கறிவேப்பிலை கலக்குதே.. வீட்டில் மகிழ்ச்சி டபுளாகும்.. ஆமா, கறிவேப்பிலையை கைகளில் தரக் கூடாதாமே? ஓஹோ
சென்னை: வீட்டில் கடன் பிரச்சனை தீர்ந்து, தோஷங்கள் நீங்க வேண்டுமானால், சிலவகையான செடிகளை வளர்க்கலாம்.. அந்தவகையில், கறிவேப்பிலை செடியும் ஒன்றாகும். மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படும் கறிவேப்பிலை தரும் வாஸ்து பலன்கள் என்னென்ன தெரியுமா?
குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும், ஆரோக்கியமும் நிலைத்திருக்க வேண்டுமானால், பல்வேறு பரிகாரங்களையும், வழிபாட்டு முறைகளையும் பின்பற்ற வேண்டியிருக்கிறது. அதேபோல தெய்வீக பலன் கொண்ட செடிகளையும், வாஸ்துப்படி வீடுகளில் வைப்பதால், பாசிடிவ் எண்ணங்கள் பரவுகின்றன.

கற்பூரவல்லி: உதாரணத்துக்கு சிறிய தொட்டியில் கற்பூரவல்லி செடியை வைத்து வளர்க்கும்போது, வீட்டில் எதிர்மறை சக்திகள் இருந்தாலும் வெளியேற்றிவிடும்.. குடும்பத்தில் தேவையற்ற செலவுகளை குறைத்து, வருமானத்தை பெருக்கக்கூடிய சக்தி இந்த கற்பூரவல்லிக்கு உண்டு. அதேபோல, கடன் பிரச்சினை தீர மிகச்சிறந்த செடி என்று வாஸ்து சாஸ்திரத்திலும் சொல்லப்பட்டுள்ளது.
எனவே, கற்பூரவல்லி செடிக்கு தினமும் தண்ணீர் ஊற்றும்போது, நம்முடைய கடன் பிரச்சினையும் தீர்ந்து, வருமானம் பெருக வேண்டும் என்று மனதார வேண்டிக்கொள்ள வேண்டுமாம்.
பாரிஜாதம் மலர்கள்: அதேபோல, ஜாதி முல்லை, மல்லிகை, தாமரை, தும்பை, பாரிஜாதம், சாமந்தி போன்ற விநாயகர் மலர்களை வீட்டின் எல்லைக்குள் வளர்க்கலாம்.. இதனால் மனை தோஷங்கள் சரியாகும்..
அந்தவகையில் கறிவேப்பிலை செடிகளை வீட்டில் வளர்த்தால் வீட்டின் செழிப்பை குறைத்துவிடுமாம். அதேபோல, பப்பாளி செடியையும் தனியாக நட்டு வைத்தால் குடும்பத்தில் சிக்கல்கள் வந்துவிடும். எனவே, எப்போதுமே கறிவேப்பிலை செடிகளை தனியாக நட்டு வைக்காமல், பப்பாளி செடிகளையும் தனியாக வைக்காமல், இரண்டையும் ஒன்றாக சேர்த்து நட்டு வைக்க வேண்டுமாம். கறிவேப்பிலை செடியுடன் பப்பாளி செடி சேர்த்து வளர்த்தால் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும்.
பப்பாளி மரங்கள்: காரணம், பப்பாளி மரம் பெண்களையும், கறிவேப்பிலை ஆண்களையும் குறிக்கக்கூடியதாம்.. எனவே, இந்த இரண்டு மரங்களையும் வீட்டில் நன்றாக கவனித்து வளர்க்க வேண்டும்..
அதிலும் வாஸ்து சாஸ்திரத்தின்படி, கறிவேப்பிலை செடியை வைக்க சிறந்த திசையாக கருதப்படுவது சந்திரனுக்கு உரிய திசையான மேற்கு திசை தானாம்.. இந்த மேற்கு திசையில் கறிவேப்பிலை செடியை வளர்த்து வந்தால், அது குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்றும், வீட்டிலுள்ள பிரச்சனைகளை குறைத்து, வீடு மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவும் என்றும் கூறப்படுகிறது.
எதிர்மறை ஆற்றல்: கறிவேப்பிலைக்கு எதிர்மறை சக்திகளை ஈர்க்கும் ஆற்றல் அதிகமாக இருக்கிறது. இது பலருக்கும் எதிர்மறை ஆற்றலையே வழங்கக்கூடியது.. எனவே, எப்போதுமே கறிவேப்பிலையை ஒருவருடைய கையில் நேரடியாக வழங்கக்கூடாதாம். அப்படி வழங்கினால் அவர்களுக்கு எதிர்மறை ஆற்றல் கடத்தப்படும் என்பார்கள். அதனால்தான், வீட்டின் முற்றத்தில் கறிவேப்பிலை மரம் வளர்ப்பதையும் முன்னோர்கள் தடை செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications