சூரசம்ஹாரம் முடிந்தது! திருச்செந்தூரில் இன்று முருகன்- தெய்வானை திருக்கல்யாணம்!
திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோயிலில் நேற்று சூரசம்ஹாரம் நடைபெற்ற நிலையில் இன்று மாலை முருகன்- தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இந்த நிகழ்வுடன் கந்த சஷ்டி விழா நிறைபெறுகிறது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா கடந்த 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் சஷ்டி விரதத்தை பக்தர்கள் கடைபிடித்து வந்தனர். நேற்று 6ஆவது நாள் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். சிக்கல் சிங்காரவேலவர் கோயிலில் அன்னை பராசக்தியிடம் முருகன் சக்திவேல் வாங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதையடுத்து கடற்கரையில் ஜெயந்திநாதர் எழுந்தளருளினார்.
இதையடுத்து தாரகாசுரன், சிங்கமுகன், கஜமுகன் ஆகியோரை வதம் செய்த முருகப்பெருமான் மரம் உருவில் வந்த சூரபத்மனை வதம் செய்து மயில், சேவலாக ஆட்கொண்டார். சூரபத்மனை சிவபெருமான் உருவாக்கிய சக்தியால் மட்டுமே அழிக்க முடியும் என்ற வரன் பெற்றான். இதனால் தன்னை அழிக்க ஆள் இல்லை என்பதால் அவனும் அவனது தம்பி தாரகாசுரனும் தேவர்கள், முனிவர்களுக்கு தொல்லை கொடுத்தனர்.
இதையடுத்து சிவபெருமானிடம் போய் தேவர்களும் முனிவர்களும் முறையிட்டனர். இதனால் சூரனை அழிக்க தனது நெற்றிக் கண்ணில் இருந்து முருகனை படைத்தார். அவருக்கு தனது சக்தி முழுவதும் அடங்கிய வீரவேலை தாய் பராசக்தி கொடுத்து சூரனை வதம் செய்ய அனுப்பினாள்.
இந்த நிகழ்வு ஆண்டுதோறும் அறுபடைகளில் 5 படைவீடுகளில் மட்டும் நடைபெறுகிறது. திருத்தணியில் சாந்தமாக இருப்பதால் புஷ்பாஞ்சலி மட்டும் நடைபெறுகிறது. நேற்று நடந்த சூரசம்ஹாரத்தை காண தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்தனர்.
அவர்கள் சூரசம்ஹாரத்தை பார்த்து வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, அரோகரா என முழங்கினர். இதையடுத்து ஜெயந்தி நாதருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு அவர் சாந்தப்படுத்தப்பட்டார். பக்தர்களும் கடற்கரையில் நீராடிவிட்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இந்த நிலையில் இன்றைய தினம் முருகன்- தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இது இன்று மாலை நடைபெறுகிறது. ராஜகோபுரம் முன்பு உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் வைதீக முறைப்படி திருக்கல்யாணம் வெகுவிமரிசையாக நடைபெறும். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வதுண்டு. திருக்கல்யாணத்தில் பக்தர்கள் மொய் எழுதும் வழக்கமும் உள்ளது. அவ்வாறு மொய் எழுதும் பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு, சுவாமி படம் அடங்கிய பிரசாதம் வழங்கப்படுகிறது.
இந்த திருக்கல்யாணத்தை தரிசித்தால் திருமண தடைகள் நீங்கும் என்பது ஐதீகம். திருக்கல்யாண நாளான இன்று வீட்டில் முருகப்பெருமான் படத்திற்கு முன்பு விளக்கேற்றி வழிபட வேண்டும். முருகப்பெருமானுக்கு சிவப்பு அல்லது மஞ்சள் நிற மலர்களால் அர்ச்சனை செய்யலாம். கந்த சஷ்டி கவசம் படிக்கலாம்.
இந்த நிகழ்வுடன் கந்த சஷ்டி விழா முடிவு பெறுகிறது. விரதம் இருந்து வரும் பக்தர்கள் சூரசம்ஹாரத்திற்கு பிறகோ அல்லது திருக்கல்யாணத்தை கண் குளிர தரிசித்ததற்கு பிறகோ விரதத்தை கைவிடுவது வழக்கம்.




Click it and Unblock the Notifications
