ஆடிப்பூரம் ஆண்டாளும் கள்ளழகரும்.. சூடிக்கொடுத்த சுடர்கொடிக்கு தேரோட்டம்.. சீர் கொடுத்தனுப்பிய அழகர்
மதுரை: ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் திருத்தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஏராளமான பக்தர்கள் கோவிந்தா முழக்கமிட்டு திருத்தேரினை வடம் பிடித்து இழுத்தனர். சித்திரை திருவிழாவில் அணிய மாலை கொடுத்தனுப்பும் ஆண்டாளுக்கு ஆடிப்பூரத்தில் உடுத்துவதற்கு பட்டுப்புடவையையும் மங்கள பொருட்களையும் பரிசாக அனுப்பி வைத்துள்ளார் கள்ளழகர்.
அழகருக்கும் ஆண்டாளுக்கும் தொட்டுத் தொடரும் ஒரு பந்தம் இருப்பது அனைவருக்கும் தெரியும். இன்று நேற்றல்ல பல நூற்றாண்டாகவே ஆண்டாள் நாச்சியாருக்கும் கள்ளழகருக்கும் ஒரு பாசமும் பிரியமும் உள்ளது. பாவை நோன்பு இருந்த ஆண்டாள், தனக்கும் ரங்கநாதருக்கும் திருமணம் செய்துவைத்தால், அக்காரவடிசலும் வெண்ணெயும் நைவேத்தியம் செய்து படைப்பதாக கள்ளழகர் பெருமாளிடம் வேண்டிக்கொள்கிறாள்.

ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீரங்கநாதருடன் ஆண்டாள் நாச்சியார் ஐக்கியமான பிறகு, கள்ளழகருக்கு அக்காரவடிசலும் வெண்ணெயும் சமர்ப்பிக்கமுடியாமல் போனது. பின்னாளில் வந்த எம்பெருமானாராகிய ராமானுஜர் இதுபற்றிக் கேள்விப்பட்டு, ஆண்டாள் வேண்டிக்கொண்டபடியே அக்காரவடிசலும் வெண்ணெயும் கள்ளழகருக்குச் சமர்ப்பித்தாரம்.
ஆண்டுதோறும் சித்திரை திருவிழாவின் போது வைகையில் கால்பதிக்க மதுரைக்கு வருவார் கள்ளழகர். அப்போது ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் தான் சூடி களைந்த மாலையை கொடுத்தனுப்புவார். அந்த மாலையையும், கிளி உள்ளிட்ட மங்கள பொருட்களையும் அணிந்து கொண்டுதான் தங்கக்குதிரை மீதேறி வைகையில் எழுந்தருளுவார் கள்ளழகர். அதற்கு பிரதிபலனாக ஆண்டுதோறும் ஆடிப்பூரம் நாளில் பிறந்தநாள் பரிசாக கள்ளழகர் பட்டுசேலை கொடுப்பார்.
இந்த ஆண்டு ஆடிப்பூரத் திருவிழா தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. திருத்தேரில் ரங்கமன்னாருடன் பவனி வரும் ஆண்டாள் நாச்சியாருக்கு பட்டு வஸ்திரம் மற்றும் சீர்வரிசை பொருட்கள் நேற்று காலையில் அழகர்கோவிலில் இருந்து வேன் மூலம் கொண்டு செல்லப்பட்டது. இக்கோவிலில் இருந்து, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு பட்டு வஸ்திரம் மற்றும் சீர்வரிசை பொருட்கள் கொண்டு செல்வது பல நூறு ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது.

ஆண்டாள் நாச்சியாருக்கு பிறந்தநாள் பரிசாக எத்தனையோ புதிய பட்டு வஸ்திரங்கள் காணிக்கையாக வந்தாலும் கள்ளழகர் கோவிலில் இருந்து கொண்டு வரப்படும் அழகர் அணிந்த பட்டு வஸ்திரம், மாலையை மட்டும் ஆண்டாளுக்கு அணிவிப்பதே இன்றளவும் பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
ஆடிப்பூரம் தினமான இன்றைய தினம் ஸ்ரீவில்லிபுத்தூர் திருத்தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஆடிப்பூரம் நாளில் அவதரித்த ஆண்டாள் நாச்சியாருக்காக அழகர்கோவிலில் இருந்து பெருமாள் உடுத்தி கலைந்த பட்டு, வஸ்திரம், பூமாலை, முக்கனிகள் உள்ளிட்ட பழ வகைகள், துளசி மாலை, அழகருக்கு பிடித்த தோசை, உலர் பழங்கள், பலகாரங்கள் உள்ளிட்டவைகளை பக்தர்கள் முன்னிலையில் பட்டர்களின் மந்திரங்களுடன் மேள தாளங்கள் முழங்க தீவட்டி பரிவாரகளுடன், சுந்தரவல்லி யானை முன்னே செல்ல இந்த சீர்வரிசை பொருட்கள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து அழகர் கோவிலில் இருந்து வேன் மூலம் ஆண்டாள் கோவிலுக்கு சீர்வரிசை பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த ஆண்டு ஆடிப்பூர திருவிழா கடந்த 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 18ஆம் தேதி 5 கருட சேவை நடைபெற்றது. 7ஆம் திருவிழாவையொட்டி இரவில் ஆண்டாள் மடியில் ரங்கமன்னார் சயன சேவை நடைபெற்றது. . இன்றைய தினம் தேரோட்டத்தை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு ஆண்டாளுக்கும் ரங்கமன்னாருக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. இதைத்தொடர்ந்து மேள தாளங்களுடன் கீழ ரத வீதிக்கு வந்து, தேரில் எழுந்தருளினார். அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, சேகர் பாபு ஆகியோர் தேரோட்டத்தை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். ஏராளமான பக்தர்கள் கோவிந்தா முழக்கமிட்டு திருத்தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.
தேரோட்டத்தையொட்டி நான்கு ரத வீதிகளிலும் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு தேர் செல்லும் பாதைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. தேரின் சக்கரங்கள் சீராக செல்லும் வகையில் திருச்சி பெல் நிறுவன அதிகாரிகள் குழு சரி செய்துள்ளது. மேலும் தேர் வேகமாக நகரும்போது பிரேக் பிடித்து நிறுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தேர் சக்கரங்கள் பதியாமல் இருக்க ரதவீதிகளில் பல இடங்களில் ராட்சத இரும்பு பிளேட்டுகள் போடப்பட்டுள்ளன. தேரின் பின்புறம் இருந்து தள்ளுவதற்கு வேளாண்மை துறை சார்பில் பொக்லைன் எந்திரங்களும் வரழைக்கப்பட்டுள்ளன. தேர் திருவிழாவையொட்டி பல்வேறு ஊர்களில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. மேலும் ஸ்ரீவில்லிபுத்தூர் முழுவதும் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications