கார்த்திகை தீபத் திருவிழா! திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று கொடியேற்றம்!
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அப்போது பக்தர்கள் அரோகரா, ஓம் நமச்சிவாய என கோஷமிட்டனர். கார்த்திகை தீபம் எப்போது என்பதை பார்க்கலாம்.
கார்த்திகை மாதத்தில் வரும் கிருத்திகையின் போது கார்த்திகை தீபத்திருவிழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலை சுற்றியுள்ள மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும்.

அந்த வகையில் இந்த ஆண்டு கார்த்திகை தீபம் வரும் 24 ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி இன்றைய தினம் அண்ணாமலையார் கோவிலில் கொடியேற்றம் நடந்தது. இதையடுத்து சரியாக 10ஆவது நாளான நவம்பர் 24 ஆம் தேதி அன்று அதிகாலை 4 மணிக்கு கோயிலின் மூலவர் சன்னதி முன்பு பரணி தீபம் ஏற்றப்படும்.
இதையடுத்து மாலை 6 மணிக்கு கோயிலின் பின்புறம் உள்ள 2668 அடி உயரம் கொண்ட மலை உச்சியில் மகா தீபம் ஏற்படுகிறது. இந்த மகாதீபம் ஏற்றப்பட்டதும் , பொதுமக்களும் வீடுகளில் அகல்விளக்கு ஏற்றி வழிபடுவர். இந்த மகா தீபம் எத்தனை காற்று, மழை வந்தாலும் அணையாமல் காட்சியளிக்கும்.
இந்த விழா மொத்தம் 17 நாட்கள் நடைபெறுகிறது. 3 நாட்கள் துர்க்கையம்மன் கோயிலிலும் , 10 நாட்கள் அண்ணாமலையார் கோயிலிலும் 4 நாட்கள் தெப்பத் திருவிழாவும் நடைபெறும். சிவனே அக்னி பிழம்பாக நெருப்பு மலையாக நின்றார் என்பதை நினைவுக்கூறும் விதமாக மலை மீது மகாதீபம் ஏற்றப்படுகிறது.



Click it and Unblock the Notifications
