Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை எப்போது? முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய நல்ல நேரம் எது?
சென்னை: மஹாளய அமாவாசை நாளை மறுநாள் அனுசரிக்கப்படும் நிலையில் திதி கொடுக்கவும் படையலிடவும் நல்ல நேரம் எது என்பதை தெரிந்து கொள்ளலாம். மேலும் மஹாளய அமாவாசையில் தர்ப்பணம் கொடுக்கும் முறைகளையும் தெரிந்து கொள்ளலாம்.
அமாவாசைகளில் முக்கியமானது தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசியில் வரும் மஹாளய அமாவாசை ஆகியவை ஆகும். புரட்டாசியில் வரும் மஹாளய அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது அத்தனை விசேஷம் என்கிறார்கள்.

இதுகுற்த்து ஆத்ம ஞான மைய யூடியூப் சேனலில் ஆன்மீக சொற்பொழிவாளர் தேசமங்கையர்க்கரசி கூறியிருப்பதாவது: முன்னோர்களுக்கு நன்றி சொல்வதற்காகவே இந்த நாளை நமக்கு வகுத்து வைத்துள்ளார்கள்.
வெளி இடங்களுக்குச் சென்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய முடியாதவர்கள் வீட்டிலேயே எளிமையான முறையில் இதை செய்யலாம். வீட்டில் செய்வதற்கு பெரிய பொருட்கள் எல்லாம் தேவையில்லை. எள் மட்டும் போதும், எள்ளை கையில் வைத்துக் கொண்டு உங்களுக்குத் தெரிந்த, தெரியாத முன்னோர்களையும் உங்களை வாழ்த்திய நல்ல உள்ளங்களையும் நினைத்து எள்ளும் தண்ணீரும் இறைத்து வழிபட வேண்டும்.
இதை செய்த பிறகே பூஜை அறையில் விளக்கேற்றி குலத்தெய்வத்தை வழிபட வேண்டும். தாய், தந்தை இல்லாத ஆண்கள், தாய் இல்லாதவர்கள் தர்ப்பணம் செய்யலாம். பெண்களுக்கு எப்போதும் போல எள்ளும் தண்ணீரும் இறைக்கும் செயலை தவிர்த்துவிட்டு அனைத்து வழிபாடுகளையும் செய்யலாம்.
அமாவாசை நாளில் பசுமாட்டிற்கு அகத்தி கீரை கொடுத்து வழிபடுவது நல்லது. அமாவாசை திதி அக்டோபர் 9ஆம் தேதி இரவு 9.53 மணிக்கு தொடங்கி அக்டோபர் 10 ஆம் தேதி இரவு 9.34 மணிக்கு முடிவடைகிறது.
தர்ப்பணம் கொடுக்க சிறந்த நேரம்
அக்டோபர் 10ஆம் தேதி காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை கொடுக்கலாம். அதில் குறிப்பாக காலை 10.35 மணி முதல் 11.55 வரை தர்ப்பணம் கொடுப்பது சிறப்பு!
இலை போட்டு படையல்
இலை போட்டு படைக்கும் நேரம் மதியம் 12 மணி முதல் 1 மணி வரை ஆகும். காலையில் தர்ப்பணம், மதியம் அன்னதானம் அல்லது முன்னோர் வழிபாடு, மாலை அகல் விளக்கேற்றி வழிபாடு என 3 எளிய விஷயங்களைச் செய்தாலே முன்னோர்களின் மனம் குளிரும் என தேச மங்கையர்க்கரசி தெரிவித்திருந்தார்.


Click it and Unblock the Notifications
