Soya Gravy Recipe: கமகமக்கும் சோயா கிரேவி.. நான்வெஜ் டேஸ்டில் ஒரு வெஜ் கிரேவி.. அட்டகாசமா இருக்கும்
Soya gravy recipe: புரதச்சத்து என்றாலே உடனடியாக சிக்கன் தான் அனைவரது முதல் தேர்வாக இருக்கும். ஆனால், குறைந்த செலவிலேயே இரண்டு மடங்கு புரதச்சத்சை சோயாவில் இருந்து பெறலாம். இருந்தாலும் சிக்கன் டேஸ்ட் வருமா என்கிறீர்களா.. உங்களுக்காகத் தான் இந்த ரெசிபி. வாங்க நான்வெஜ் டேஸ்டில் அட்டகாசமான சோயா கிரேவி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
நமது அன்றாட வாழ்வில் கார்போஹைட்ரேட் நிறைந்த பொருள்களையே பெரும்பாலும் எடுத்துக் கொள்கிறோம். ஆனால், உணவில் புரதச்சத்து (புரோட்டீன்) என்பது மிகவும் அவசியம் ஆகும். சைவம் சாப்பிடுபவர்களுக்கும், வெஜ்ஜில் நான்வெஜ் டேஸ்ட் எதிர்பார்ப்பவர்களுக்கும் சோயா சிறந்த தேர்வாக இருக்கும். அந்த வகையில், சோயாவை வைத்து ஒரு அட்டகாசமான கிரேவி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
சோயா சங்ஸ் - 2 கப்
பெரிய வெங்காயம் - 2
பழுத்த தக்காளி - 2
இஞ்சி பூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
மல்லித்தூள் - 3 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
தயிர் - 4 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை - சிறிதளவு
சோயா கிரேவி செய்யும் முறை:
1. முதலில் அகலமான பாத்திரத்தில் நிறைய தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதி வந்த பிறகு சோயா சங்ஸ்களைப் போட்டு 5 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். பின்னர், அடுப்பை அணைத்துவிட்டு சோயாவை நன்கு பிழிந்தெடுத்து வைக்கவும்.
2. அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். எண்ணெய் சூடாகியதும் நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து கோல்டன் பிரவுனாக மாறும் வரை நன்கு வதக்கிக் கொள்ளவும்.
3. இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். பச்சை வாசனை போனவுடன் நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்.
4. பின்னர், மிளகாய் தூள், மல்லித்தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
5. பச்சை வாசனை போகும் வரை வதக்கிவிட்டு தயிரை சேர்த்து கலக்கவும்.
6. அதில், சோயா சங்ஸ்களை சேர்த்து நன்றாக கலந்து விடவும். பின்னர், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.
7. கிரேவி பதத்தில் வந்த பின்னர் கறிவேப்பிலை, கொத்தமல்லி இலைகளைத் தூவி இறக்கினால் சுவையான சோயா கிரேவி ரெடி
இந்த கிரேவியை இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, சாதம் என அனைத்திற்கும் அட்டகாசமான காம்பினேஷனாக இருக்கும்.












Click it and Unblock the Notifications