்டுகளுக்கும் மேலாக விண்வெளியில் வல்லரசு நாடுகள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்தன.
இப்போது 21ஆம் நூற்றாண்டில் வல்லரசு நாடுகளைக் காட்டிலும் தனியார் நிறுவனங்கள் ஸ்பேஸ் டிராவலில் அதிகம் ஆர்வம் காட்டுகின்றன.

விண்வெளி பயணம்
கடந்த வாரம் தான் பிரிட்டனைச் சேர்ந்த கோடீஸ்வரர் ரிச்சர்ட் பிரான்சன் தனது விர்ஜின் கேலக்டிக் நிறுவனத்திற்குச் சொந்தமான யூனிட்டி 22 விண்கலம் மூலம் பயணித்திருந்தார். இந்நிலையில், இன்று அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் தனது ப்ளூ ஆர்ஜின் ராக்கெட் மூலம் விண்வெளிக்குச் சென்றார். அவருடன் மொத்தம் நான்கு பேர் விண்வெளிக்குப் பயணித்தனர்.

யார் அந்த 18 வயது இளைஞர்
ஜெஃப் பெசோஸுசுடன் அவரது சகோதரர் மார்க் பெசோஸ், 82 வயதான பைலட் வாலி ஃபங்க் ஆகியோர் விண்வெளிக்குச் சென்றனர். இவர்கள் மூவருடன் 18 வயதே நிரம்பிய இளைஞன் ஒருவரும் விண்வெளிக்குச் சென்றார். இதன் மூலம் மிகக் குறைந்த வயதில் விண்வெளிக்குச் சென்றவர் எனச் சாதனையைப் படைத்துள்ளார். இந்த இளைஞர் தனது டிக்கெட்டிற்கு 28 மில்லியன் டாலர் கொடுத்துள்ளார், இருப்பினும், விண்வெளி பயணத்திற்கு சில நாட்கள் வரை அந்த 18 வயது இளைஞர் யார் என்பது ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது.

ஆலிவர் டேமன்.
கடந்த சில நாட்களுக்கு முன் தான் அந்த 18 வயது இளைஞர் குறித்த தகவல்களை ப்ளூ ஆர்ஜின் வெளியிட்டது. அந்த நபரது பெயர் ஆலிவர் டேமன். இவர் நெதர்லாந்து நாட்டின் கோடீஸ்வரரான ஜோஸ் டேமன் என்பவரது மகன். ஜோஸ் டேமன் அங்கு சோமர்செட் கேபிடல் பார்ட்னர்ஸின் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். பள்ளிப் படிப்பை முடித்துள்ள ஆலிவர் டேமன், பைலெட் லைசென்ஸ் வாங்க கல்லூரி படிப்பிற்கு ப்ரேக் விட்டுள்ளார்.

எலான் மஸ்க்
இன்றைய ப்ளூ ஆர்ஜின் ராக்கெட்டின் ஸ்பேஸ் பயணத்தின் மூலம் மிகக் குறைந்த வயதில் விண்வெளிக்குச் சென்றவர் என்ற பெருமையை ஆலிவர் டேமன் பெற்றுள்ளார். ஜெஃப் பெசோசுஸடன் விண்வெளிக்குச் சென்ற போதும் இவருக்கு டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தான் ரோல்மாடலாம். எலான் மஸ்க் வேறு யாருமில்லை, ஸ்பேஸ் சுற்றுலாத் துறையில் ஜெஃப் பெசோஸுக்கு கடும் போட்டி தந்து கொண்டிருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications