திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் .. தரிசனத்திற்கு 2 நாட்கள் காத்திருப்பு..விஐபி தரிசனம் ரத்து
திருப்பதி: மூன்று நாட்கள் தொடர் விடுமுறை காரணமலை திருமலை திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. 48 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 21ஆம் தேதி வரை விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமைலையான் கோவிலுக்கு தினசரியும் 50 ஆயிரம் முதல் 75 ஆயிரம் பக்தர்கள் வரை சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். விடுமுறை நாட்களில் லட்சக்கணக்கானோர் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.
தொடர் விடுமுறை காரணமாக திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இலவச தரிசனத்திற்காக வைகுண்டம் காம்ப்ளக்ஸில் உள்ள 31 அறைகளும் நிரம்பி ராம்பகிஜா பக்தர்கள் ஓய்வறை வரை அமைக்கப்பட்ட வரிசையில் 3 கிலோ மீட்டருக்கு மேல் அமைக்கப்பட்டுள்ள வரிசையில் பக்தர்கள் காத்திருப்பதால் தரிசனத்திற்கு 48 மணி நேரம் ஆகும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காத்திருக்கும் பக்தர்கள்
திருப்பதி மலையில் உள்ள வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்தில் இடம் கிடைக்காத பக்தர்கள் சுமார் ஐந்து கிலோ மீட்டர் நீள வரிசையில் வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்திற்கு வெளியே சாமி தரிசனத்திற்காக காத்திருக்கின்றனர். இதனால், இலவச தரிசனத்திற்காக இரண்டு நாட்கள் வரை வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பல மணி நேரம் காத்திருப்பு
300 ரூபாய் டிக்கெட் ஆன்லைன் மூலம் பெற்ற பக்தர்கள் தரிசனத்திற்கு நான்கு மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருப்பதால் ஓய்வறைகளும் கிடைக்காமல் பக்தர்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். அறைகள் பெறுவதற்காக ஆதார் கொண்டு பதிவு செய்த பக்தர்களுக்கு 5 முதல் 8 மணி நேரம் வரை காத்திருந்தாலும் அறைகள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அறைகள் கிடைக்காத பக்தர்கள் கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் தங்கினர்.

உண்டியல் வசூல்
நேற்று ஒரே நாளில் 92,328 பக்தர்கள் ஏழுமலையானை வழிபட்டனர். அவர்கள் ஏழுமலையானுக்கு 4 கோடி 36 ரூபாயை காணிக்கையாக செலுத்தி உள்ளனர். நேற்று ஏழுமலையானுக்கு தலைமுடி சமர்ப்பித்து மொட்டை போட்டு கொண்ட பக்தர்களின் எண்ணிக்கை 52,969 ஆகும்.

பக்தர்களுக்கு உணவு
இன்றும் அதே நிலை தொடரும் நிலையில் இலவச தரிசனத்திற்காக வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்திற்கு வெளியே சுமார் 4 கிலோ மீட்டர் நீள வரிசையில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக காத்திருக்கின்றனர். வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு உணவு, குடிநீர், பால், டீ ,காபி ஆகிய அடிப்படை வசதிகளை தேவஸ்தான நிர்வாகம் செய்து கொடுத்துள்ளது.

விஐபி தரிசனம் ரத்து
திருப்பதி மலையில் திரும்பிய பக்கமெல்லாம் மனித தலைகளாகவே காணப்படுகின்றன. ஏழுமலையான் கோவிலில் வரும் 19ஆம் தேதி கோகுலாஷ்டமி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதை முன்னிட்டு விரைவாக ஏழுமலையான வழிபட வசதியாக இம்மாதம் 21ஆம் தேதி வரை பரிந்துரை கடிதங்கள் அடிப்படையிலான விஐபி தரிசனத்தை தேவஸ்தான நிர்வாகம் ரத்து செய்துள்ளது.












Click it and Unblock the Notifications