கோயிலிலோ வீட்டிலோ தேங்காயை குடுமி இல்லாமல் உடைக்கலாமா? சாஸ்திரம் சொல்வது என்ன?
சென்னை: கோயிலிலோ வீட்டிலோ தேங்காயை குடுமி இல்லாமல் உடைக்கலாமா என்பதை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் குடுமியுடன் தேங்காய் உடைத்தால் என்ன அர்த்தம் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
இதுகுறித்து தமிழ் குவோராவில் ரத்தினம் வடிவேல் சேகர் தனது பதிவில் கூறியிருப்பதாவது: சாமிக்கு உடைக்கும் தேங்காயில் குடுமி அவசியமா? நாம் கோவிலுக்கு சென்று இறைவனை தரிசிப்பதற்கு தேங்காய், பூ, பழம் முதலானவற்றைக் கொண்டு செல்வது வழக்கம்.

அவ்வாறு சாமிக்கு தேங்காய் உடைத்து வழிபாடு செய்யும்போது தேங்காயை குடுமியுடன் பயன்படுத்த வேண்டுமா? அல்லது குடுமியை அகற்றிவிட வேண்டுமா? என்ற சந்தேகம் பலரிடமும் இருக்கும்.
ஆனால் இதை யாரிடம் கேட்டுத் தெளிவு பெறுவது என்று பலருக்கும் தெரிவதில்லை. நம் முன்னோர்கள் செய்தார்கள் நாமும் செய்வோம் என்று தான் பலரும் செய்கின்றனர். தேங்காயை குடுமியுடன் பயன்படுத்துவதற்கு ஆன்மீக ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் காரணம் உண்டு. அது என்ன காரணம் என்பதை விரிவாக பார்க்கலாம்.
உடலின் ஓர் அங்கம்: பண்டைய காலங்களில் அரசர்கள், வணிகர்கள் மற்றும் வேதம் ஓதுபவர்கள் ஆகியோர் பரம்பரை பரம்பரையாக குடுமி வைத்துக் கொண்டிருந்தனர். அப்போதெல்லாம் குடுமியானது உடலின் ஒரு அங்கமாகவே பார்க்கப்பட்டது.
அதுபோல தேங்காயின் ஒரு உறுப்பாக வருவதுதான் குடுமி. அதை அகற்றி விட்டால் தேங்காய் ஊனமாகிவிடும். அதாவது இறைவனுக்கு படைக்கப்படும் பொருள் எதுவாக இருந்தாலும் அது ஊனம் அற்றதாக இருக்க வேண்டும். எனவே தான் தேங்காய் உடைக்கும்போது குடுமியுடன் இருக்க வேண்டும் என்று சொல்கின்றனர்.

உடைத்த பிறகு: உடைப்பதற்கு முன் தேங்காயில் உயிரோட்டம் உண்டு. உடைத்த பிறகு தேங்காய் உயிரற்றதாகிவிடுகிறது.
உடைத்த பிறகு தான் குடுமியை அகற்ற வேண்டும். மேலும் தேங்காய் உடைத்த பிறகு இறைவனுக்கு படைக்கும் பிரசாதமாக கருதப்படுவதால் அவை குடுமி அகற்றி சுத்தமாக படைக்கப்பட வேண்டும்.
இறைவனின் சிரசு: அதே போல கும்பாபிஷேகம், ஹோமங்கள் நடத்தும்போது கும்பம் வைத்து அதில் இறைவனை குடியிருத்துவர். குடமானது இறைவனின் திருமேனியாகவும், குடத்தின் மேல் வைக்கப்படும் தேங்காயானது இறைவனின் சிரம் அதாவது தலையாக கருதப்படுகிறது
தேங்காயில் இறைவனின் முகத்தை சந்தனத்தால் உருவாக்குவார்கள். அதற்கு தேங்காய் குடுமியுடன் இருக்க வேண்டியது அவசியம். எனவே தான் குடுமியுடன் கூடிய தேங்காயை கும்பத்தில் வைப்பது வழக்கம்.
அறிவியல் காரணம்: தேங்காயில் உள்ள குடுமியை எடுத்தால் அந்த தேங்காய் விரைவில் அழுகி பயனற்றதாகிவிடும். இதனால் நீண்ட காலம் வைத்து பயன்படுத்த முடியாது. இதனால் தான் தேங்காயில் உள்ள குடுமியை எடுக்க மாட்டார்கள். இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications