Aadiperukku 2026: காவிரி கரையில் குவிந்த மக்கள்.. இல்லறம் செழிக்க புதுமணத் தம்பியினர் வழிபாடு
சென்னை: தமிழர்களின் முக்கிய பண்டிகையான ஆடிப்பெருக்கு இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. புதுமணத் தம்பதியினர் காலையிலேயே காவிரி கரையில் திரண்டு தாலி சரடு மாற்றி காவிரி தாயை வழிபட்டனர். பொதுமக்கள் ஏராளமானோர் குவிந்து காவிரியில் நீராடினர்.
அம்மனுக்கு உகந்தமான ஆடி மாதத்தில் வரும் அனைத்து நாட்களுமே மிகவும் விஷேசமானதாகும். குறிப்பாக, ஆடி மாதத்தின் 18 ஆம் நாளான ஆடிப்பெருக்கு தமிழர்களின் முக்கிய பண்டிகை ஆகும். காவிரி தாய்க்கு நன்றி தெரிவிக்கும் நாளாக ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது. நீர் வளம் பெருகுவதை கொண்டாடும் நாளாகும். ஆடிப் பட்டம் தேடி விதை என்ற பழமொழியும் உண்டு. இந்த மாதத்தில் விவசாயிகள் நெல், கரும்பு போன்றவற்றை இந்த மாதத்தில் விதைத்தால் தை மாதத்தில் அறுவடை செய்வார்கள்.

ஆடிப்பெருக்கு நாளில் காவிரி ஆற்றின் கரையோரம் ஆயிரக்கணக்கான மக்கள் வழிபாடு செய்வது வழக்கம். இந்த மாதத்தில் பருவ மழைகள் பெய்து நீர்நிலைகள் நிரம்பி வழியும். ஆனால், இந்த ஆண்டு மழை சரிவர பெய்யாததால் தமிழகத்தில் பல பகுதிகளில் தண்ணீர் குறைவாகவே காணப்பட்டது. இருப்பினும், தமிழகத்தின் பல பகுதிகளில் ஆற்றங்கரையில் பொதுமக்கள் குவிந்து வழிபாடு செய்தனர்.
ஆற்றங்கரையில் இலை விரித்து அதன் மேல் அகல்விளக்கேற்றி பக்தர்கள் பலரும் வழிபாடு செய்தனர். புதிதாக திருமணமான தம்பதியினர் ஆயிரக்கணக்கானோர் ஆற்றங்கரையில் இன்று காலை முதலே குவியத் தொடங்கி தாலி சரடு மாற்றிக் கொண்டனர். இதன் மூலமாக மாங்கல்ய பாக்கியம் நீடிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதேபோல, திருமணமாகாத இளம் பெண்களும் நல்ல வரன் அமைய வேண்டி அம்மனை வழிபட்டு மஞ்சள் கயிறு கட்டிக் கொண்டனர்.
பக்தர்கள் ஏமாற்றம்
இந்த ஆண்டு பருவமழை சரியாக பெய்யாததால் கர்நாடகத்தில் இருந்து காவிரி நீர் திறந்து விடப்படவில்லை. இதனால், பல நீர்நிலைகளும் வறண்டு காணப்படுகிறது. எப்போதும் ஆடிப்பெருக்கு நாளில் ஒவ்வொரு நீர் நிலையும் பொங்கி பெருகி காட்சியளிக்கும். ஆனால், இந்த முறை ஆறுகள் வறண்டு காணப்படுகிறது. இதனால், பக்தர்கள் பலரும் ஏமாற்றமடைந்தனர். இருப்பினும், ஆற்றங்கரைகளில் ஏராளமானோர் குவிந்து வழிபட்டனர். பலர் தாலி சரடு மாற்றிக் கொண்டனர். முன்னோர்களுக்கு தர்ப்பணமும் கொடுத்து வழிபட்டனர்.
அம்மா மண்டபத்தில் ஷவர் வசதி
இந்நிலையில், பக்தர்கள் வழிபாடு செய்வதற்கு ஏதுவாக அம்மா மண்டபம் படித்துறையில் மாநகராட்சி சார்பில் பக்தர்கள் குளிக்கும் வகையில் ஷவர் அமைக்கப்பட்டிருந்தது. கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல, திருவையாறு காவிரி புஷ்யமண்டப படித்துறையில் பக்தர்கள் புனித நீராடும் வகையில் பம்பு செட் அமைக்கப்பட்டுள்ளன.
பவானி கூடுதுறையில்..
பவானி கூடுதுறை ஆற்றிலும் தண்ணீர் குறைந்தளவே காணப்படுகிறது. ஆடிப்பெருக்கு நாளான்று ஏராளமானோர் நீராடுவர் என்பதால், படித்துறை பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், படித்துறைகளில் உள்ள தொட்டிகளிலும் தண்ணீர் நிரப்பப்பட்டு நீராடுவதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது. ஆற்றங்கரைகளில் பக்தர்களில் பாதுகாப்புக்கான நீச்சல் வீரர்கள், மருத்துவர்கள், முதலுதவி சிகிச்சை மையம், ஆம்புலன்ஸ் போன்றவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications
