பத்தே நிமிடம்.. 28000 அடி சரிந்து அப்படியே யூடர்ன் போட்ட விமானம்! அடுத்து பகீர்.. வெலவெலத்த பயணிகள்
வாஷிங்டன்: நடுவானில் பறந்து கொண்டிருக்கும் விமானம் வெறும் 10 நிமிடத்தில் சடசடவென 28,000 அடி சரிந்துள்ளது. இதனால் உள்ளே இருந்த பயணிகள் பதறிப்போனார்கள். விமானத்தில் என்ன நடந்தது என்பதைப் பார்க்கலாம்.
உலகிலேயே மிகவும் பாதுகாப்பான பயண முறைகளில் ஒன்றாக விமான பயணங்கள் இருக்கிறது. தினசரி உலகெங்கும் பல ஆயிரம் விமானங்கள் இயக்கப்படும் போதும் விமானத்தால் ஏற்படும் உயிரிழப்புகள் என்பது ரொம்பவே அரிதாகவே ஏற்படும்.

விமான பயணங்களில் கடைப்பிடிக்கப்படும் கடுமையான பாதுகாப்பு நெறிமுறைகளே இதற்கு காரணமாகும். இதற்கிடையே நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம் அதிர்ச்சி அளிக்கும் விதமாக மடமடவென சரிந்த ஒரு சம்பவம் நடந்துள்ளது.
சரிந்த விமானம்: அமெரிக்காவில் இருக்கும் முக்கிய ஏர்லைன்ஸ்களில் ஒன்று யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம். இந்த விமானம் தான் வெறும் 10 நிமிடத்தில் 28,000 அடி சரிந்துள்ளது. மேலும், திடீரென வந்த வழியிலேயே திரும்பியுள்ளது. மேலும் 10 நிமிடத்தில் அடுத்தடுத்து நடந்த இந்தச் சம்பவத்தால் உள்ளே இருந்த பயணிகள் மிரண்டு போனார்கள்.
அந்த விமானம் நியூயார்க்கில் இருந்து ரோம் நகருக்குச் சென்று கொண்டிருந்தது. அப்போது தான் திடீரென விமானம் மளமளவெனச் சரிந்து, நியூ ஜெர்சி நோக்கித் திரும்பியுள்ளது. விமானத்தின் கேபின் அழுத்தத்தில் சிக்கல் ஏற்பட்டதே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
என்ன நடந்தது: அந்த போயிங் 777 ரக விமானத்தில் 270 பயணிகளும் 14 பணியாளர்களும் இருந்ததாகவும் அவர்கள் அனைவருமே இப்போது பாதுகாப்பாகவே இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தால் விமானத்தில் இருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இருப்பினும், நல்வாய்ப்பாக இதில் யாருக்கும் எந்தவொரு மோசமான பாதிப்பு அல்லது காயம் ஏற்படவில்லை என்றும் விமான நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது.
நியூயார்க்கில் இருந்து ரோம் சென்ற அந்த விமானம் லிபர்ட்டி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உள்ளூர் நேரப்படி இரவு 8:37 மணிக்கு புறப்பட்டுள்ளது. இருப்பினும், அது 12:27 மணிக்கு மீண்டும் விமான நிலையத்தில் தரையிறங்கியது. விமான கேபினில் திடீரென அழுத்தம் குறைந்த நிலையில், அதைச் சரி செய்யவே விமானம் மீண்டும் நியூயார்க் திரும்பியதாகக் கூறப்பட்டுள்ளது.
மாற்று விமானம்: விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியதாகத் தெரிவித்த விமான நிறுவனம் விமானத்தில் அச்சுறுத்தும் வகையில் பிரச்சினை இல்லை என்றும் விமானத்தில் சிறு பிரச்சினை மட்டுமே இருந்ததாகவும் கூறியிருக்கிறது. இந்த பிரச்சினை காரணமாகவே விமானம் 10 நிமிடங்களில் சுமார் 28,000 அடி சரிந்துள்ளது.
விமானத்தில் ஏற்பட்ட சின்ன பிரச்சினை காரணமாக அது மீண்டும் பாதுகாப்பாக நியூயார்க் விமான நிலையத்தில் தரையிறங்கிய நிலையில், உள்ளே இருந்த பயணிகள் மற்றொரு விமானத்திற்கு மாற்றப்பட்டு அவர்கள் பாதுகாப்பாக ரோம் நகருக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
முதல்முறை இல்லை: முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதேபோன்று மற்றொரு சம்பவம் இதே யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்தில் நடந்தது. அப்போது விமானம் மௌயில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் திடீரென இதுபோல பல ஆயிரம் அடி சரிந்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் இந்தச் சம்பவம் நடந்தது. யுனைடெட் ஏர்லைன்ஸின் UA1722 விமானம், மௌயின் இருந்து சான்பிரான்ஸிக்கோ செல்லும் போது பிரச்சினை ஏற்பட்டது.
அப்போது விமானம் நிமிடத்திற்கு 8,600 அடி வேகத்தில் சரிந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 775 அடி வரை சரிந்த நிலையில், அதன் பின்னரே அது மீண்டும் கட்டுப்பாட்டிற்கு வந்து இருக்கிறது.












Click it and Unblock the Notifications