இன்று தை அமாவாசை.. ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடல், நெல்லை தாமிரபரணியில் ஆயிரக்கணக்கானோர் தர்ப்பணம்
சென்னை: தை அமாவாசை தினத்தை முன்னிட்டு புண்ணிய தலங்களில் மக்கள் இன்று திதி கொடுத்து வருகின்றனர். தை அமாவாசை தினத்தை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர். தாமிரபரணி ஆற்றங்கரையில் ஆயிரக்கணக்கானோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வருகின்றனர்.
ஒவ்வொரு மாதமும் அமாவாசை நாள், ஆன்மீகத்தில் மிகவும் முக்கியமானது. அதிலும் ஆடி, புரட்டாசி, தை மாதம் வரும் அமாவாசை தினங்கள் மிகவும் விசேஷமானவை. தை அமாவாசை அன்று பித்ருக்கள் தர்ப்பணம் கொடுக்கும் தம் சந்ததிகளுக்கு நல்லருள் வழங்கி பிதுர் லோகம் திரும்புவதாக ஐதீகம். அமாவாசை அன்று முன்னோர்களை நினைத்து எள்ளும் தண்ணீரும் இரைத்துச் தர்ப்பணம் செய்வார்கள்.

இன்று திதி கொடுக்க உகந்த நேரம்: ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 01.20 மணி முதல் திங்கட்கிழமை அதிகாலை 02.31 வரை தை அமாவாசை திதி இருப்பதால் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை புண்ணிய நதிகளில் நீராடி நண்பகல் 12 மணிக்குள் தர்ப்பணம் செய்து முடிக்கலாம். சூரிய உதயம் முன்பு பிரம்ம முகூர்த்தம் இருப்பதால் சூரியன் வந்தபிறகு கொடுக்க வேண்டும் என்று கிடையாது. பிரம்ம முகூர்த்தத்தில் செய்வது புண்ணியமாகும்.
முன்னோரது ஆசி பெற அமாவாசை, வருஷதிதி, மகாளயபட்ச நாட்கள் உகந்தவை. இவை புண்ணிய நாட்களாகும். கேளிக்கை, சுப நிகழ்ச்சிகளை இந்நாட்களில் தவிர்க்க வேண்டும் என்பது விதி. இதன் காரணமாக இந்த நாளை ஆகாத நாளாக எடுத்துக்கொள்ளக்கூடாது. தை அமாவாசை நாளில் நம் முன்னோருக்கு உணவு புத்தாடை படைத்து வழிபாடு செய்ய வேண்டும்.
அந்த ஆடை, உணவை ஏழைகளுக்கு தானமாக கொடுப்பதன் மூலம் அளவற்ற நன்மைகள் நம் வாழ்வில் உண்டாவதை நாம் உணர முடியும். தடைபட்ட திருமணம், நீண்ட நாள்பட்ட நோய் நொடிகள், மன வருத்தம் ஆகியவை விலகி சந்தோஷமும் மனநிறைவும் நம் இல்லத்திலும், உள்ளத்திலும் ஏற்படும் என்பது நம்பிக்கை.
காகத்திற்கு சாதம் வைத்தால் எமலோகத்தில் வாழும் நம் முன்னோர் அமைதி பெற்று நமக்கு ஆசியளிப்பார் என்பது நம்பிக்கை. காகம் நாம் வைத்த உணவைத் தீண்டாவிட்டால் இறந்து போன நம் முன்னோருக்கு ஏதோ குறை இருப்பதாக கருதுவதும் மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. காகம், பிற காக்கைகளையும் கரைந்து அழைத்த பின்னரே உணவு உண்ணும். அப்படிப்பட்ட காகத்திற்கு உணவிடுவதன் மூலம் பிதுர்களின் ஆசியைப் பெற முடியும் என்பது நம்பிக்கை.
தை அமாவாசை தினத்தை முன்னிட்டு புண்ணிய தலங்களில் மக்கள் இன்று திதி கொடுத்து வருகின்றனர். ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் பெற்று சென்றனர். நெல்லை தாமிரபரணி ஆற்றங்கரையில் ஆயிரக்கணக்கானோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வருகின்றனர்.
தை மாத அமாவாசையையொட்டி பவானி கூடுதுறைக்கு முன்னோர் வழிபாட்டுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக சங்கமேஸ்வரர் கோயில் நிர்வாகம் சார்பில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காவிரி, பவானி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமுத நதிகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறையில் தை அமாவாசை நாளில் புனித நீராடி, முன்னோர் வழிபாடு நடத்த ஏராளமானோர் வருவது வழக்கம். தை மாத அமாவாசை ஞாயிற்றுக்கிழமை வந்துள்ளதால் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகம் உள்ளது.












Click it and Unblock the Notifications