Saraswathi Pooja 2026: நாளை சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை செய்ய நல்ல நேரம் எது? எதை நெய்வேத்தியம் செய்யலாம்?
சென்னை: நாளை சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை செய்ய நல்ல நேரம் எது என்பதை தெரிந்துக் கொள்ளலாம். நவராத்திரியின் நிறைவு நாளான நாளை சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. கொலுவின் நிறைவு நாள் குறித்தும் பார்க்கலாம்.
நவராத்திரியின் 9ஆவது நாள் சரஸ்வதி தேவியை வழிபட வேண்டிய நிறைவு நாளாகும். இந்த ஆண்டு சரஸ்வதி பூஜை நாளை திங்கள்கிழமை நவமி திதியில் கொண்டாடப்படுகிறது.

இதுகுறித்து ஆன்மீக சொற்பொழிவாளர் தேசமங்கையர்க்கரசி கூறியதாவது: இந்த 9ஆவது நாள் மகா சரஸ்வதியை வழிபட்டு நவராத்திரியை நிறைவு செய்யக் கூடிய நாளாகும்.
இந்த பூஜையை இரண்டு வகையாக செய்வோம். வீட்டில் குழந்தைகள் புத்தகங்களை வைத்து பூஜை செய்வது சரஸ்வதி பூஜை. அது போல் கடைகளில் நாம் எதனால் வாழ்கிறோமோ அதை வைத்து பூஜை போடுவது ஆயுத பூஜை. இந்த இரு பூஜைகளையும் செய்ய நல்ல நேரம் எப்போது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
9ஆம் நாளான நாளை அம்பாளுக்கு பரமேஸ்வரி என்ற திருநாமம் அமையப் பெற்றிருக்கிறது. சரஸ்வதி பூஜையின் போது தாமரை வகையான கோலங்களை போடலாம். இன்று நெய்வேத்தியம் செய்ய சர்க்கரை பொங்கலை பயன்படுத்தலாம். கொண்டைகடலை சுண்டலை செய்யலாம். பழங்களில் நாவல் பழத்தை வைத்து படைக்கலாம்.
நாளை நவமி திதி தொடங்குவது காலை 9.04 மணிக்கு தான். காலையில் பூஜை செய்வதென்றால் 9.10 மணி முதல் 10.20 மணி வரை செய்யலாம். மாலை நேரம் என்றால், மாலை 4 மணி முதல் 5 மணி வரையும் மால 6 மணிக்கு மேல் எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். வித்யாரம்பம் ஆரம்பிப்பதற்கும் இந்த நேரத்தை பயன்படுத்திக்கலாம்.
நாளை புத்தகங்கள், ஆயுதங்கள், தொழில் தொடர்பான பொருட்கள் உள்ளிட்டவைகளை வைத்து பூஜை செய்யலாம். அபிராமி அந்தாதி படிக்கலாம். சகலகலா வல்லி மாலையையும் பாராயணம் செய்யலாம். சரஸ்வதி பூஜை செய்துவிட்டு படிக்கும் புத்தகத்தை எடுத்து சிறிது நேரம் படிக்க வேண்டும்.
நாளை மறுநாள் 10 ஆவது நாள் விஜயதசமி. அன்றைய தினம் வித்யாரம்பம் அல்லது வழிபாடு செய்ய நல்ல நேரம் காலை 10.45 மணி முதல் 11.45 மணி வரையும், மதியம் 1.35 மணி முதல் 2.55 மணி வரையும், மாலை 4.35 மணி முதல் 5.35 மணி வரையும் செய்யலாம். மாலை 6 மணிக்கு மேல் நேரம் பார்க்க தேவையில்லை. வாகனங்களையும் சேர்த்து பூஜை செய்யலாம். வாகனங்களை துடைத்து அதற்கு சந்தனம், மஞ்சள், குங்குமம் வைத்து பூஜை செய்யலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.




Click it and Unblock the Notifications
