நாளை கார்த்திகைத் தீபம்! மகாதீபம் ஏற்ற திருவண்ணாமலை மலை உச்சிக்கு செல்லும் 300 கிலோ கொப்பரை!
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி 300 கிலோ எடை கொண்ட கொப்பரை இன்று அண்ணாமலையார் மலை உச்சிக்கு கொண்டு செல்லப்படுகிறது. அத்துடன் 1500 மீட்டர் திரி, 4500 கிலோ நெய் ஆகியவையும் கொண்டு செல்லப்படுகிறது. நாளை மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை 2668 அடி உயரம் கொண்டது. இந்த மலையையே சிவனாக வணங்கி வருகிறார்கள். அக்னிஸ்தலமான திருவண்ணாமலையில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்தன்று மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.

கார்த்திகை தீபத்திருவிழா 10 நாட்கள் நடைபெறும் விழாவாகும். இந்த ஆண்டு கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவையொட்டி தினமும் காலையில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகர், உண்ணாமலை சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி, சண்டிகேஸ்வரர் வெவ்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள்.
கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வு மகா தீபம். இது நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாளை மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. இதையொட்டி அதிகாலையிலேயே கோயில் நடை திறக்கப்பட்டு பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெறும்.
தொடர்ந்து அதிகாலை 4 மணிக்கு சாமி சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணிதீபம் ஏற்றப்படும். மாலையில் பஞ்சமூர்த்திகள் சாமி சன்னதி முன்பாக உள்ள தீப தரிசன மண்டபத்தில் எழுந்தருளுவார்கள்.
6 மணிக்கு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் சாமி சன்னதியில் இருந்து ஆடியபடியே கொடிமரம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இதைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு சாமி சன்னதி முன்பு அகண்ட தீபம் ஏற்றப்படும்.
அதே நேரத்தில் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். இங்கு மகா தீபம் ஏற்றியதும், திருவண்ணாமலையை சுற்றியுள்ள பக்தர்கள் வீடுகளில் விளக்கேற்றுவார்கள். இந்த நிலையில் 2668 அடி உயர உச்சிக்கு கொப்பரை கொண்டு செல்லப்படுகிறது. உடன் 1500 மீட்டர் திரி, 4500 கிலோ தூய்மையான பசு நெய் கொண்டு செல்லப்படுகிறது.
இந்த மகாதீபத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸார் திருவண்ணாமலைக்கு பாதுகாப்பு பணிக்கு வந்துள்ளனர். திருவண்ணாமலை நகரை சுற்றி 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications