ஆயுதங்கள் காலி.. ஈரானை தாக்குவதை திடீரென நிறுத்திய அமெரிக்கா.. டிரம்ப் திட்டத்தில் திடீர் மாற்றம்!
வாஷிங்டன்: ஈரான் மீது தொடர்ந்து கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக இரவு நேரங்களில் தொடர்ந்து வான்வழி தாக்குதல்களை நடத்தி வந்த அமெரிக்கா, நேற்று இரவு எந்தத் தாக்குதலையும் நடத்தவில்லை. பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கவுள்ளது இதற்கு ஒரு காரணமாக சொல்லப்பட்டாலும் உண்மையில் அமெரிக்காவின் ஆயுத கையிருப்பு குறைவதாகவும் அதுவே தாக்குதல் நிறுத்தப்பட காரணம் என்றும் சொல்லப்படுகிறது.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கு இடையே மீண்டும் மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. இடையில் சில நாட்கள் போர் நிறுத்தம் ஏற்பட்டாலும் மீண்டும் தாக்குதல் ஆரம்பித்தது. ஆனால், இன்று காலை திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

தாக்குதல் இல்லை
ஒரு வாரத்திற்கு மேலாக அதிகாலை ஏவுகணை தாக்குதல் தொடர்ந்த நிலையில், இப்போது திடீரென தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் பதற்றம் சற்றே குறைந்துள்ளதா என்ற கேள்வியை இது எழுப்பியுள்ளது. மேலும், அமெரிக்கா ஈரான் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
அதேநேரம் இதற்கு வேறு ஒரு காரணத்தையும் சொல்கிறார்கள். அதாவது மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க படைகளிடம் முக்கிய ஏவுகணை கையிருப்பு குறைந்து வருகிறதாம். ராணுவ நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்த இதுவும் கூட ஒரு காரணமாக இருக்கலாம் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்க ராணுவ நடவடிக்கைகள்
ஈரான் மீதான அமெரிக்க ராணுவ நடவடிக்கைகள் தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் சிஎன்என் தெரிவித்துள்ளது.. ஏவுகணை தடுப்பு அமைப்புகள் மற்றும் பிற பாதுகாப்பு ஆயுதங்களின் கையிருப்பு வேகமாக குறைந்து வருவதால், தாக்குதலை மேலும் தீவிரப்படுத்த வேண்டாம் என்றும் இப்போதைக்கு தாக்குதலை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து வெள்ளை மாளிகையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் மற்றும் அமெரிக்க ராணுவத்தின் உயரதிகாரி ஜெனரல் டான் கேன் ஆகியோர் விரிவாக ஆலோசித்துள்ளனர். மேலும், போரை தீவிரப்படுத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்து அதிபர் டொனால்ட் டிரம்பிடம் எச்சரிக்கை விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
டிரம்ப்
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "ஈரானுடன் தற்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அவர்கள் இப்போது பேச தயாராக இருப்பதாக தெரிகிறது. அதேநேரம் ஒப்பந்தம் எட்டப்படவில்லை என்றால், இதைவிட மிகப் பெரிய அளவில் தாக்குதல் நடத்தப்படும்" என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் போர் ஆரம்பித்த போது, இந்த போர் நான்கு அல்லது ஐந்து வாரங்களில் முடிந்துவிடும் என்று டிரம்ப் கூறியிருந்தார். ஆனால் தற்போது அது ஐந்தாவது மாதத்தை நெருங்கியுள்ளது. இந்தாண்டு இறுதியில் அமெரிக்காவில் மிட் டேரம் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இது டிரம்பின் செல்வாக்கை பாதிக்க தொடங்கியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
ஹார்முஸ் ஜலசந்தி
ஹார்முஸ் ஜலசந்தியை மையமாக கொண்டு தொடங்கிய மோதல் தற்போது சவுதி அரேபியா வரை பரவியுள்ளது. ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள், சவுதியின் ஜிசான் மற்றும் யன்பு பகுதிகளில் உள்ள அரம்கோ எண்ணெய் நிலையங்களை ஏவுகணைகளால் தாக்கியுள்ளனர்.. இதற்கு முந்தைய நாள் தான் ஹவுதி கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் மீது சவுதி வான்வழி தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது. இப்படி மாறி மாறி தாக்குதல் நடப்பதால் மத்திய கிழக்கு முழுக்க பதற்றம் அதிகரித்துள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியை பொறுத்தவரை அங்கும் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. முழுமையாக முடங்கவில்லை என்றாலும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. உலகின் முக்கிய கச்சா எண்ணெய் போக்குவரத்து பாதையாக இருக்கும் இந்த ஜலசந்தியில் பதற்றம் நீடிப்பது சர்வதேச எண்ணெய் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.


Click it and Unblock the Notifications
