காகம் வடிவில் வீடு தேடி வரும் முன்னோர்கள்... அமாவாசையில் சோறு வைத்தால் தோஷங்கள் நீங்கும்
மதுரை: சூரியனின் புத்திரர்கள் எமனும் சனியும் சகோதரர்கள் எமலோகத்தின் வாசலில் காகங்கள் அமர்ந்திருக்குமாம். சனிபகவானின் வாகனம் காக்கை. காகங்கள் வடிவத்தில் நம்முன்னோர்களை பார்க்கிறோம். நம் வீட்டிற்கு வரும் முன்னோர்களுக்கு உணவு கொடுப்பது போல நம்முடைய வீட்டு வாசலுக்கு வரும் காகங்களுக்கு உணவு கொடுப்பதனால் எமன் மகிழ்ச்சியடைவாராம். இதன் மூலம் முன்னோர்களின் ஆசியும் நமக்கு கிடைக்கும்.
ஆடி அமாவாசை: அமாவாசை தினமான இன்று காகத்திற்கு பலரும் உணவு வைத்து அது சாப்பிட்ட பின்னரே வீட்டில் உள்ளவர்கள் சாப்பிட்டு விரதத்தை முடித்துள்ளனர். காகங்கள் சாதத்தை எடுத்துக்கொண்டால் முன்னோர்களின் ஆசி கிடைக்கிறது என்பது நம்பிக்கை. முன்னோர்கள் இறந்த தேதி, ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை வழிபாட்டில் காகத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

சனியின் வாகனம்: சனீஸ்வர பகவானின் வாகனமான காகம் எமலோகத்தின் வாசலில் இருக்குமென்றும், எமனின் தூதுவனான காகத்துக்கு சாதம் வைத்தால் நமது முன்னோர்கள் அமைதியடைந்து நமக்கு ஆசி வழங்குவார்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அமாவாசை தினத்தன்று காக்கைகளை வழிபடுவதால் சனிபகவானைத் திருப்தி படுத்தியதாகவும் கருதுகிறார்கள். காக்கை சனி பகவானின் வாகனம். காக்கைகளுக்கு உணவு அளிப்பது சனி பகவானுக்கு மகிழ்ச்சி தருமாம். எமதர்ம ராஜன் காக்கை வடிவம் எடுத்து மனிதர்கள் வாழுமிடம் சென்று அவர்களின் நிலையை அறிவாராம். அதனால் காக்கைக்கு உணவு அளித்தால் எமன் மகிழ்வாராம். அதனால் காக்கைக்கு உணவிடுவதால் இருவரும் ஒரே சமயத்தில் திருப்தி அடைவார்களாம்.
வீடு தேடி வரும் முன்னோர்கள்: காகங்கள் சுத்தமானவை தினசரி இரண்டு முறை குளிக்கும். தனது துணை இறந்தால் ஒழிய வேறு துணை தேடாது. தூய்மையான ஒழுக்கமான பறவை. கூடி சாப்பிடும் ஒற்றுமையின் சின்னம். தனது இனத்தை சேர்ந்த ஒரு காகம் இறந்தால் கூடி துக்கம் அனுஷ்டிக்கும் எனவேதான் பித்ருக்கள் வடிவத்தில் காகத்தை பார்க்கிறோம். மனிதர்கள் பசுக்களையும் நாகப்பாம்பினையும் வழிபடுகின்றோம். பசுவிற்கு அகத்திக்கீரை, பழம் கொடுக்கிறோம். அதேபோல பறவை இனங்களில் காகத்திற்கும் மனிதர்களுக்கும் தொடர்பு உள்ளது. முன்னோர்கள் வடிவத்தில் காகத்தை பார்ப்பதால்தான் உணவு கொடுக்கிறோம். காகங்கள் வீட்டிற்கு தேடி வந்து சாப்பிடுகின்றன.
பித்ரு தோஷம் நீங்கும்: நம்மால் தினசரியும் பத்து பேருக்கு அன்னதானம் கொடுக்க முடியாது. அப்படி அன்னதானம் செய்ய முடியாதவர்கள். தினசரியும் காகங்களுக்கு ஒரு கைப்பிடி உணவு வைத்துவிட்டு சாப்பிடுவதை பழக்கமாக வைத்துக்கொள்ளுங்கள். இதனால் முன்னோர்கள் மகிழ்ச்சியடைவார்கள். தோஷங்களும் நீங்கும். அமாவாசை திதி கொடுக்கும் நாட்களில் காகங்களுக்கு உணவு வைக்கும் போது அவை எடுக்காவிட்டால் நம்முடைய முன்னோர்களுக்கு நம் மீது ஏதோ கோபம் இருக்கிறது என்று அர்த்தம். எனவே அவர்களை முதலில் திருப்திபடுத்த வேண்டியது அவசியம்.

சனி தோஷம் நீங்கும்: ஏழரைச் சனி, அஷ்டமத்துச்சனி, அர்த்தாஷ்டமச் சனி நடப்பவர்கள் காகத்திற்கு அன்னம் வைத்து அதன் மூலம் நற்பலன்களைப் பெறலாம். காகத்திற்கு தினமும் காலையில் சாதம் வைக்கும்போது நிஜமாகவே பித்ருக்களின் ஆசி கிடைக்கிறது. அதுமட்டுமல்லாது செய்வினை கோளாறுகள் நம் வீட்டுப்பக்கமே எட்டிப்பார்க்காது தீராத கடன் தொல்லைகள் தீரும்.
குடும்பத்தில் ஒற்றுமை: காலை நேரத்தில் சாதம் வைத்து காகத்தை நாம் அழைக்கும் பொழுது தனியாக வருவதில்லை கூட்டமாக அழைத்து வந்து பகிர்ந்து சாப்பிடும். நம்முடைய முன்னோர்கள்தான் நம் வீட்டிற்கு காகங்கள் வடிவத்தில் வருகின்றனர். ஒற்றுமையாக கூடி வாழும் காக்கைகளுக்கு உணவு கொடுப்பதன் மூலம் குடும்ப ஒற்றுமை வேண்டும் நீடிக்கும் என்பது நம்பிக்கை. எனவே நம்முடைய முன்னோர்கள் வடிவத்தில் வீடு தேடி வரும் காகங்களுக்கு நாம் உணவு தர மறக்க கூடாது.












Click it and Unblock the Notifications