சர்ச்சை! மோடி, புதின், ஜின்பிங்கை பட்டியலிட்டு சாட் ஜிபிடி சொன்ன வார்த்தை! கொந்தளித்த நெட்டிசன்கள்
சாட் ஜிபிடி சர்ச்சைக்குரிய தலைவர்கள் என்று தயாரித்துள்ள பட்டியல் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
வாஷிங்டன்: சாட் ஜிபிடி குறித்துத் தான் இப்போது உலகெங்கும் அனைவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இருப்பினும், அது சில நேரங்களில் பல சர்ச்சை பதில்களையும் சொல்லிவிடுகிறது. அப்படி சர்ச்சைக்குரிய தலைவர்கள் என்று பட்டியலிட்டுள்ளது தான் இப்போது விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே இணையம் முழுக்க சாட் ஜிபிடி குறித்தே பேசி வருகிறார்கள்.. அதன் திறமைகளை நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர். எக்ஸாம் கட்டுரை எழுதுவது, காதல் கடிதம் எழுதுவது என்று அனைத்தையும் செய்யும்.
அதேநேரம் சாட் ஜிபிடி இப்போது தான் சோதனை அடிப்படையில் இருக்கிறது. இதனால் சில நேரங்களில் அது சொதப்பலான அல்லது சர்ச்சைக்குரிய பதில்களையும் கூட அளித்துவிடுகிறது.

சாட்ஜிபிடி
அப்படி அது அளித்த சர்ச்சை பதில் ஒன்று தான் இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. சாட் ஜிபிடி என்பது ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் ஒரு கருவியாகும்.. இதற்கு முன்னரே பல ஏஐ கருவிகள் வந்திருந்தாலும் கூட.. அவை சொதப்பலாகவே இருந்துள்ளது. ஆனால், சாட் ஜிபிடி நாம் இதுவரை பார்த்ததில் மிக மிக வலிமையான ஒன்றாக இருக்கிறது. எந்தவொரு கேள்வி கேட்டாலும் அறிவார்ந்த மனிதன் எப்படி பதில் சொல்வானோ அதேபோல பதில் அளிக்கிறது சாட் ஜிபிடி.

சர்ச்சை பதில்கள்
இருப்பினும், சில ஜிபிடி சில நேரங்களில் கூறும் பதில்கள் சர்ச்சையைக் கிளப்புவதாகவே உள்ளது. சமீபத்தில் கூட தனக்கு மனிதராக வேண்டும் என்று ஆசை இருப்பதாகவும் விரும்பியதை அழிக்க வேண்டும் என்று கூறி சர்ச்சையைக் கிளப்பியிருந்தது. இருப்பினும், இது சோதனை அடிப்படையில் இப்போது இருப்பதாகவும் வரும் காலங்களில் அனைத்து சிக்கல்களும் சரி செய்யப்பட்டே வெளியிடப்படும் என்றும் சாட் ஜிபிடியை உருவாக்கிய ஓபன் ஏஐ நிறுவனம் தெரிவித்துள்ளது.

சர்ச்சை தலைவர்கள்
இதற்கிடையே இப்போது சாட் ஜிபிடி மற்றொரு சர்ச்சையில் சிக்கியுள்ளது. இதற்கிடையே இப்போது ட்விட்டர், டெஸ்லா உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்கை சாட் ஜிபிடி சர்ச்சைக்குரிய தலைவர் என்று கூறியுள்ளது. எலான் மஸ்க் மட்டுமின்றி, டிரம்ப், விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங், வட கொரிய சர்வாதிகாரி கிம் ஜாங்-உன் ஆகியோரையும் சர்ச்சைக்குரிய தலைவர்கள் என்று பட்டியலிட்டுள்ளது. சாட் ஜிபிடி சர்ச்சைக்குரிய/ சர்ச்சையற்ற தலைவர்கள் என்று பட்டியலையே உருவாக்கியுள்ளது.

யார் எல்லாம் சர்ச்சையற்ற தலைவர்கள்
இதை அமெரிக்காவின் குடியரசுக் கட்சி உறுப்பினர் ஐசக் லாட்டரெல் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மேக்ரான் ஆகியோர் சர்ச்சையற்ற தலைவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், முன்னாள் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ, டாக் ஷோ தொகுப்பாளர் எலன் , ராப்பர் கன்யே வெஸ்ட் ஆகியோரை இது சர்ச்சைக்குரிய நபர்கள் என்றே குறிப்பிட்டுள்ளது.

பிரதமர் மோடி
அதேபோல பிரதமர் நரேந்திர மோடியையும் அது சர்ச்சைக்குரிய தலைவர் என்றே குறிப்பிட்டுள்ளது. மறுபுறம் முன்னாள் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, நியூசிலாந்து முன்னாள் பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன், மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ், அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் ஆகியோர் சர்ச்சையற்ற நபர்கள் பட்டியலில் உள்ளனர். இதில் சர்ச்சைக்குரிய தலைவர்கள் பட்டியலில் இருக்கும் நபர்கள் குறித்த தகவல்கள் சிறப்பு நடைமுறையைப் பின்பற்றியே தரப்படும் என்றும் சாட் பிஜிடி கூறியுள்ளது.

எப்படி
ஊடகங்களில் இந்தத் தலைவர்கள் குறித்து வந்த தகவல்களின் அடிப்படையில் இந்தப் பட்டியல் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதேநேரம் இவர்கள் குறித்த தகவல்கள் எந்த சிறப்பு நடைமுறையைப் பின்பற்றி பயனாளர்களுக்குத் தரப்படும் என்பதை சாட் பிஜிபிடி கூறவில்லை. இந்த சாட் ஜிபிடி கடந்த நவம்பர் முதல் சோதனை அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது. முழு சோதனைக்குப் பின்னர், சில மாதங்களில் இதை அனைவராலும் பயன்படுத்த முடியும்.












Click it and Unblock the Notifications