"தலை தப்பியது." கடன் உச்சவரம்பை உயர்த்த ஒப்புதல்.. அமெரிக்கா முடிவு சர்வதேச அளவில் முக்கியம் ஏன்
வாஷிங்டன்: அமெரிக்காவில் கடன் உச்ச வரம்பு விவகாரத்தில் ஆளும் தரப்பு மற்றும் எதிர்க்கட்சிகளிடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் அமெரிக்கா டிபால்ட் ஆவது தவிர்க்கப்பட்டுள்ளது. இது ஏன் சர்வதேச அளவில் முக்கியம் என்பதைப் பார்க்கலாம்.
பொதுவாகவே எந்தவொரு அரசும் இங்க கடன் தான் முக்கியமானது. கடன் வாங்கியே எந்தவொரு அரசும் இயங்கும். அது மத்திய அரசாக இருந்தாலும் சரி, மாநில அரசாக இருந்தாலும் சரி இதுவே எதார்த்தம். ஆனால், எவ்வளவு கடன் வாங்குகிறார்கள், அதை எதற்குப் பயன்படுத்துகிறார்கள் என்பதும் முக்கியம்.
உலக வல்லரசான அமெரிக்காவிலும் இதுவே தான் நடக்கும். அங்கும் கடன் வாங்கியே அரசு நடக்கும். அதேநேரம் இந்தியாவைப் போல வரைமுறை இல்லாமல் எல்லாம் அங்கே கடன் வாங்க முடியாது.

அமெரிக்கா:
கடன் வாங்க எனத் தனியாக ஒரு வரம்பை வைத்திருப்பார்கள். அந்தளவுக்குக் கடனை வாங்கலாம். அந்த வரம்பை எட்டிவிட்டால், எதிர்க்கட்சி மற்றும் ஆளும்கட்சிகளின் ஒப்புதலுடன் இந்த உச்ச வரம்பு உயர்த்தப்படும். இது ஒரு சாதாரண நிர்வாக செயல்முறை. ஆனால், ஒவ்வொரு முறையும் இதை அங்குள்ள அரசியல்வாதிகள் அரசியலாக்கிவிடுவார்கள். கடன் வரம்பை உயர்த்த ஒப்புதல் தராமல் எதிர்க்கட்சிகள் கடைசி வரை அரசியல் செய்வார்கள்.
இந்த முறையும் கிட்டதட்ட அதே தான் நடந்தது. சில வாரங்கள் மட்டுமே இருந்த நிலையில், கடன் வரம்பை உயர்த்தியாக வேண்டிய சூழல் ஏற்பட்டது. இருப்பினும், எதிர்க்கட்சிகள் முரண்டு பிடித்தன. இதனால் அமெரிக்காவே முடங்கும் சூழல் ஏற்பட்டது. இது பொருளாதார ரீதியாக அமெரிக்காவுக்குப் பெரிய இழப்பை ஏற்படுத்தும். இதற்கு முன்பு கடந்த 2011ஆம் ஆண்டு ஒபாமா அதிபராக இருந்த காலத்தில் இதேபோன்ற ஒரு நெருக்கடி ஏற்பட்டது.
ஒப்புதல்:
இருப்பினும், இந்த முறை அவ்வளவாக நிலைமை மோசமாகவில்லை. அமெரிக்க அதிபர் பைடன் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் கெவின் மெக்கார்த்தி ஆகியோர் $31.4 டிரில்லியன் கடன் உச்சவரம்பை உயர்த்தும் ஒரு தற்காலிக ஒப்பந்தத்தை எட்டியுள்ளனர். கடந்த ஒரு மாதமாக இதில் இழுபறி நிலவிய நிலையில், ஒரு வழியாக உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் அமெரிக்க டிபால்ட் ஆவது தடுக்கப்பட்டுள்ளது.
ஓரிரு விஷயங்களைத் தவிர பெரும்பாலான விஷயங்களில் இரு தரப்பிற்கும் இடையே ஒப்புதல் ஏற்பட்டுவிட்டதாகவே கூறப்படுகிறது. கடன் வரம்பை உயர்த்துவது குறித்து பைடன் மற்றும் மெக்கார்த்தி ஆகியோர் நேற்று 90 நிமிடங்கள் தொலைப்பேசியில் விவாதித்துள்ளனர்.

இந்த ஒப்பந்தம் பொருளாதார ரீதியாகச் சீர்குலைவைத் தவிர்க்கும். ஜூன் 5ஆம் தேதிக்குள் கடன் உச்ச வரம்பை உயர்த்தவில்லை என்றால் அரசின் பணிகள் பாதிக்கப்படும் என்ற சூழல் இருந்த நிலையில், அது தவிர்க்கப்பட்டுள்ளது.
என்ன டீல்:
அங்கு இப்போது எதிர்க்கட்சியாக உள்ள குடியரசுக் கட்சியினர் அரசின் செலவுகளைக் குறைக்க வேண்டும் என்றும் அப்போது தான் கடன் உச்ச வரம்பை உயர்த்த அனுமதி அளிப்போம் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். வேகமாக அதிகரிக்கும் அமெரிக்காவின் கடனை இது குறைக்க உதவும் என்பது அவர்களின் வாதமாக இருக்கிறது. அமெரிக்காவின் கடன் என்பது இப்போது அந்நாட்டின் வருடாந்திர உற்பத்திக்கு இணையாக உள்ளது.
கடன் உச்ச வரம்பில் ஒப்புதல் கிடைத்துள்ள நிலையில், இது குறித்த விரிவான தகவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும், பாதுகாப்புத் துறை அல்லாத செலவினங்களை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குக் குறைக்க பைடன் தரப்பு ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து கடன் வரம்பை உயர்த்த அனுமதி அளித்துள்ளனர். இதன் மூலம் அமெரிக்கா டிபால்ட் ஆவது தவிர்க்கப்பட்டுள்ளது.
ஏன் முக்கியம்:
அமெரிக்காவில் இப்போது பொருளாதார மந்த நிலை ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. இதுவரை அங்கே அதிபராக இருக்கும் பைடன் மீது பெரியளவில் மக்கள் எதிர்ப்பு இல்லை. இந்த பொருளாதார நெருக்கடிக்கு பைடனின் தவறான நிர்வாகமே காரணம் என்ற பிரசாரத்தை முன்னெடுக்கக் குடியரசு கட்சி முயல்கிறது. அதேநேரம் மந்தநிலை ஏற்பட்டால் எதிர்க்கட்சிகள் கடைசி வரை கடன் உச்ச வரம்பு விவகாரத்தில் ஒப்புக் கொள்ளாததே காரணம் என்று பதிலடி பைடன் தரப்பு முடிவு செய்திருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தச் சூழலில் தான் தான் சில நாட்களுக்கு முன்னரே கடன் உச்ச வரம்பை அதிகரிக்க இரு தரப்பும் ஒப்புதல் அளித்துள்ளனர். எப்போதுமே அமெரிக்கப் பொருளாதாரத்தை மையமாகக் கொண்டே உலக பொருளாதாரம் இருக்கும். கடன் உச்ச வரம்பை அதிகரிக்க ஒப்புதல் அளிக்காமல் இருந்திருந்தால், சர்வதேச அளவில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும். அந்த சூழல் இப்போது தவிர்க்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications