மஞ்சளிலே செய்திடினும் மண்ணினாலே செய்திடினும்.. விநாயகர் சதுர்த்தி விழா.. மெகா பிள்ளையாருக்கு பூஜை
திண்டுக்கல் : விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு திண்டுக்கல்லில் ஆசிய கண்டத்திலேயே மிக உயரமான 32 அடி உயரம் கொண்ட ஒரே கல்லால் ஆன மகா சங்கடஹர சதுர்த்தி விநாயகர் திருக்கோவிலில் குவிந்த பக்தர்கள், விநாயகர் உடன் செல்ஃபி எடுத்த மகிழ்ந்தனர். முன்னதாக விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழாவானது இன்று உலகெங்கும் வசிக்கும் இந்து மக்களால் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆவணி மாதத்தில் வளர்பிறை சதுர்த்தியே விநாயகர் சதுர்த்தி நாளாக கொண்டாடப்படுகிறது.

அந்த நாளில் தான் விநாயகப் பெருமான் அவதரித்ததாக இந்து மக்களின் நம்பிக்கை. அந்த வகையில் இன்று வழக்கமான உற்சாகத்தோடு விநாயகர் சதுர்த்தி விழாவானது கொண்டாடப்பட்டு வருகிறது.
வீடுகளிலும் பொது இடங்களிலும் விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு பூஜை செய்யப்பட்டு வருகிறது. கால் அடி முதல் 20 அடி வரை பல்வேறு உயரங்களில் இந்தியா முழுவதும் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது. இன்றிலிருந்து மூன்றாவது நாள் அல்லது ஐந்தாவது நாள் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்பட உள்ளது. பொது இடங்கள் மட்டுமல்லாமல் தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் காலை முதலே மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது .

அந்த வகையில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, திண்டுக்கல் கோபால சமுத்திரக் கரையில் அமைந்துள்ள ஆசிய கண்டத்திலேயே மிக உயரமான 32 அடி உயரம் கொண்ட ஒரே கல்லால் ஆன மகா சங்கடகர சதுர்த்தி விநாயகர் ஆலயத்தில் இன்று சிறப்பு அலங்காரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இங்கு 108 விநாயகர் சிலைகள் உள்ள நிலையில் தற்போது விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல வடிவங்களில் சிறிய விநாயகர் சிலைகள் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கவரும் வண்ணம் வைக்கப்பட்டுள்ளது.
இங்கு ஆசிய கண்டத்திலேயே 32 அடி உயரம் கொண்ட மகா சங்கடகர சதுர்த்தி விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. 32 அடி சங்கடஹர சதுர்த்தி விநாயகர் முன்பு 1,1/2 உயரத்தில் சிங்கம் மேல் அமர்ந்த விநாயகர், எலிமேல் அமர்ந்த விநாயகர், கோமாதா மீது அமர்ந்த விநாயகர், விஸ்வரூப விநாயகர், புல்லட் ஓட்டும் விநாயகர், ராஜகணபதி விநாயகர், மேளதாளம் வாசிக்கும் விநாயகர், பல விநாயகர் சிலைகள் பூந்தோட்டத்திற்குள் இருப்பதுபோல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக புல்லட் விநாயகர், குழந்தை விநாயகர், வேடன் விநாயகர் போன்ற பல்வேறு சிலைகள் சிறுவர்கள் மற்றும் பெரியவர்களே கவர்ந்து வருகிறது. விநாயகர் சிலைகளை பார்க்க வந்த பொதுமக்கள் விநாயகர் சிலைகள் முன்பு நின்று புகைப்படம் எடுத்தும், செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.

மேலும், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 32 அடி உயரம் உள்ள விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு காலை 6 மணி முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. ஆசியாவிலேயே மிக உயரமான 32 அடி உயரம் கொண்ட விநாயகரை காண திண்டுக்கல் மாவட்டம் மற்றும் பல கிராமங்களில் இருந்தும், தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் வந்து விநாயகரை வழிபட்டு சென்று வருகின்றனர்.












Click it and Unblock the Notifications