சீனிவாசா கோவிந்தா..ஏழுமலையான் கோவில் வைகுண்ட ஏகாதசி! டிச., 30 முதல் ஜன., 8 வரை சொர்க்க வாசல் தரிசனம்
திருப்பதி: திருப்பதி எழுமலையான் கோவிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு டிசம்பர் 30ஆம் தேதி முதல் ஜனவரி 8ஆம் தேதி வரை பக்தர்களுக்கு சொர்க்க வாசல் தரிசன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஆன்லைன் மற்றும் நேரடி டிக்கெட் விநியோகம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் எனவும், வரும் பிப்ரவரி மாதம் முதல் ஆன்லைன் மூலமாகவே அங்கப்பிரதட்சண டோக்கன் தொடர்ந்து 3 மாதங்களுக்கு வழங்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் கூறியுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஆண்டுதோறும் சிறப்பு தரிசனம் நடைபெறும். இந்த ஆண்டும், டிசம்பர் 30-ஆம் தேதி முதல் ஜனவரி 8-ஆம் தேதி வரை பக்தர்கள் சொர்க்க வாசல் வழியாக தரிசனம் செய்யும் ஏற்பாடுகளை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.

வைகுண்ட ஏகாதசி நாளில் திறக்கப்படும் "உத்தார துவாரம்" எனப்படும் சொர்க்க வாசல் வழியாக பக்தர்கள் கோவிலுக்குள் சென்று தரிசனம் செய்தால், வைகுண்டம் அடையும் புண்ணியம் கிடைக்கும் என ஆன்மீக பக்தர்களால் நம்பப்படுகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவில்
இதனால், அந்த நாளில் மட்டுமல்லாமல் அதன் முன் மற்றும் பின் நாட்களிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க வருவது வழக்கம். முந்தைய காலங்களில் வைகுண்ட ஏகாதசி ஒரு நாள் மட்டுமே கொண்டாடப்பட்டது. ஆனால் பக்தர்கள் திரளாக வந்ததால் 1980களில் இருந்து விழா இரண்டு நாளாக நீட்டிக்கப்பட்டது. பின்னர், 2021ஆம் ஆண்டு முதல் 10 நாள் விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த 10 நாட்களிலும் கோவிலின் சொர்க்க வாசல் திறந்திருக்கும்.
வைகுண்ட ஏகாதசி
புராணங்களின் படி, இந்த நாளில் விஷ்ணு பகவான் தனது பக்தர்களுக்கு சொர்க்க வாசல் திறந்து ஆசீர்வாதம் வழங்குவதாகக் கூறப்படுகிறது. அதனால், அந்த நாளில் தரிசனம் செய்வது மிகப் புனிதமானதாக கருதப்படுகிறது. பல பக்தர்கள் வைகுண்ட ஏகாதசி தரிசனத்திற்காக 41 நாட்கள் விரதம் இருந்து, மஞ்சள் ஆடை அணிந்து, காலணியில்லாமல் பாதயாத்திரையாக நடந்து வருவது வழக்கம். சிலர் தங்கள் ஊரிலிருந்தே 10 நாட்கள் முன்பே கிளம்பி, நடந்து வந்து கோவிலில் தரிசனம் செய்கிறார்கள்.
சொர்க்க வாசல் தரிசனம்
இந்நிலையில், இந்தாண்டு திருப்பதி எழுமலையான் கோவிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு டிசம்பர் 30-ம் தேதி முதல் ஜனவரி 8-ம் தேதி வரை பக்தர்களுக்கு சொர்க்க வாசல் தரிசன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பேசியுள்ள திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால்," "இந்த ஆண்டும் டிசம்பர் 30 முதல் ஜனவரி 8 வரை சொர்க்க வாசல் தரிசனம் நடைபெறும். இதற்கான ஆன்லைன் மற்றும் நேரடி டிக்கெட் விநியோக விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். மேலும் பிப்ரவரி மாதம் முதல் ஆன்லைன் மூலமாகவே அங்க பிரதட்சண டோக்கன்கள் வழங்கப்படும்.
திருமலை தேவஸ்தானம்
அத்துடன், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் நவம்பர் 17 முதல் 25 வரை கார்த்திகை பிரம்மோற்சவம் நடைபெறும். அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், ரூ.750 கோடி செலவில் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் மீனவர் சமூகங்கள் வசிக்கும் பகுதிகளில் 5,000 பஜனை கோயில்கள் கட்டப்படும் என்றும், திருமலைப்பகுதியில் பசுமை வளர்ச்சிக்கும் புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார். அதே நேரத்தில், பக்தர்கள் இடைத்தரகர்களை நம்பி ஏமாறாமல் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியே மட்டுமே டிக்கெட் பெற வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications