Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பச்சை பட்டுடுத்தி! "தங்க குதிரையில்" வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்! விண்ணை பிளந்த கோவிந்தா கோஷம்

Subscribe to Oneindia Tamil

மதுரை: சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் பச்சை பட்டுடுத்தி லட்சக்கணக்கான பக்தர்கள் புடைச்சூழ இறங்கினார். அப்போது கோவிந்தா, கோவிந்தா எனும் கோஷம் விண்ணை பிளந்தது.

உலக புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா ஏப்ரல் 12 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 23 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விழா 10 நாட்களுக்கு கோலாகலமாக நடைபெறும்.

Kallazhagar enters into Vaigai river for Madurai Chiththirai Festival

திருவிழா தொடங்கிய நாள் முதல் தினமும் காலை மற்றும் இரவில் மாசி வீதிகளில் மீனாட்சி அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரர் கற்பக விருட்சம், சிம்மம், பூத, அன்ன, கைலாச பர்வதம், காமதேனு, தங்கப்பல்லக்கு, தங்கக் குதிரை, ரிஷப, நந்திகேஸ்வரர், யாளி, வெள்ளி சிம்மாசனம் ஆகிய வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் கடந்த 19ஆம் தேதி நடந்தது. அதன் தொடர்ச்சியாக பட்டத்து அரசியாக மீனாட்சி சென்று போரில் தேவர்களை வென்று இறுதியில் சுந்தரேஸ்வரரிடம் போர்புரியும் திக்விஜயம் கடந்த 20ஆம் தேதி இரவு விமரிசையாக நடந்தது.

சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கடந்த 21 ஆம் தேதி நடந்தது. இதையொட்டி அன்றைய தினம் காலை 4 மணி அளவில் சுந்தரேஸ்வரரும், மீனாட்சி அம்மனும் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி 4 சித்திரை வீதிகளில் வலம் வந்தனர்.

கோயிலுக்குள் உள்ள மேற்கு ஆடி வீதியில் உள்ள திருக்கல்யாண மேடை ரூ 30 லட்சம் செலவில் 10 டன் நறுமண மலர்கள், வெட்டிவேர் மற்றும் பல்வேறு வகையான வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இவர்களது திருக்கல்யாணம் வேத மந்திர முழக்கங்களுடன் நடந்தது.

மணப்பெண்ணான மீனாட்சி அம்மன் பச்சை பட்டு உடுத்தி, முத்துக் கொண்டை, தங்க கிரீடம், மாணிக்க மூக்குத்தி, தங்க காசு மாலை, பச்சை கல் பதக்கம் உள்ளிட்ட விலை உயர்ந்த ஆபரணங்கள் அணிந்திருந்தார். சுவாமி சுந்தரேஸ்வரர் பட்டு வஸ்திரம், பவளங்கள் பதித்த கிரீடம், வைரம் பதித்த மாலைகள் அணிந்திருந்தார்.

இதைத் தொடர்ந்து நேற்றைய தினம் மதுரை மீனாட்சி திருத்தேரோட்டம் நடைபெற்றது. மீனாட்சியும் சுந்தரேஸ்வரரும் தனித்தனி தேரில் ஆடி ஆடி மாட வீதிகளை வலம் வந்தனர். இந்த நிலையில் நேற்றைய தினம் அழகர்மலையில் இருந்து கள்ளழகர் மதுரைக்கு கண்டாங்கி பட்டு உடுத்தி வந்தார். மதுரையில் மூன்று மாவடியில் நேற்று காலை 6 மணிக்கு எதிர்சேவை நிகழ்ச்சி நடந்தது.

நேற்று இரவு தல்லாகுளத்தில் உள்ள பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் அழகர் தங்கியிருந்தார். அங்கு அவர் திருமஞ்சனம் கொண்டார். அவருக்கு சிறப்பு ஆராதனைகள் நடந்தன. இன்று காலை தங்க குதிரை வாகனத்தில் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து மக்களுக்கு அருள்பாலித்தார்.

