அறுபடை வீடுகளுக்கு இலவச ஆன்மீக சுற்றுலா... தமிழக அரசு அதிரடி.. உற்சாகத்தில் முருக பக்தர்கள்
சென்னை: முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுக்கும் முருக பக்தர்களை இலவச ஆன்மீக சுற்றுலா அழைத்து செல்ல இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது. ஆன்மீக சுற்றுலா செல்ல விரும்பும் பக்தர்கள் இன்று முதல் விண்ணப்பம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் சார்பில், தமிழகத்தில் உள்ள முருகனின் அறுபடை வீடுகளுக்கும் மூத்த குடிமக்களை இலவச ஆன்மிக சுற்றுலா அழைத்து செல்ல உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கோவில்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற 2,646 அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பொங்கல் கொடை வழங்கும் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதன் தொடக்க விழா இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் நேற்று நடந்த நிலையில், இந்த விழாவில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு இத்திட்டத்தினை தொடங்கி வைத்து 10 பேருக்கு தலா ரூ1000 க்கான காசோலைகளை வழங்கினார்.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, தமிழ்நாடு முதல்வர் அரசின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தாலும் இந்து சமய அறநிலைத்துறை நிகழ்ச்சியில் இதுவரை 58 நிகழ்ச்சியில் நேரடியாக கலந்து கொண்டு இருக்கிறார், தமிழ்நாடு வரலாற்றில் அதிக முறை இந்து சமய அறநிலையத்துறை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வராக நமது முதல்வர் உள்ளார்.
முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி அறுபடை வீடுகளாக உள்ள திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய திருத்தலங்களுக்கு 200 பக்தர்களை ஆண்டிற்கு 5 முறை அதாவது 1,000 பக்தர்களை கட்டணமில்லாமல் ஆன்மிக சுற்றுலா அழைத்து செல்ல உள்ளோம்.
இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு விடுத்த செய்திக்குறிப்பில் 'முருக பெருமான் அருள்பாலிக்கும் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை திருத்தலங்களுக்கு மூத்த குடிமக்கள், ஒரே தடவையில் சென்று தரிசிக்க சிரமப்படுகின்றனர்.
இவர்களின் குறையை போக்கும் வகையில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுக்கும் கட்டணம் இல்லாமல் அரசு சார்பில் மூத்த குடிமக்கள் அழைத்து செல்லப்படுகின்றனர். 6 கோயில்களுக்கும் கட்டணம் இல்லாமல் 60 வயது முதல் 70 வயதிற்கு உட்பட்ட 200 பேர் என ஆண்டுக்கு 5 முறை அழைத்து செல்லப்படுவர்.
வருடத்திற்கு 1,000 பக்தர்கள் என்ற கணக்கில் முதியவர்களை அழைத்துச்சென்று தரிசனம் செய்து வைக்கப்படும். இந்த முயற்சி இந்து சமய அறநிலையத் துறையால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி முதற்கட்டமாக அறுபடை வீடு ஆன்மிக சுற்றுப்பயணம் ஜனவரி 28ம் தேதி தொடங்க இருக்கிறது.
இதற்கான விண்ணப்பங்களை இன்று முதல் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தகுதி உடைய 200 விண்ணப்பதாரர்கள் முதற்கட்டமாக ஆன்மிக சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். மீதமுள்ள தகுதி உடைய விண்ணப்பதாரர்கள் அடுத்தடுத்த ஆன்மிக பயணங்களில் அழைத்துச் செல்லப்படுவர் என அமைச்சர் கூறியுள்ளார்.
திமுக அரசு கடந்த 2021ஆம் ஆண்டு பொறுப்பேற்றதில் இருந்து ஆயிரக்கணக்கான கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. நவராத்திரி கொலு திருவிழா, மகாசிவராத்திரி விழா என பல விழாக்கள் அறநிலையத்துறை சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தற்போது இலவச ஆன்மீக சுற்றுலாவிற்கு அழைத்து சென்று முருக பக்தர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் அமைச்சர் சேகர்பாபு.
ராமேஸ்வரத்திலிருந்து காசிக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக 200 பேர் கட்டணம் இல்லாமல் முழுமையாக 50 லட்சம் ரூபாய் செலவில் அவர்களுக்கு சிறப்பு தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது, இந்தியாவில் முதல்முறையாக அரசின் சார்பில் மானியமாக துவங்கப்பட்ட திட்டம் இந்த திட்டம்.
இந்த ஆண்டு ரூபாய் 75 லட்சம் செலவில் அரசு முழுமையாக மானியம் வழங்கி 300 நபர்கள் ராமேஸ்வரம் அழைத்து செல்லப்பட உள்ளார்கள். மானசரோவர், முக்தினாத் கோவில்களுக்கு செல்லக்கூடிய பக்தர்களுக்கான மானியம் தொடர்ந்து உயர்த்தப்பட்டு இந்த ஆண்டும் யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு தமிழ்நாடு அரசு உறுதுணையாக இருக்கும் என்றும் கூறியுள்ளார் சேகர்பாபு.












Click it and Unblock the Notifications