மகாளய அமாவாசை.. புரட்டாசி அமாவாசைக்கு இத்தனை சிறப்புகளா?.. எம பயம் நீக்கும் தர்ப்பணம்
சென்னை: நம்முடன் வாழும் நம் பெற்றோர்களுக்கு குழந்தைகளுக்கு ஆற்றவேண்டிய கடமைகள் இருப்பதுபோல, இறந்தவர்களுக்கும் நாம் ஆற்றவேண்டிய கடமைகள் உள்ளன. இறந்தபின் ஒரு குறிப்பிட்ட காலம்வரை நம் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுப்பது அவசியம். மகாளய அமாவாசை தினமான புரட்டாசி அமாவாசை அன்று பிதுர்பூஜை செய்தால் முன்னோர்களின் ஆசி கிடைப்பதுடன் எமனுக்கும் மகிழ்ச்சி ஏற்படும். இறுதி காலத்தில் எம பயம் இருக்காது எனப் புராணங்கள் கூறுகின்றன.
பெற்ற தந்தையாக மகனான மகளாக நம்முடன் வாழும் பெற்றோர்களுக்கு ஆற்றவேண்டிய கடமைகள் இருப்பதுபோல, இறந்து போன நம் முன்னோர்களுக்கு நாம் ஆற்றவேண்டிய கடமைகள் உள்ளன. இறந்தபின் ஒரு குறிப்பிட்ட காலம்வரை நம் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுப்பது அவசியம். அவரவர்கள் தங்களின் குடும்ப வழக்கப்படி வீட்டிலோ அல்லது நதிக்கரைகளுக்கோ சமுத்திரக் கரைகளுக்கோ சென்று முன்னோருக்குச் செய்யவேண்டிய வழிபாட்டினை மேற்கொள்ளலாம். குறைந்தபட்சம் எள்ளும் தண்ணீரும் விட்டு வேண்டிக்கொள்வது அவசியம்.

சூரியன் கன்னி ராசிக்கு செல்லும் புரட்டாசி மாதம், எமதர்மராஜன் நமது முன்னோர்களை பூமிக்கு அனுப்புவதாக ஐதீகம். அந்த நேரத்தில் அவர்களை நாம் வணங்கினால் மனமகிழ்சியோடு ஆசீர்வாதம் செய்வார்கள். பவுர்ணமி முடிந்து பிரதமை முதல் புரட்டாசி அமாவாசை வரையிலான 15 நாட்கள் மகாளய பட்சம் எனப்படுகிறது. இந்த நாட்களில் நம் முன்னோர்கள் பூமிக்கு வந்து நாம் கொடுக்கும் தானங்களை ஏற்றுக்கொள்வதாக ஐதீகம்.
முன்னோர்கள் இறந்த தேதி, ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை வழிபாட்டில் காகத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அன்று காகத்துக்கு சாதம் வைத்து அது சாப்பிட்ட பின்னரே வீட்டில் உள்ளவர்கள் உணவருந்தும் பழக்கமும் நடைமுறையில் உள்ளது. காகத்திற்கு தினமும் காலையில் சாதம் வைக்கும்போது நிஜமாகவே பித்ருக்களின் ஆசி கிடைக்கிறது. அதுமட்டுமல்லாது செய்வினை கோளாறுகள் நம் வீட்டுப்பக்கமே எட்டிப்பார்க்காது தீராத கடன் தொல்லைகள் தீரும். எமனும் சனியும் சகோதரர்கள் ஆவார்கள் அதனால் காக்கைக்கு உணவிடுவதால் இருவரும் ஒரே சமயத்தில் திருப்தி அடைவார்களாம். அமாவாசை தினத்தன்று காக்கைகளை வழிபடுவதால் சனிபகவானைத் திருப்தி படுத்தியதாகவும் கருதுகிறார்கள்.
மஹாளய பட்ச காலத்தில் விரதம் இருந்தவர்கள் அனைவரும் அமாவாசை தினத்தன்று வீட்டில் உணவு சமைத்து முன்னோர்களுக்கு படையலிட்டு காகத்திற்கு வைத்து விட்டு சாப்பிடவேண்டும். சனீஸ்வர பகவானின் வாகனமான காகம் எமலோகத்தின் வாசலில் இருக்குமென்றும், எமனின் தூதுவனான காகத்துக்கு சாதம் வைத்தால் நமது முன்னோர்கள் அமைதியடைந்து நமக்கு ஆசி வழங்குவார்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. எனவேதான் அமாவாசை நாளில் நாம் காகங்களுக்கு உணவு அளிப்பதன் மூலம் முன்னோர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.
புரட்டாசி மாதம் எமனின் கோரைப்பற்கள் வெளியே தெரியும் மாதமாக இருப்பதால் புரட்டாசி அமாவாசை அன்று பிதுர்பூஜை செய்தால் முன்னோர்களின் ஆசி கிடைப்பதுடன் எமனுக்கும் மகிழ்ச்சி ஏற்படும். இறுதி காலத்தில் எம பயம் இருக்காது எனப் புராணங்கள் கூறுகின்றன.
மகாளய அமாவாசை நாட்களில் புனித நீர் நிலைகளுக்கு செல்ல முடியாதவர்கள் தங்கள் இல்லத்திலேயே அந்தணர்களை வரவழைத்து பித்ரு தர்ப்பணம் செய்யக் சொல்லி பலன் பெறலாம். அன்னதானம், உடை தானம், பசு தானம் ஆகியவை மிகவும் போற்றப்படுகின்றன. இதில் உங்களுக்கு எந்த தானத்தை செய்ய முடியுமோ அந்த தானத்தை செய்யுங்கள்.












Click it and Unblock the Notifications