Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பட்டத்தரசிக்கு பட்டாபிஷேகம்..மதுரையில் நாளைமுதல் மீனாட்சி ஆட்சி..மகிழ்ச்சி வெள்ளத்தில்மக்கள் கூட்டம்

Subscribe to Oneindia Tamil

மதுரை: பட்டத்தரசி மீனாட்சிக்கு நாளை பட்டாபிஷேகம் நடக்கிறது. மதுரையில் மீனாட்சி ஆட்சி தொடங்க உள்ளதால் மக்களின் மனங்களில் மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடுகிறது. அம்மை அப்பனாக வீதி உலா வரும் மீனாட்சி சுந்தரேஸ்வரரை காண தினம் தினம் மக்கள் மாசி வீதிகளில் அலைகடலென திரண்டு வருகின்றனர். மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை காணவும் திருத்தேரோட்டத்தை பார்க்கவும் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மதுரையில் சித்திரை முதல் ஆவணி வரை நான்கு மாதங்கள் அம்மன் ஆட்சி நடைபெறுவதாக ஐதீகம். விழாவின் ஒன்பதாம் நாளான நாளை திக் விஜயம் நடக்கிறது. மீனாட்சி அம்மன் தடாதகைப் பிராட்டியாக மதுரையில் அவதரித்து ஆட்சி புரிகையில் மேற்கொண்ட திக் விஜய புராணத்தை குறிக்கும் வகையில் இந்நிகழ்ச்சி நடக்கிறது.

சித்திரை மாதத்தில் மதுரையில் மீனாட்சி ஆட்சி தொடங்கி விடும். முதன்முதலாக ஆணுக்கு நிகராக, பெண்ணுக்கு சமஉரிமை கொடுக்கப்பட்டது மதுரை நகரில் தான். உங்கள் வீட்டில் மீனாட்சியா? அல்லது சிதம்பரமா?' எனக் கேட்பதும் உண்டு. மதுரையில் இன்றும் வழிபாட்டில் மீனாட்சிக்கு முக்கியத்துவம் அளிப்பதால் பக்தர்கள் முதலில் மீனாட்சியை தரிசித்துவிட்டு, பின்னரே சுந்தரேசுவரரை வழிபடுகின்றனர்.

Madurai Chithirai thiruvizha 2023: Meenakshi Pattabhisegam on Tomorrow

முன்பெல்லாம் மாசி முதல் ஆடி வரை ஆறு மாதம் மீனாட்சி அம்மனின் ஆட்சி நடைபெறும். ஆவணியில் ஆட்சி பொறுப்பேற்கும் சுந்தரரேஸ்வரர் மாசி மாதம் வரை ஆட்சி நடத்துவார். திருமலை நாயக்கர் ஆட்சிக் காலத்தில் இருந்துதான் மாசித் திருவிழா சித்திரைக்கு மாற்றப்பட்டு, அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா அத்துடன் இணைக்கப்பட்டது. அதனால் தான், மீனாட்சி பட்டாபிஷேகம் தற்போது சித்திரையில் நடக்கிறது. நான்கு மாதங்கள் மட்டுமே அம்பாள் ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறாள்.

சித்திரை திருவிழா கடந்த ஞாயிறு முதல் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினந்தோறும் மாசி வீதிகளில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் நகர்வலம் வருவதை காண மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. எட்டாம் நாளான நாளைய தினம் காலை ஊடல் லீலை நடக்கிறது. இரவு அம்மன் சன்னதி ஆறுகால் பீடத்தில் மீனாட்சியம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெறுகிறது.

மீனாட்சி அம்மனுக்கு பட்டத்து அரசியாக முடி சூட்டுவதற்காக ராயர் கிரீடம் எனப்படும் வைரக் கிரீடம் அனுக்ஞை விநாயகர் சன்னதியில் இருந்து கொண்டுவரப்படும். கூடவே செங்கோலும் கொண்டு வரப்படும். அம்மனுக்கு பரிவட்டம் கட்டி, கிரீடம் சூட்டப்பட்டு கையில் செங்கோல் தரப்படும். பின்னர் மீனாட்சிக்கு உரிய வேப்பம்பூ மாலையும் மகிழம்பூ மாலையும் அணிவிக்கப்படும்.

