"வெடிக்கும் டைம் பாம்.." சீனா பற்றி பைடன் சொன்ன "அந்த" வார்த்தை.. என்ன இப்படி சொல்லிட்டாரு! ஷாக்
வாஷிங்டன்: அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே கிட்டதட்ட அறிவிக்கப்படாத ஒரு பனிப்போர் நடந்து வருவது அனைவருக்கும் தெரியும். இதற்கிடையே சீனா குறித்து அமெரிக்க அதிபர் பைடன் கூறிய கருத்துகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த நூற்றாண்டில் அமெரிக்காவுக்கும் அப்போதைய சோவியத் ஒன்றியத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மறைமுக சண்டை தொடர்ந்தது. இதனை வரலாற்று ஆய்வாளர்கள் பனிப்போர் என்று அழைத்தனர்.

இப்போது கிட்டதட்ட அதே ஒரு சூழல் தான் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே இருக்கிறது. இறக்குமதி வரியை உயர்த்து என இரு நாடுகளுக்கும் இடையே கிட்டகட்ட பனிப்போர் தான் இப்போது நிலவி வருகிறது. இதனால் ஒரு வித பதற்றமான சூழலே காணப்படுகிறது.
பைடன்: இதற்கிடையே சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமெரிக்க அதிபர் பைடன், சீனாவை வெடிக்க ரெடியாக இருக்கும் ஒரு டைம் பாம் எனக் குறிப்பிட்டுப் பேசினார். அடுத்தாண்டு அதிபர் தேர்தல் நடைபெறும் நிலையில், அதற்கு நிதி திரட்டும் நிகழ்வு அங்குள்ள உட்டா என்ற இடத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட போது தான் அதிபர் புதின் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார்.
அதிபர் பைடன் மேலும் கூறுகையில், "சீனா ஒரு டிக்கிங் டைம் பாம் போல இருக்கிறது. ஏனென்றால் அங்கு ஏகப்பட்ட பொருளாதார சிக்கல்கள் உள்ளன.. அவர்களின் பலவீனமான வளர்ச்சியின் காரணமாக அவர்கள் சிக்கலில் உள்ளனர். இது நல்லதல்ல, ஏனென்றால் கெட்டவர்களுக்கு எதாவது பிரச்சினை வரும் போது.. அதில் இருந்து விடுபட வேண்டும் என்பதற்காக அவர்கள் மேலும் மேலும் கெடுதல்களைச் செய்கிறார்கள்" என்று அவர் தெரிவித்தார்.
முதல்முறை இல்லை: முன்னதாக கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற மற்றொரு நிதி திரட்டும் விழாவில் ஜி ஜின்பிங்கை "சர்வாதிகாரி" என்று பைடன் குறிப்பிட்டார். அமெரிக்க அதிபர் பைடனின் இந்தக் கருத்துக்குச் சீனா கடுமையாக எதிர்வினையாற்றியிருந்தது. இரு நாடுகளுக்கும் இடையே ஆத்திரமூட்டும் வகையில் அதிபர் பைடனின் கருத்துகள் இருப்பதாகக் கடுமையாகச் சாடினர்.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் அப்போது தான் சீனாவுக்கு சென்று திரும்பியிருந்தார். 1979க்கு பிறகு அமெரிக்க டாப் அமைச்சர் ஒருவர் சீனாவுக்குச் செல்வது இதுவே முதல்முறையாகும். இரு நாடுகளுக்கும் இடையே மோசமான உறவு இருந்த நிலையில், பிளிங்கனின் பயணத்திற்குப் பிறகு நிலைமை சற்று மேம்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், சில நாட்களில் பைடன் இப்படி ஒரே அடியாகச் சர்வாதிகாரி எனக் கூறி பதற்றத்தை அதிகப்படுத்தினார்.

வெடிக்கும் டைம் பாம்: சீன பொருளாதாரம் இப்போது மிகப் பெரிய பிரச்சினையில் இருக்கிறது. அந்நாட்டின் தொழில்துறை தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத வகையில் அந்நாட்டின் பொருளாதாரம் தேக்கமடைந்துள்ளது.. ஊதியங்கள் உயராமல் இருப்பது, பொருட்களின் விலை சரிவு எனப் பல காரணங்களால் சீனாவின் பொருளாதாரம் மிக மோசமாக இருக்கிறது.
இந்த பிரச்சினைகளைக் குறிப்பிட்டே சீனா இப்போது ஒரு வெடிக்கும் டைம் பாம் என்றும் அது எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் என்றும் பைடன் பேசியுள்ளார். சீனா மிகப் பெரிய சிக்கலில் இருக்கிறது என்று குறிப்பிட்ட அவர், தான் சீனாவைக் காயப்படுத்த விரும்பவில்லை என்றும் சீனாவுடன் நல்ல ஒரு உறவை வைத்திருக்கவே விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
கணினி சிப் உள்ளிட்ட சில தொழில்நுட்பங்களில் சீனாவில் அமெரிக்க நிறுவனங்கள் புதிய முதலீடுகளைச் செய்யத் தடை விதிக்கும் சட்டத்தைச் சமீபத்தில் தான் பைடன் கையெழுத்திட்டார். இதற்குச் சீனா மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications