மயிலை கபாலீஸ்வரர் பங்குனி திருவிழா கொடியேற்றம்.. 22ல் திருத்தேரோட்டம்.. 23ல் அறுபத்து மூவர் விழா
சென்னை: மயிலையே கயிலை என்று பக்தர்களால் போற்றப்படும் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கோலாகலமாக கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. காலை நேரத்தில் பஞ்ச மூர்த்திகள் எழுந்தருள கொடியேற்றம் நடைபெற்றது. கூடியிருந்த பக்தர்கள் கபாலீ.. நமச்சிவாய.. என்று பக்தி முழக்கமிட்டு வழிபட்டனர்.
மயிலாப்பூரில் சிவ ஆலயங்களுக்கு குறைவில்லை. அன்னை பார்வதி மயில் வடிவம் கொண்டு இறைவனை வழிபட்டது கபாலீஸ்வரர் ஆலயத்தில்தான். திருஞான சம்பந்தர் எலும்பாய் இருந்த அங்கம்பூம்பாவையை மீண்டும் பெண்ணாக மாற்றியது இந்த தலத்தில்தான். வாயிலார் நாயனார் வழிபட்டு முக்தி பெற்றதும் இதே மயிலைத் திருத்தலத்தில்தான். இத்தகைய பல்வேறு சிறப்புகள் பெற்ற அருள்மிகு கற்பகாம்பாள் உடனாய கபாலீஸ்வரருக்கு ஒவ்வொரு வருடமும் நடைபெறும் பங்குனிப் பெருவிழா தனிச்சிறப்பு வாய்ந்தது.

இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் 18ஆம் தேதி திங்கட்கிழமை அதிகாலை 6மணி அதிகாரநந்தி தரிசனம். எம்பிரான் திருஞான சம்பந்தர் பெருமான் ஞானப்பால் அருந்தும் ஐதீக விழா நடைபெறும்.
20ஆம் தேதி இரவு 5 ஆம் நாள் இரவு-வெள்ளி ரிஷபவாகன தரிசனம். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் 22ஆம் தேதி காலை 6 மணிக்கு தொடங்குகிறது. மார்ச் 23ஆம் தேதி காலை 10 மணிக்கு எம்பிரான் திருஞானசம்பந்தப் பெருமான் அபிஷேகம்,
அங்கம் பூம்பாவை உயிர்ப்பித்த ஐதீக விழா நடைபெறும். அன்றைய தினம் மதியம் 3.30 மணிக்கு வெள்ளி விமானத்தில் இறைவர் 63 நாயன்மார்களோடு திருக்காட்சி அளிக்கிறார்.

24ஆம் தேதி மாலை பிச்சாடனார் விழா நடைபெறும். 25ஆம் தேதி மாலை 6 மணி அன்னை கற்பகாம்பாள் மயில் வடிவில் புன்னை வனநாதரை பூசிக்கும் ஐதீகவிழாவும் திருக்கல்யாணமும நடைபெறும்.
போக்குவரத்து மாற்றம்: மயிலாப்பூரில் திருவிழா தொடங்கியுள்ளதை அடுத்து இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போக்குவரத்து காவல் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி பெருவிழா முடியும் வரை கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து கோவிலை நோக்கி வாகனங்களுக்கு அனுமதி இல்லை.
வரும் 18ஆம் தேதி அதிகார நந்தி திருவிழா அன்று காலை, 5 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரையிலும், 22ஆம் தேதி தேர் திருவிழா அன்றும், 23ஆம் தேதியன்று அறுபத்து மூவர் திருவிழா முடியும் வரையில் கீழ்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செயல்படுத்தப்படும்.
ராயப்பேட்டை நெடுஞ்சாலையிலிருந்து, லஸ் சந்திப்பு வழியாக அடையாறு செல்லும் வாகனங்கள், லஸ் சர்ச் சாலை, டி.சில்வா சாலை, பக்தவச்சலம் சாலை, ரங்கா சாலை, சி.பி.ராமசாமி சாலை, காமராஜர் சாலை, ஸ்ரீனிவாசா அவென்யூ, ஆர்.கே.மடம் சாலை வழியாக சென்று கிரீன்வேஸ் சந்திப்பை அடையலாம்.
அடையாறிலிருந்து லஸ் சந்திப்பு வழியாக, ராயப்பேட்டை செல்லும் வாகனங்கள் ஆர்.கே.மடம் சாலை, திருவேங்கடம் தெரு, வெங்கட கிருஷ்ணா சாலை, சிருங்கேரி மடம் சாலை, வாரன் சாலை, ரங்கா சாலை, கற்பகாம்பாள் நகர், பி.எஸ்.சிவசாமி சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக செல்லலாம்.
ஆழ்வார்பேட்டை சந்திப்பிலிருந்து லஸ் சந்திப்பு வழியாக செல்லும் வாகனங்கள், ஆலிவர் சாலை, பி.எஸ்.சிவசாமி சாலை சந்திப்பு, விவேகானந்தா கல்லுாரி, ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக செல்லலாம்.
அதிகார நந்தி, தேர் திருவிழா, அறுபத்து மூவர் திருவிழா நாட்களில் நான்கு மாட வீதிகள், ராமகிருஷ்ணா மடம் சாலை ஆகிய இடங்களில் எந்த வாகனமும் நிறுத்த அனுமதி கிடையாது. கிழக்கு அபிராமபுரத்திலிருந்து வரும் பக்தர்கள் தங்கள் வாகனங்களை சாய்பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரகாரம், திருமயிலை பறக்கும் ரயில்வே நிலையங்களில் நிறுத்தலாம்.
ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் இருந்து மயிலாப்பூர் குளம் நோக்கி வரும் பக்தர்கள் வாகனங்களை, லஸ் சர்ச் சாலை, காமதேனு கல்யாண மண்டபம் எதிரில் நிறுத்தி கொள்ளலாம். செயின்ட் மேரீஸ் சாலை மந்தைவெளி வீதியிலிருந்து வருவோர், பி.எஸ்.பள்ளி அருகே உள்ள கபாலீஸ்வரர் கோவில் மைதானத்தில் வாகனங்களை நிறுத்தலாம். காவல் துறை வாகனங்களை, சுந்தரேஸ்வரர் தெருவில் உள்ள ரசிக ரஞ்சனி சபா வளாகத்தில் நிறுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications