வரகு அரிசி பூண்டு கஞ்சி! கொழுப்பை கரைத்து ரத்த அழுத்தத்தை சீராக்கும் ஆரோக்கிய கஞ்சி!
Kodo Millet Garlic Porridge Recipe In Tamil: உடல் எடையை குறைக்க போராடுகிறீர்களா? தினமும் காலையில் என்ன சத்தான உணவை சமைப்பது என்ற குழப்பம் இருக்கிறதா? அல்லது ரத்த அழுத்தத்தை இயற்கையான முறையில் கட்டுப்படுத்த அற்புதமான தீர்வுதான் இந்த வரகு அரிசி பூண்டு கஞ்சி. உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும் ஒரு முழுமையான காலை உணவு இந்த கஞ்சியாகும்.
இந்த வரகு அரிசி பூண்டு கஞ்சியில் சேர்க்கப்படும் பூண்டு மற்றும் சீரகம் செரிமான மண்டலத்தை சீராக்கி, உடலில் தேங்கியுள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்க உதவுகிறது. குறிப்பாக, ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்கும். வரகு அரிசியில் உள்ள நார்ச்சத்து நீண்ட நேரம் பசியை கட்டுப்படுத்துவதால், அடிக்கடி நொறுக்குத் தீனி சாப்பிடும் பழக்கம் குறையும்.
இதில் புரதம் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளதால், வளரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தாராளமாக உட்கொள்ளலாம். சுவைக்காக இதில் சேர்க்கப்படும் தேங்காய்ப்பால் அல்லது மோர் இந்த கஞ்சிக்கு சுவையை கொடுக்கிறது. வாரத்தில் இரண்டு முறையாவது இந்த கஞ்சியை உட்கொள்ளலாம்.

இந்த சிறுதானிய கஞ்சியை எப்படி செய்வது, அதற்கு தேவையான பொருட்கள் என்னென்ன என்பதையும் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- வரகு அரிசி - 1 கப்
- பூண்டு - 15 முதல் 20 பற்கள் (தோல் உரித்தது)
- சின்ன வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கியது)
- சீரகம் - 1 டீஸ்பூன்
- மிளகு - 1/2 டீஸ்பூன் (ஒன்று இரண்டாகத் தட்டியது)
- வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
- தண்ணீர் - 5 கப்
- உப்பு - தேவையான அளவு
- தேங்காய்ப்பால் - 1/2 கப் (விருப்பப்பட்டால்)
- கருவேப்பிலை - ஒரு கொத்து
செய்முறை விளக்கம்
- முதலில், வரகு அரிசியை நன்றாகக் களைந்து 20 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைக்கவும். இது அரிசி மென்மையாக வேக உதவும்.
- பின், ஒரு பிரஷர் குக்கரில் ஊறவைத்த வரகு அரிசி, தோல் உரித்த பூண்டு பற்கள், வெந்தயம் மற்றும் சீரகம் ஆகியவற்றைச் சேர்க்கவும்.
- அடுத்து, இதில் 5 கப் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவும். தண்ணீரின் அளவு சரியாக இருந்தால் தான் கஞ்சி குழைவாக வரும்.
- பிறகு, குக்கரை மூடி மிதமான தீயில் (Medium Flame) 4 முதல் 5 விசில் வரும் வரை வேக வைக்கவும். பூண்டு நன்கு மசியும் வரை வேகுவது அவசியம்.
- இறுதியாக, பிரஷர் அடங்கியதும் குக்கரைத் திறந்து, ஒரு கரண்டியால் கஞ்சியை நன்கு மசித்து விடவும்.
- விருப்பப்பட்டால், இதில் தட்டிய மிளகு, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் தேங்காய்ப்பால் சேர்த்து ஒரு நிமிடம் குறைந்த தீயில் சூடுபடுத்தி இறக்கவும்.












Click it and Unblock the Notifications