"பிளான் B, C, D.." டிரம்பிற்கு எதிராக சத்தமின்றி இணையும் உலக நாடுகள்.. அமெரிக்காவுக்கு ஆப்பு?
வாஷிங்டன்: சீனா, கனடா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வரி விதித்த நிலையில், அதற்கு அந்த நாடுகளும் பதிலடி கொடுக்க தொடங்கியுள்ளன. இதனால் சர்வதேச அளவில் ஒரு வரிப் போர் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. டிரம்பின் இந்த வரி நடவடிக்கைக்கு எதிராக உலக நாடுகள் எப்படி ஒரே புள்ளியில் இணைகிறது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற நாள் முதலே டிரம்ப், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வெடியை வீசி வருகிறார். இது அமெரிக்காவைத் தாண்டி சர்வதேச அளவிலும் எதிரொலித்தே வருகிறது.

டிரம்ப்
அவர் அதிபராகப் பதவியேற்ற போதே சீனாவுக்குக் கூடுதலாக 10% வரியை அறிவித்த டிரம்ப், அண்டை நாடுகளான மெக்சிகோ மற்றும் கனடா மீது 25% வரி விதிக்கப் போவதாக அறிவித்திருந்தார். அமெரிக்காவுக்குள் சட்டவிரோத குடியேற்றம், போதைப்பொருள் புழக்கம், கேங் கலாச்சாரம் அதிகரிக்க இரு நாடுகளும் எல்லையை முறையாகப் பாதுகாக்கத் தவறியதே காரணம் எனச் சொல்லியே மெக்சிகோ மற்றும் கனடா மீது இந்த வரியை அறிவித்திருந்தார்.
பிப்ரவரி மாதமே இந்த வரி நடைமுறைக்கு வருவதாக இருந்தது. இருப்பினும், சில காரணங்களால் அது 4 வாரங்கள் தள்ளிவைக்கப்பட்டது. இதையடுத்து டிரம்பின் வரி விதிப்பு இன்று (மார்ச் 4) முதல் நடைமுறைக்கு வந்தது. இது சர்வதேச அரசியலில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இந்த வரி முறை அமலுக்கு வந்த உடனேயே அமெரிக்காவுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் கனடா புதிய வரிகளை அறிவித்தன.
கனடா பதிலடி
டிரம்பை சாடிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க இறக்குமதிக்கு வரி விதிக்கும் உத்தரவில் கையெழுத்திட்டார். முதற்கட்டமாக இப்போது 20 பில்லியன் டாலர் மதிப்பிலான அமெரிக்க இறக்குமதிக்கு 25% வரை வரி விதிப்பதாக அறிவித்தார்.
டிரம்ப் தனது செயல்பாடுகளுக்குப் பதில் சொல்லியே தீர வேண்டும் என்ற ட்ரூடோ, அடுத்த 3 வாரங்களில் மேலும் 100 பில்லியன் டாலர் மதிப்பிலான அமெரிக்க இறக்குமதிக்கு வரி விதிக்கப் போவதாகவும் ட்ருடோ அறிவித்தார். அடுத்தகட்ட வரி விதிப்பில் தான் ஆட்டோமொபைல், ஸ்டீல், அலுமினியம் உள்ளிட்ட முக்கிய அமெரிக்க ஏற்றுமதிக்கு வரி விதிக்கப் போகிறது கனடா.. அமெரிக்கா தனது வரிகளை வாபஸ் பெறும் வரை கனடாவின் வரி தொடரும் என்று ட்ரூடோ திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.
பிளான் பி, சி, டி
மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாமும் கூட டிரம்பின் வரியைக் கடுமையாகக் கண்டித்தார். இருப்பினும், டிரம்ப் நடவடிக்கையைப் பொறுத்து இருந்து பார்க்கப் போவதாகவும் அதன் பிறகே பதிலடி கொடுக்கும் வகையில் வரி விதிப்பது குறித்து முடிவெடுப்போம் என கிளாடியா தெரிவித்தார். அவர் மேலும், "எங்களிடமும் பிளான் பி, சி, டி எல்லாம் இருக்கிறது. தேவையான நடவடிக்கையைச் சரியான நேரத்தில் எடுப்போம்" என மட்டும் கிளாடியா கூறினார்.
சீனாவும் விடல
அதேபோல சீனாவும் கூட அமெரிக்காவுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் புதிய வரிகளை அறிவித்துள்ளன. ஏற்கனவே அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி, இயற்கை எரிவாயு உள்ளிட்டவற்றுக்குச் சீனா வரியை அறிவித்து இருந்த நிலையில், இப்போது கோழி, கோதுமை, சோளம் மற்றும் பருத்திக்குக் கூடுதல் 15% வரி விதித்து அறிவித்துள்ளது.
உலக நாடுகள்
இப்படி எல்லா நாடுகளும் மாற்றி மாற்றி வரிகளை விதிக்க தொடங்கியுள்ள நிலையில், இதனால் விலைவாசி உயரும் சூழல் உருவாகியுள்ளது. இது சுற்றிச் சுற்றி ஏழை மற்றும் மிடில் கிளாஸ் மக்களையே பாதிக்கும். இருப்பினும், டிரம்ப் தனது வரி விதிப்பு முடிவை வாபஸ் பெற போவது இல்லை என்பதைத் திட்டவட்டமாகக் கூறிவிட்டார். அவர் ஆட்சியில் இருக்கும் வரை இதுபோன்ற நடவடிக்கை தொடரவே போகிறது.
அதற்குப் பதிலடி தரும் உலக நாடுகள், அமெரிக்கப் பொருட்களுக்கு மீது வரி விதிக்க தொடங்கியுள்ளன. அமெரிக்கா தனது வரியை வாபஸ் பெறும் வரை இது தொடரும் என்பதைத் திட்டவட்டமாக அறிவித்து வருகிறார்கள். டிரம்பின் வரி அறிவிப்புக்கு எதிராக உலக நாடுகள் ஒரே புள்ளியில் வரும் நிலையில், இது சர்வதேச வர்த்தகத்தில் முக்கிய மாற்றத்தைக் கொண்டு வரலாம்.












Click it and Unblock the Notifications