இன்று வரலட்சுமி விரதம்! யாரெல்லாம் கடைப்பிடிக்கலாம்? நோன்பு சரடு கட்டி கொள்ள நல்ல நேரம் எது?
சென்னை: வரலட்சுமி விரதம் இன்று கடைப்பிடிக்கப்படுவதையொட்டி தமிழகத்தில் பல்வேறு கோயில்களில் மக்கள் அதிகாலையிலேயே வழிபாடு நடத்த குவிந்துள்ளனர். இன்றைய தினம் நோன்பு சரடு கட்டிக் கொள்ள நல்ல நேரம் எது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
வரலட்சுமி நோன்பு என்பது 16 வகையான செல்வத்திற்கும் அதிபதியான லட்சுமியின் அருள் வேண்டி இந்துக்கள் கடைப்பிடிக்கும் ஒரு நோன்பாகும்.

ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாத பவுர்ணமிக்கு முன்பு வரும் வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம் ஆகும். பெண்கள் தீர்க்க சுமங்கலியாக வாழ வரலட்சுமி விரதத்தை அனுசரிக்கிறார்கள்.
செல்வங்களுக்கு அதிபதி மகாலட்சுமி. அவளின் அருள் வேண்டி செய்யப்படும் விரதம்தான் இந்த வரலட்சுமி விரதம். ஒருவர் ஏழையாக இருப்பதும் செல்வந்தராக செழிப்பதும் அவரவர் கையில் இருக்கிறது.
மகாலட்சுமியின் அருள் கிடைத்தால் அனைத்தும் சிறப்பாக இருக்கும் என்கிறார்கள். இந்த விரதத்தை யாரெல்லாம் கடைபிடிக்க வேண்டும். தாய் வழியோ, தந்தை வழியோ இந்த விரதத்தை கடைப்பிடித்தால் மட்டுமே நாமும் கடைப்பிடிக்க வேண்டும் என்றில்லை.
மகாலட்சுமி தாயாரை யார் வேண்டுமானாலும் பூஜை செய்து வழிபடலாம். விரதம் இருந்து நோன்பை கடைப்பிடிக்கலாம். குறிப்பாக சுமங்கலி பெண்கள் இதை கடைப்பிடிக்கலாம். பெற்றோர் வழியில் பழக்கம் இல்லாவிட்டாலும் திருமணமான அடுத்து வரும் வரலட்சுமி பூஜையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் பூஜிக்கலாம்.
ஒரு வேளை வரலட்சுமி விரதத்தின் போது மாதவிடாய் காலத்தில் இருந்தால் அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை இந்த பூஜையை செய்யலாம். பூஜையின் போது மூத்த சுமங்கலிகள் உடனிருந்து மற்ற பெண்களும் சரடை கட்டிக் கொள்ளலாம்.
வெள்ளிக்கிழமை வழிபாடு நடத்த வேண்டிய நேரம் காலை 6 மணி முதல் 7.20 மணிக்குள் அம்பாளை அழைக்கலாம். காலை 9 மணி முதல் 10.20 மணி வரை அல்லது காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை பூஜை செய்து நோன்பு கயிறு கட்டிக் கொள்ளலாம்.
மாலை நேரத்தில் வழிபடும் பழக்கம் கொண்டவர்கள் மாலை 6 மணிக்கு மேல் பூஜை செய்யலாம். வரலட்சுமி பூஜை என்றாலே எளிமைதான்! ஆடம்பரமாக செய்ய வேண்டியதில்லை. பித்தளை அல்லது செம்பு குடத்தில் அரிசி, மஞ்சள் கிழங்கு, நாணயங்கள், வாசனைப் பொருட்கள் மற்றும் தேங்காய் வைத்து எளிய முறையில் கலசம் வைக்கலாம்.
கலசம் அமைக்க இயலாதவர்கள் மகாலட்சுமி படத்திற்கு சந்தனம் , குங்குமமிட்டு பால், பழம் நெய்வேத்தியம் செய்து வழிபட்டாலே பரிபூரண அருள் கிடைக்கும். விரத நாளில் கணபதி வழிபாடு, லலிதா சகஸ்ரநாமம் அல்லது கனகதாரா ஸ்தோத்திரம் பாராயணம் செய்து பெரியவர்களிடம் ஆசி பெற்று நோன்பு கயிறு கட்டிக் கொள்ளலாம்.
வெள்ளிக்கிழமை அம்பாளை அழைத்து பூஜை செய்திருந்தால், காலை 7 மணி முதல் 9 மணி வரை அல்லது 10 மணி முதல் 11.45 மணிக்குள் புனர்பூஜை செய்யலாம். புனர்பூஜை என்பது விரதத்தின் நிறைவாக மறுநாள் காலையில் செய்யப்படும் வழிபாடு. இந்த பூஜையின் போது அம்மனை பாதுகாப்பாக எடுத்து வைப்பர்.


Click it and Unblock the Notifications