இதனைத் தொடர்ந்து மீனாட்சி அம்மன் பட்டத்து அரசியாக வெள்ளி சிம்மாசனத்தில் அமர்ந்து நான்கு மாசி வீதிகளிலும் பவனி வந்து காட்சி தருவார். அவருடன் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், வெள்ளி சிம்மாசனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். பவனி வரும் பட்டத்தரசியைக் காண விளக்குத்தூண், தெற்குமாசி வீதி, மேலமாசி, வடக்கு மாசி வீதிகளில் மக்கள் கூட்டம் எங்கும் குவிந்திருக்கும்.

ஒன்பதாம் நாளான திங்கட்கிழமை அம்மனின் திக்விஜயம் நடைபெறும். இந்திர விமானத்தில் ஊர்வலம் வரும் அம்மன் அஷ்ட திக்பாலர்களுடன் சண்டை போடுவது போல் நடக்கும் நிகழ்ச்சி சுவராஸ்யமானது.

சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி அம்மனுக்கு சுந்தரரேஸ்வரருடன் திருக்கல்யாணம். இந்த ஆண்டு மே 2ஆம் தேதி நடக்கிறது. புத்தம் புது புடவை கட்டி கழுத்து நிறைய நகை போட்டு தங்கள் வீட்டு திருமணத்திற்கு கிளம்புவது போல பெண்கள் கோவிலுக்கு வந்து புது தாலி மாற்றிக்கொள்வார்கள்.

திருக்கல்யாணத்தன்று மாலை பூப்பல்லக்கில் பவனி வரும் அம்மை அப்பனை காண்பதற்காகவே மாலை முதலே வீதிகளில் கூட்டம் குவியும். முதலில் யானை, ஒட்டகம் என்று ஒவ்வொன்றாகப் பவனி வர, விநாயகர், முருகனைத் தொடர்ந்து மல்லிகை, ரோஜா, மனோரஞ்சிதம், பன்னீர்ப் பூக்கள் வாசம் வர மணக்க தம்பதி சமேதரராய் மீனாட்சி சொக்கநாதர் பூப்பல்லகில் எழுந்தருளுவார்கள்.

மே 3ஆம் தேதியன்று மாசி வீதிகளில் தேரோட்டம் நடக்கிறது. அம்மன் திருத்தேரில் ஊர்வலம் வருவதைக் காண மதுரை சுற்றுவட்டார கிராம மக்கள் மாட வீதிகளில் குவிந்திருப்பார்கள். அதிர்வேட்டு சத்தம் விண்ணை பிளக்க, செண்டை மேளச் சத்தத்துடன், நாதஸ்வரம் மேளதாளம் முழங்க ஆடி அசைந்து வரும் அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்ட தேரினை பக்தி பரவசத்துடன் இழுத்துச் செல்வார்கள். தம்பதி சமேதரராக தேரில் வலம் வரும் காட்சியை பார்த்து விட்டு நீர் மோர், பானகம், அன்னதானம் சாப்பிட்டு திருப்தியாக தங்களின் வீடு திரும்புவார்கள்.

அதே நாளில் தான் கள்ளழகரும் அழகர் மலையில் இருந்து அதிர்வேட்டு முழங்க மதுரைக்கு கிளம்புவார். இனி வரும் நாட்கள் எல்லாம் மதுரையில் வேட்டுச்சத்தம் விண்ணைப்பிளக்கும் மல்லிகையின் வாசம் வீதியெங்கும் வீசும். பட்டாபிஷேகம், திருக்கல்யாணம், தேரோட்டம் பார்க்க ரெடியாகிட்டீங்களா?

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+