இந்தியர்கள் தான் பெஸ்ட்.. அமெரிக்கா வளர உதவுறாங்க.. "கன்னி" பேச்சில் பாராட்டி தள்ளிய அமெரிக்க எம்பி
வாஷிங்டன்: அமெரிக்காவில் இந்தியர்களின் மக்கள்தொகை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அங்குள்ள குடியரசு கட்சியின் எம்பி இந்தியர்களைப் புகழ்ந்து பேசியுள்ளார்.
இந்தியர்கள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி வருகிறார்கள். குறிப்பாக ஐடி துறையில் இந்தியா முக்கிய இடத்தில் உள்ள நிலையில், உலகின் பல்வேறு நாடுகளுக்கும் இந்தியர்கள் சென்று பணியாற்றி வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக அமெரிக்காவுக்கு இந்தியர்கள் அதிகம் சென்று வருகின்றனர். அமெரிக்காவில் கலிபோர்னியா உள்ளிட்ட சில மாகாணங்களில் இந்தியர்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர்.

அமெரிக்கா
அங்கு வசிக்கும் இந்தியர்கள் அதிகம் சம்பாதிக்கும் இடங்களிலேயே உள்ளனர். மேலும், அரசியல் அரங்கிலும் இந்தியர்கள் முக்கிய இடத்தில் உள்ளனர். குறிப்பாக அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ் கூட இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் தான். இப்படி அமெரிக்காவில் இந்தியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஐடி உள்ளிட்ட பல துறைகளில் இந்தியர்களின் பங்கு தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இதனிடையே அமெரிக்காவில் குடியரசு கட்சியைச் சேர்ந்த எம்பி ஒருவர் இந்தியர்கள் அமெரிக்காவில் அதிகப்படியாக வரியைக் கட்டுவதாகப் புகழ்ந்து பேசியுள்ளார்.

அதிக வரி
அமெரிக்க எம்பி ரிச் மெக்கார்மிக், இந்திய அமெரிக்கர்கள் ஒரு முன்மாதிரியாக இருப்பதாகவும் அமெரிக்காவின் வளர்ச்சியில் உதவுவதாகவும் பாராட்டினார். மொத்த அமெரிக்க மக்கள் தொகையில் 1% இருந்தபோதிலும், இந்திய- அமெரிக்கர்கள் 6% வரி செலுத்துகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார். அமெரிக்காவில் சமீபத்தில் மிட் டேர்ம் தேர்தல் நடைபெற்றது.. அதில் ஜார்ஜியாவின் 6வது மாவட்டத்தில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டு வென்றவர் சேர்ந்த ரிச் மெக்கார்மிக்... முதல்முறையாக அமெரிக்க நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் தனது கன்னிப் பேச்சிலேயே இந்தியர்களைப் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

அதிகம் உழைக்கும் இந்தியர்கள்
அமெரிக்க நாடாளுமன்றத்தில் ரிச் மெக்கார்மிக் தனது கன்னிப் பேச்சில், "இந்த நேரத்தில் நான் எனது தொகுதியைச் சேர்ந்தவர்களுக்கு.. குறிப்பாக இந்தியாவில் இருந்து குடியேறியவர்களைப் பாராட்டிக் கொள்கிறேன்.. எனது தொகுதியில் மட்டும் சுமார் ஒரு லட்சம் பேர் இந்தியாவில் இருந்து குடியேறியவர்கள் உள்ளனர். இவர்கள் எனது தொகுதியில் மிகப் பெரியவர்கள்.. எங்கள் தொகுதியில் இருக்கும் ஐந்து மருத்துவர்களில் ஒருவர் இந்திய-அமெரிக்காவைச் சேர்ந்தவர். இந்திய அமெரிக்கர்கள் அதிகம் உழைக்கிறார்கள். சட்டத்தை மதிக்கும் குடிமக்களாக உள்ளனர்.

பிரச்சினை இல்லை
இந்திய-அமெரிக்கர்கள் எந்தவொரு பிரச்சினைகளையும் ஏற்படுத்துவதில்லை. அவர்கள் அனைத்து சட்டங்களையும் முறையாகப் பின்பற்றுகிறார்கள்.. போதைப்பொருள் பயன்பாடு மற்ற சமூகங்களிடையே அதிகரித்துள்ள போதிலும்.. உங்களால் இந்தியர்களை எந்தவொரு மருத்துவமனைகளிலும் போதைப்பொருள் பயன்பாடு காரணமாகப் பார்க்க முடியாது.. ஏனென்றால் அவர்களுக்கு வேலையும் குடும்பமும் தான் முக்கியம்.. அமெரிக்கக் குடும்பங்களை பிரதிநிதிப்படுத்தும் நபர்களில் அவர்கள் சிறந்தவர்கள்.. இந்திய மக்களைக் கடவுள் ஆசீர்வதிப்பார்" என்று அவர் தெரிவித்தார்.

நன்றி சொன்ன அமெரிக்க எம்பி
மேலும், மற்றொரு ட்வீட்டில் அட்லாண்டாவில் இந்தியத் தூதரகத்தில் பணியாற்றி வரும் ஸ்வாதி குல்கர்னியை சந்திக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். தனது ட்விட்டரில், "டாக்டர் ஸ்வாதி விஜய் குல்கர்னி அட்லாண்டா தூதரகத்தில் இருந்து இந்தியா திரும்ப உள்ள நிலையில், அதற்கு முன்பு அவரை சந்திக்க வேண்டும்.. சிறந்த குடிமக்களாக இருக்கும் அவருக்கும் ஜார்ஜியாவில் உள்ள எங்கள் அற்புதமான இந்திய-அமெரிக்கச் சமூகத்திற்கும் நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். சிறந்த மக்களை இருந்து சட்டத்தைப் பின்பற்றி அதிக வரி செலுத்தும் இந்தியர்களின் குடியேற்றச் செயல்முறையைச் சீரமைக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.

விசா கிடைப்பதில் சிக்கல்
இருப்பினும் இப்போது இந்தியர்களுக்கு அமெரிக்காவில் விசா கிடைப்பதில் சிக்கல் நிலவுகிறது. விசா கிடைக்கப் பல மாதங்கள் வரை காத்திருக்க வேண்டிய சூழலே நிலவுகிறது. இதனிடையே மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், பிஸ்னஸ் விசா வழங்கும் செயல்முறையை வேகப்படுத்துமாறும் அமெரிக்காவை வலியுறுத்தியுள்ளார், சுமார் 42 லட்சம் இந்திய-அமெரிக்கர்கள் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கர்கள் அங்கு வசிக்கின்றனர். அமெரிக்காவில் வசிக்கும் இனக்குழுக்களில் இந்தியர்கள் முக்கியமானவர்கள் ஆகும்.












Click it and Unblock the Notifications