இதைத் தொடர்ந்து தங்கக் குதிரை வாகனத்தில் தங்க குதிரையில் அமர்ந்தவாறே ஆயிரம் பொன் சப்பரத்தில் அதிகாலை 2.30 மணி அளவில் எழுந்தருளினார். இதைத் தொடர்ந்து 3 மணிக்கு வைகை ஆற்றை நோக்கி புறப்பட்டார். முன்னதாக வண்டியூர் வீரராகவப் பெருமாள் முன் கூட்டியே வந்திருந்து கள்ளழகரை வரவேற்க எழுந்தருளியுள்ளார்.

இதைத் தொடர்ந்து சித்ரா பவுர்ணமி தினத்தின் முக்கிய நிகழ்வான வைகை ஆற்றில் தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் இறங்கும் வைபவம் இன்று காலை 6.04 மணிக்கு நடைபெற்றது. இந்த கண் கொள்ளா காட்சியை காண வைகை ஆற்றை சுற்றி லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

கள்ளழகர் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார். இதனால் நாட்டில் மழை பெய்து விவசாயம் செழிக்கும் என்பது ஐதீகம். எனவே கள்ளழகர் அணியும் பட்டின் நிறத்தை வைத்தே நம் நாட்டின் வளர்ச்சி எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் போது அவர் மீது பக்தர்கள் தண்ணீர் பீய்ச்சி அடித்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்துவர். கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

கள்ளழகர் வைகையில் இறங்கியதும் இன்று பகல் 12 மணிக்கு ராமராயர் மண்டபம் செல்கிறார். அங்கு பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்து நேர்த்திக் கடன் செலுத்துவர். அங்கிருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு வண்டியூர் வீரராகவ பெருமாள் கோயிலில் எழுந்தருளினார். இதைத் தொடர்ந்து நாளை அதிகாலை 6 மணிக்கு ஏகாந்த சேவையும் பக்தி உலாவும் நடக்கின்றன.

காலை 9 மணிக்கு திருமஞ்சனமாகி அங்கிருந்து சேஷ வாகனத்தில் புறப்பட்டு பகல் 11 மணிக்கு வைகை ஆற்றில் உள்ள தேனூர் மண்டபத்தில் எழுந்தருளினார். பிறகு மாலை 3 மணிக்கு கருட வாகனத்தில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கிறார். பிற்பகல் 3.30 மணிக்கு அனுமன் கோயிலில் அங்கப்பிரதட்சணம் நடக்க உள்ளது.

Kallazhagar enters into Vaigai river for Madurai Chiththirai Festival

அங்கிருந்து புறப்பட்டு இரவு 10 மணிக்கு ராமராயர் மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கு இரவு 12 மணி முதல் விடிய விடிய தசாவதார காட்சி நடக்கிறது. அப்போது அழகர் தசாவதாரங்களில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். இதைத் தொடர்ந்து 25-ந்தேதி காலை 6 மணிக்கு மோகினி அவதார கோலத்துடன் உலா வருகிறார். அதன்பின் பகல் 12 மணிக்கு அனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க திருக்கோலத்துடன் எழுந்தருள்கிறார்.

இரவு 11 மணிக்கு தல்லாகுளத்தில் உள்ள ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் திருமஞ்சனமாகிறார். நள்ளிரவுக்கு பின் 2.30 மணிக்கு கள்ளழகர் பூப்பல்லக்கில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். 26-ந்தேதி காலை 8.50 மணிக்கு கருப்பணசுவாமி கோவிலில் பிரியாவிடை பெற்று வையாழியானவுடன் அழகர்மலைக்கு புறப்படுகிறார். அன்று இரவு அப்பன்திருப்பதியில் திருவிழா நடக்கிறது. தொடர்ந்து 27-ந்தேதி காலை 10.30 மணிக்கு மேல் அழகர்மலையில் இருப்பிடத்தை அடைகிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+