Ila Ada Recipe: மோமோஸ் என்னங்க பெருசு.. கேரளா ஸ்பெஷல் இலை அடை தெரியுமா?
சென்னை: தெருவுக்கு தெரு இட்லிக் கடை இருப்பது போல இப்போது எங்கு பார்த்தாலும் மோமோஸ் கடைகள் பெருகிவிட்டன. ஆனால், அதற்கெல்லாம் டப்பு கொடுக்கும் அளவுக்கு ஒரு இனிப்பு பண்டம் இருக்கிறதென்றால் தெரியுமா. இனிப்பா நோ வே.. இனிப்பே பிடிக்காது என்பவர்கள் கூட இன்னொன்று கேட்டு வாங்கி சாப்பிடும் அளவுக்கு சுவை மிகுந்த ஒரு பலகாரம் தான் கேரளா ஸ்பெஷல் இலை அடை.
பலகாரம் என்றதும் இந்த இலை அடையை குறைவாக மதிப்பிட்டு விடாதீர்கள். ஒரு வேளை உணவாகக் கூட சாப்பிடலாம் என்கிற அளவுக்கு அடிபொலி சுவையாக இருக்கும். கேரளாவில் பல கடைகளில் இது காலை நேர உணவாகவும் பரிமாறப்படுகிறது. தமிழகத்தில் கூட சில பிரபல தேநீர் கடைகளில் பலகாரமாக பரிமாறப்படுகிறது.

உங்கள் அன்புக் குழந்தைகள் முதல் ஆசைக் கணவர் வரை அத்தனை பேரையும் கட்டிப் போடக்கூடிய இந்த அசத்தல் ரெசிப்பியை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..
இலை அடை செய்யத் தேவையான பொருள்கள்:
1/2 கப் பச்சரிசி மாவு
1/2 கப் தேங்காய்த்துருவல்
1/2 கப் வெல்லம்
1/2 ஸ்பூன் ஏலக்காய்
1 வாழை இலை
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. பச்சரிசி மாவுடன் சிறிதளவு உப்பு போட்டு கலந்து கொள்ள வேண்டும். பின்னர், மாவை இளம் சூடான தண்ணீர் விட்டு கொஞ்சம் கொஞ்சமாக பதமாக சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.
2. பூரணம் செய்வதற்கு இன்னொரு பாத்திரத்தில் துருவிய தேங்காய், பொடித்த வெல்லம் அல்லது கரும்புச் சக்கரை, கால் ஸ்பூன் உப்பு, ஏலக்காய் இடித்து சேர்த்து ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். பூரணம் ரெடி.
3. ஒரு வாழை இலை எடுத்து சிறிது சிறிதாக சதுரம் அல்லது செவ்வக வடிவில் வெட்டி வைத்துக் கொள்ளவும். மாவை கொஞ்சமாக எடுத்து ஒரு பங்கு இலையில் தட்டிக் கொள்ள வேண்டும். பின்னர், அந்த மாவின் அளவிற்கு ஏற்ப நடுவில் பூரணம் வைத்து, இலையை மடித்துக் கொள்ள வேண்டும். இதேபோல் எல்லா மாவையும் பூரணம் சேர்த்து இலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.
4. இட்லி பானையில் தண்ணீர் ஊற்றி தண்ணீர் கொதி வந்ததும், இட்லித் தட்டில் இலைகளை வைத்து பத்து நிமிடம் வேகவிட வேண்டும். சூடான சுவையான இலை அடை தயார்.












Click it and Unblock the Notifications