OTT: கேரளா ரசிகர்களை கதிகலங்க வைத்த நயன்தாராவின் கிரைம் திரில்லர்… ஓடிடியில் மிஸ் பண்ண கூடாத படம்!
சென்னை: மலையாள சினிமாவுக்கு தனி ரசிகர்கள் வட்டம் இருப்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம். குறிப்பாக கிரைம், திரில்லர் வகை படங்களுக்கு கேரளாவில் மட்டும் இல்லாமல், தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் ரசிகர்கள் அதிகம். சமீப காலமாக ஓடிடி தளங்கள் மூலம் மலையாள படங்கள் அதிகம் பார்க்கப்படுவதால், அந்த படங்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் ஓபன் ரிவியூவும், பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.
அந்த வரிசையில், நயன்தாரா நடித்த ஒரு மலையாள படம் கேரளா மக்களையே 'பகீர்' அடைய வைத்ததாக பேசப்படுகிறது. 2021ஆம் ஆண்டு வெளியான 'நிழல்' (Nizhal) என்ற கிரைம் திரில்லர் படம் தான் அது. குஞ்சக்கோ போபன் - நயன்தாரா கூட்டணியில் உருவான இந்த படம், திரையரங்குகளில் வெளியான போதே வித்தியாசமான கதையமைப்பால் கவனத்தை ஈர்த்தது. இப்போது ஓடிடியில் இந்தப் படம் தமிழிலும் கிடைப்பதால், மீண்டும் ஒரு முறை பேசுபொருளாக மாறியுள்ளது.

வித்தியாசமான கதை
'நிழல்' படத்தில் குஞ்சக்கோ போபன் அரசு மெஜிஸ்ட்ரேட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒரு விபத்துக்குப் பிறகு, அவருக்கு சில விசித்திரமான அனுபவங்கள் நேரிடுகின்றன. அதற்கிடையில், ஒரு 7 வயது சிறுவனுடன் அவருக்கு நட்பு ஏற்படுகிறது. அந்த சிறுவன் சொல்லும் கதைகள் சாதாரண குழந்தை கற்பனை மாதிரி தோன்றினாலும், அவன் குறிப்பிட்ட இடங்களுக்கு ஹீரோ சென்று பார்க்கும் போது, பல வருடங்களுக்கு முன் நடந்த கொலை சம்பவங்களின் தடயங்கள் அங்கு இருப்பது தெரிய வருகிறது.
கிணறு, சதுப்பு நிலம், பாழடைந்த கிராமம் என சிறுவன் சொல்வது எல்லாமே உண்மையான சம்பவங்களுடன் தொடர்புடையதாக இருக்க, "இந்தக் கதைகளை அந்த சிறுவனுக்கு யார் சொல்றது?" என்ற கேள்வி தான் படத்தின் மையமாக நகர்கிறது. ஒரு ட்விஸ்ட் முடிந்ததும் இன்னொரு ட்விஸ்ட் என படம் முழுக்க மர்மத்தை தூக்கி நிறுத்துகிறது. கிளைமாக்ஸில் வரும் திருப்பம் பலரையும் எதிர்பாராத அளவுக்கு ஆச்சரியப்பட வைத்தது என்பதே இந்தப் படத்திற்கு கிடைத்த முக்கியமான பிளஸ்.
நயன்தாராவின் முக்கியமான ரோல்
இந்தப் படத்தில் நயன்தாரா, சிறுவனின் அம்மாவாக நடித்திருக்கிறார். வழக்கமான க்ளாமர் ரோல்கள் இல்லாமல், கதையின் மர்மத்தை முன்னே நகர்த்தும் முக்கியமான பாத்திரம் அவருக்கானது. நயன்தாராவின் நடிப்பு, குறிப்பாக சில உணர்ச்சிகரமான காட்சிகளில் ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்றது. "ஹீரோயினாக மட்டும் இல்லாமல், கதையின் முக்கிய சாவியாக நயன்தாரா இருந்தது படம் இன்னும் ஸ்ட்ராங்காக தோன்ற காரணம்" என பலரும் விமர்சனம் செய்துள்ளனர்.

ஓடிடியில் கிடைக்கும் நிழல்
'நிழல்' படம் தற்போது சோனி லைவ், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம், சன் நெக்ஸ்ட் போன்ற ஓடிடி தளங்களில் தமிழில் பார்க்க கிடைக்கிறது. மலையாள படங்களை விரும்பி பார்ப்பவர்கள் மட்டுமல்லாமல், கிரைம் திரில்லர் ஜானரை ரசிப்பவர்களுக்கும் இந்த படம் நல்ல அனுபவம் தரும் என்பதே ரசிகர்களின் கருத்து.
சமூக வலைத்தளங்களில் மீண்டும் பேசுபொருள்
ஓடிடியில் படம் கிடைக்க தொடங்கியதிலிருந்து, "மலையாளத்தில் இப்படியும் கதையை சொல்றாங்களா?" என்று வியக்கும் வகையில் பலரும் சமூக வலைத்தளங்களில் இந்தப் படம் குறித்து கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக கிளைமாக்ஸ் ட்விஸ்ட் பற்றி "எதிர்பார்க்கவே முடியல" என்ற ரியாக்ஷன்கள் அதிகம்.
மொத்தத்தில், நயன்தாரா நடித்த 'நிழல்' மலையாள சினிமாவின் கிரைம் திரில்லர் ஸ்டைலுக்கு ஒரு நல்ல உதாரணம். திகில் கலந்த மர்ம கதைகள் பிடிக்கும்னா, இந்தப் படத்தை ஓடிடியில் கண்டிப்பா மிஸ் பண்ணாம பாருங்கன்னு சொல்லலாம்.












Click it and Unblock the Notifications